பொதுமக்களுக்கான சேவைகளை தாமதமின்றி வழங்கக் கூடிய வகையில் நன்மதிப்புமிக்க அரச சேவையொன்றைக் கட்டியெழுப்புவதற்காக அர்ப்பணிப்புடன் பணியாற்றுமாறு பன்னோக்கு அபிவிருத்தி உதவியாளர்களுக்கான நிரந்தர நியமனம் வழங்கும் நிகழ்வில் வடமேல் மாகாண ஆளுனர் நஸீர் அஹமட் அவர்கள் வலியுறுத்தினார்.
வடமேல் மாகாணத்தில் பன்னோக்கு அபிவிருத்தி உதவியாளர்கள் 87 பேருக்கு நிரந்தர நியமனம் வழங்கும் நிகழ்வு, அண்மையில் மாகாண ஆளுனர் அலுவலகத்தின் லிச்சவி மண்டபத்தில் நடைபெற்றது.
குறித்த நிகழ்வில் கலந்துகொண்டு ஆளுனர் நஸீர் அஹமட் தொடர்ந்தும் கருத்து வெளியிடும்போது, நாங்கள் இதற்கு முன்னரும் இரண்டு கட்டங்களில் 1050 மற்றும் 262 பேருக்கான நியமனங்களை வழங்கியுள்ளோம். இன்றைய தினத்தில் மேலும் 87 பேருக்கான நியமனங்கள் வழங்கப்படுகின்றது. அதன் மூலம் மொத்தமாக 1398 பேருக்கு நிரந்தர நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளது.
ஆரம்ப நிலை அரச ஊழியர்களின் வெற்றிடங்கள் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட அமைச்சரவை தீர்மானத்தின் பிரகாரம் 45 வயது வரையானவர்களுக்கு நியமனம் வழங்குவதற்கு நாங்கள் மேற்கொண்ட தீர்மானத்தின் ஊடாக இன்று இந்த நியமனங்கள் வழங்கி வைக்கப்படுகின்றது.
கடந்த காலங்களில் நாடு பெரும்பொருளாதார சரிவை எதிர்கொண்டிருந்ததை நீங்கள் மறந்திருக்க மாட்டீர்கள். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்களே தனது அயராத முயற்சிகள் மற்றும் அர்ப்பணிப்புகள் ஊடாக அவ்வாறான நிலையில் இருந்து தற்போதைய நிலைக்கு நாட்டை கட்டியெழுப்பினார். அது தொடர்பில் அவருக்கு நாம் அளிக்கும் கௌரவம் யாதெனில், எங்களது கடமைகளை நேர்மையாகவும், அர்ப்பணிப்புடனும் மேற்கொள்ள வேண்டும்.
அதனை எப்போதும் ஞாபகத்தில் வைத்துக் கொண்டு நன்மதிப்புமிக்கதும் திறன் மிக்கதுமான அரச சேவையொன்றை கட்டியெழுப்பும் வகையில் அர்ப்பணிப்புடன் செயலாற்றுவீர்கள் என்று எதிர்பார்க்கின்றேன் என்றும் ஆளுனர் நஸீர் அஹமட் தொடர்ந்தும் வலியுறுத்தினார்.
குறித்த நிகழ்வில் வடமேல் மாகாண சபையின் தலைவர் டிகிரி அதிகாரி, மாகாண பிரதம செயலாளர் தீபிகா கே குணரத்தின, ஆளுனரின் செயலாளர் இலங்கக்கோன், மாகாண கூட்டுறவு, காணி, மின்சக்தி அமைச்சின் செயலாளர் சுதர்சனி ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர்.
No comments:
Post a Comment