2025ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்துக்கு பதிலாக குறைநிரப்பு பிரேரணை - ரஞ்சித் சியம்பலாபிட்டிய - News View

About Us

About Us

Breaking

Sunday, June 9, 2024

2025ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்துக்கு பதிலாக குறைநிரப்பு பிரேரணை - ரஞ்சித் சியம்பலாபிட்டிய

(எம்.மனோசித்ரா)

ஜனாதிபதித் தேர்தல் உள்ளிட்ட தேர்தல்கள் ஆண்டிறுதியில் எதிர்பார்க்கப்படுவதால் 2025ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட அறிக்கையை சமர்ப்பிக்கப் போவதில்லை என்றும் அதற்குப் பதிலாக குறைநிரப்பு பிரேரணை முன்வைக்கவுள்ளதாகவும் நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்தார்.

ருவன்வெல்ல பிரதேசத்தில் சனிக்கிழமை (8)ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும்போது இதனைத் தெரிவித்தார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில், இவ்வருடம் தேர்தல்கள் இடம்பெறும் வருடமாகும். அதனை அடிப்படையாகக் கொண்டே வரவு செலவு திட்டத்துக்கு பதிலாக குறை நிரப்பு பிரேரணையை சமர்ப்பிக்க எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு முன்னரும் இவ்வாறான சந்தர்ப்பங்களில் குறை நிரப்பு பிரேரணை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

2024ஆம் ஆண்டுக்கான வரவு செலவு அறிக்கையின்படி, 2024 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 31ஆம் திகதி வரை மட்டுமே வருவாய் செலவினங்களைச் செய்வதற்கு பாராளுமன்றத்தின் ஒப்புதல் பெறப்பட்டுள்ளது. அதன்படி, 2025ஆம் ஆண்டுக்கான வரவு செலவுகளுக்கு ஒப்புதல் பெறப்பட வேண்டும்.

எவ்வாறாயினும், இந்த வருடம் ஜனாதிபதித் தேர்தல் நடைபெறவுள்ளதால், ஒவ்வொரு வேட்பாளரின் கொள்கைப் பிரகடனங்களும் மிக முக்கியமானவையாகும். எனவே, அவற்றுக்கு இடமளித்து 2025 முதல் காலாண்டுக்கான நிதி நிர்வாகத்துக்காக குறை நிரப்பு பிரேரணை சமர்ப்பிக்கப்படும்.

ஜனாதிபதித் தேர்தல் நெருங்கிவரும் நிலையில், கவர்ச்சிகரமான முன்மொழிவுகளை உள்ளடக்கி அடுத்த ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகளை முன்வைப்பதற்கு அரசாங்கத்திற்கு ஏராளமான வாய்ப்புகள் உள்ளன. ஆனால் உலகமே ஏற்றுக்கொண்ட ஜனநாயகப் போக்கைப் பின்பற்றி, அரச தலைவர் என்ற வகையில் ஜனாதிபதி தேர்தலை நடத்த தீர்மானித்துள்ளார்.

அத்துடன், குறித்த குறைநிரப்பு பிரேரணை ஊடாக புதிய திட்டங்கள், யோசனைகள் எவையும் முன்வைக்கப்பட மாட்டாது. அரச ஊழியர்களின் சம்பளம் மற்றும் நட்டஈடு உள்ளிட்ட ஏனைய செலவினங்களை வழங்குவதற்கு மாத்திரமே அனுமதி வழங்கப்படும் என்றார்.

No comments:

Post a Comment