இந்திய தேர்தலுக்கு பின்னர் ஜனாதிபதி தனது நிலைப்பாட்டை அறிவிப்பார் : தேர்தலுக்கு நாங்கள் தயார், சிறந்த வேட்பாளர் இதுவரை கிடைக்கவில்லை - பஷில் ராஜபக்ஷ - News View

About Us

About Us

Breaking

Friday, May 10, 2024

இந்திய தேர்தலுக்கு பின்னர் ஜனாதிபதி தனது நிலைப்பாட்டை அறிவிப்பார் : தேர்தலுக்கு நாங்கள் தயார், சிறந்த வேட்பாளர் இதுவரை கிடைக்கவில்லை - பஷில் ராஜபக்ஷ

(இராஜதுரை ஹஷான்)

இந்திய மக்களவைத் தேர்தல் நிறைவடைந்ததன் பின்னர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் தனது நிலைப்பாட்டை அறிவிப்பார். ஜனாதிபதி தேர்தலுக்கு நாங்கள் தயார் ஆனால் சிறந்த வேட்பாளர் இதுவரை கிடைக்கவில்லை. நாட்டுக்காக எவருடனும் இணைந்து செயற்பட தயார் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகர் பஷில் ராஜபக்ஷ தெரிவித்தார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைமை காரியாலயத்தில் வெள்ளிக்கிழமை (10) தேர்தல் கண்காணிப்பு மையத்தைத் திறந்து வைத்ததன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் கூறியதாவது, ஜனாதிபதி தேர்தலுக்கான பணிகளைத் தேர்தல்கள் ஆணைக்குழு முன்னெடுத்துள்ளது. தேர்தலுக்கு நாங்கள் தயார் இருப்பினும் சிறந்த வேட்பாளர் ஒருவர் கிடைக்கவில்லை. எமது தரப்பில் தாமதம் இருப்பதை ஏற்றுக் கொள்கிறோம்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தையின்போது பல விடயங்கள் பேசப்பட்டன. ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் பொதுத் தேர்தலை நடத்த வேண்டும் என்ற யோசனையை முன்வைத்துள்ளோம். இந்திய தேர்தலுக்கு பின்னர் அதாவது எதிர்வரும் ஜூன் மாதம் 18 ஆம் திகதிக்கு பின்னர் தனது நிலைப்பாட்டை அறிவிப்பதாகக் குறிப்பிட்டார். வெகுவிரைவில் உறுதியான நிலைப்பாட்டை அறிவிக்குமாறு ஜனாதிபதியிடம் வலியுறுத்தியுள்ளேன்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேர்தல் நடவடிக்கைகளை முன்னெடுக்கவும், கட்சியை பலப்படுத்தவும் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவுக்கு பொறுப்பளிக்கப்பட்டுள்ளது. இளைஞர்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும் என்று பொதுமக்கள் குறிப்பிட்டார்கள் அதற்கமைய நாமல் ராஜபக்ஷவை கட்சியின் தேசிய அமைப்பாளராக நியமித்துள்ளோம்.

பொதுஜன பெரமுனவின் ஒரு தரப்பினர் ஜனாதிபதிக்கு ஆதரவு வழங்குவதாகவும், பிறிதொரு தரப்பினர் அதற்கு எதிர்ப்பு தெரிவிப்பதாகவும் குறிப்பிடுவது பொய்யானது. கட்சியின் சகல உறுப்பினர்களுடன் கலந்துரையாடி அரசியல் ரீதியிலான தீர்மானங்கள் எடுக்கப்படுகிறது. கட்சியின் ஏகமனதான தீர்மானத்தை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அறிவிப்பார்.

தேர்தல் ஒன்று இடம்பெற்றால் பொதுஜன பெரமுனவின் நிலையை விளங்கிக் கொள்ளலாம். மக்களாணைக்கு செல்வதற்கு நாங்கள் அச்சமடையவில்லை. நாட்டுக்காக எவருடனும் கைகோர்க்கவும், எத்தரப்பினரையும் விட்டு விலகுவதற்கும் நாங்கள் தயாராகவுள்ளோம் என்றார்.

No comments:

Post a Comment