வவுனியாவில் 15 வயது சிறுமி கூட்டு பாலியல் வன்புணர்வு : உடந்தையாக செயற்பட்ட பெண் உட்பட நால்வர் கைது - News View

About Us

About Us

Breaking

Saturday, May 11, 2024

வவுனியாவில் 15 வயது சிறுமி கூட்டு பாலியல் வன்புணர்வு : உடந்தையாக செயற்பட்ட பெண் உட்பட நால்வர் கைது

வவுனியா, தேக்கவத்தை பகுதியில் உள்ள விடுதி ஒன்றில் வைத்து 15 வயது சிறுமி கூட்டு வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் பெண் உட்பட நான்கு பேர் கைது செய்யப்பட்டு, நீதிமன்ற உத்தரவுக்கமைய தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக (11) பொலிஸார் தெரிவித்தனர்.

வவுனியா, ஓமந்தைப் பகுதியைச் சேர்ந்த 15 வயது சிறுமி ஒருவரை வவுனியா நகரையண்டிய தேக்கவத்தை பகுதியில் உள்ள விடுதி ஒன்றிற்க்கு அழைத்து சென்ற இளைஞர் ஒருவர் குறித்த சிறுமிக்கு போதை மருந்து கொடுத்து கூட்டு வன்புணர்வில் ஈடுபட்டதாக பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

அண்மையில் சிறுமியின் உடல் நிலையில் மாற்றம் ஏற்பட்டதையடுத்து பெற்றோர் சிறுமியிடம் விசாரித்ததில் சிறுமி கூட்டு வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டமை தெரியவந்துள்ளது.

இதனையடுத்து சிறுவர் பிரிவு உத்தியோகத்தர்களை அணுகிய சிறுமியின் பெற்றோர் அவர்களின் வழிப்படுத்தலில் வவுனியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்தனர்.

முறைப்பாடு தொடர்பில் விசாரணை செய்த வவுனியா பொலிஸார் கூட்டு வன்புணர்வுக்கு உடந்தையாக செயற்பட்டதாக அவரது உறவினரான 20 வயது பெண் ஒருவரும், வன்புணர்வில் ஈடுபட்ட சந்தேகத்தில் வவுனியா நகரப் பகுதியில் உள்ள தொலைபேசி விற்பனை நிலையத்தில் கடமையாற்றும் இளைஞன் உட்பட மூன்று இளைஞர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட நான்கு பேரும் வவுனியா நீதிமன்றில் முற்படுத்தப்பட்டு நீதிமன்ற உத்தரவுக்கமைய தடுத்து வைக்கப்பட்டுள்ளதுடன், சிறுமியிடம் மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

வவுனியா விசேட நிருபர்

No comments:

Post a Comment