இலங்கை வரும் சீன துணை அமைச்சர் - News View

About Us

About Us

Breaking

Sunday, April 21, 2024

இலங்கை வரும் சீன துணை அமைச்சர்

(லியோ நிரோஷ தர்ஷன்)

சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் சர்வதேச பிரிவின் துணை அமைச்சர் சன் ஹையன் இரு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இலங்கைக்கு வரவுள்ளார்.

இந்த விஜயமானது 23ஆம் திகதி செவ்வாய்க்கிழமை இடம்பெறலாம் என எதிர்பார்க்கப்படுவதுடன், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் பிரதமர் தினேஷ் குணவர்தன உள்ளிட்ட அரசாங்கத்தின் உயர்மட்டத்தினரை சந்தித்து சீன துணை அமைச்சர் சன் ஹையன் கலந்துரையாட உள்ளார்.

இலங்கையின் கடன் மறுசீரமைப்புகளுக்கு சீனாவின் ஒத்துழைப்பு இன்றியமையாததாகும். பிரதமர் தினேஷ் குணவர்தனவின் அண்மைய சீன விஜயத்தின்போது இரு முக்கிய விடயங்கள் குறித்து பேசப்பட்டது.

இதில் முதலாவதாக சர்வதேச நாணய நிதியத்துடன் முன்னெடுக்கப்படுகின்ற பொருளாதார திட்டத்திற்கு கடன் மறுசீரமைப்பு ஊடாக ஒத்துழைக்க உடனடி உத்தரவாதத்தை அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கையாகும்.

இரண்டாவதாக சீனாவினால் இலங்கைக்கு வழங்கப்பட்டிருந்த கடன் மீள் செலுத்துகைக்கான நிவாரண காலம் ஏப்ரல் மாதம் 18ஆம் திகதியுடன் நிறைவடைந்துள்ளது. இந்நிலையில், சீனாவிடமிருந்து பெற்றுக்கொண்ட கடனுக்கான தவணை மற்றும் வட்டியை மீள் செலுத்தவதற்கான காலத்தை மேலும் குறிப்பிட்ட காலத்துக்கு நீடித்துக் கொள்வதற்கான கோரிக்கையாகும். பிரதமரின் சீன விஜயத்தில் இந்த இரு விடயங்களும் முக்கியத்துவம் பெற்றிருந்தன.

ஆனால் சர்வதேச கடன் மறுசீரமைப்புகளை எதிர்வரும் ஜூன் மாதத்துக்குள் நிறைவுபடுத்த வேண்டிய நிலையில், சீனா இதுவரையில் இலங்கையுடனான கடன் மறுசீரமைப்பு தொடர்பில் உறுதியான உத்தரவாதத்தை வழங்க வில்லை. மறுபுறம் வொஷிங்டனில் கடந்த இரு வாரங்களாக உத்தியோகபூர்வ கடன் வழங்குநர்கள் குழு மற்றும் பிணைமுறி பத்திர உரிமையாளர்கள் குழு உள்ளிட்ட தரப்புகளுடன் பல சுற்றுப் பேச்சுவார்த்தைகளை இலங்கை வெற்றிகரமாக முன்னெடுத்துள்ளது.

இவ்வாறானதொரு நிலையிலேயே சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் சர்வதேசத் பிரிவின் துணை அமைச்சர் சன் ஹையன் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்கின்றார்.

சீன ஆய்வுக் கப்பல்களுக்கு இலங்கை கடல் பரப்புக்குள் நுழைவதற்கு ஏற்பட்டுள்ள தொடர் தடை மற்றும் கடன் மீள் செலுத்துகை ஆகிய இரு விடயங்கள் தொடர்பில் சீன தரப்பு முக்கயத்தவம் அளித்து கொழும்பில் கலந்துரையாடும் என எதிர்பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment