(எம்.ஆர்.எம்.வசீம்)
ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளரான ரஞ்சித் மத்தும பண்டார என்னை வார்த்தையால் துஷ்பிரயோகம் செய்துவிட்டார் என இராஜாங்க அமைச்சர் டயனா கமகே சபையில் குற்றஞ்சாட்டினார்.
பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (5) சிறப்புரிமை பிரச்சினை ஒன்றை எழுப்பி குறிப்பிடுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், செப்டம்பர் 21ஆம் திகதி உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விவாதத்தில் நான் உரையாற்றும்போது ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளரான ரஞ்சித் மத்தும பண்டார என்னை மோசமான வார்த்தையால் பேசி வந்தார். நான் அவர் தொடர்பில் பொய் கூறவில்லை. அவரே உயிர்த்த ஞாயிறு தாக்குதல் காலத்தில் சட்டம் ஒழுங்கு தொடர்பான அமைச்சராக இருந்தார்.
இது தொடர்பான விடயங்களை கூறியே நான் உரையாற்றினேன். அதன்போது அவர் என்னை 'பெட்டை நாய்' என்று கூறினார். அது தொடர்பான ஒலிப்பதிவு என்னிடம் உள்ளது. இதனை சபாநாயகரிடம் வழங்கியுள்ளேன். இது குறித்து ஒழுக்காற்று விசாரணை நடத்தப்பட வேண்டும்.
நாட்டில் 51 வீதமான பெண்கள் இருக்கின்றனர். அவர்களுக்காகவே நான் கதைக்கின்றேன். இந்த பாராளுமன்றத்தில் 12 பெண்களும் உள்ளனர். இவ்வாறான நிலைமையில் பெண்கள் தொடர்பில் தவறான வசனங்களில் கூறுவது இது முதற்தடவையல்ல.
இது வார்த்தையாலான பாலியல் துஷ்பிரயோகமாகும். இது அனைத்து பெண்களையும் அவமதிப்பதை போன்றதே. இவ்வாறான நபர்களை மீண்டும் பாராளுமன்றத்திற்கு அனுப்பி வைப்பதா? என்று மக்கள் சிந்திக்க வேண்டும்.
என்னாலேயே அவர் இந்த பாராளுமன்றத்தில் இருக்கின்றார். நானே அவருக்கு அந்தப் பதவியை கொடுக்க காரணமாகும். அவர் வீட்டில் தமது மனைவி, பிள்ளைகளுக்கு பயன்படுத்தும் வசனங்களை இங்கே பயன்படுத்தக் கூடாது. இது தொடர்பில் கட்டாயம் ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். இதற்கு பின்னர் எவரும் இவ்வாறு பேசக்கூடாது என்றார்.
No comments:
Post a Comment