காணி உறுதிப்பத்திரங்கள் மற்றும் ஏனைய ஆவணங்களை வழங்குவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதுடன், இது தொடர்பில் தொழினுட்பத்தை உபயோகப்படுத்துவது தொடர்பில் பேச்சு நடத்தப்பட்டு வருவதாகவும் பிரதமர் தினேஷ் குணவர்த்தன பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
இது தொடர்பான செயற்பாடுகளை டிஜிட்டல் மயப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்ட போதிலும், சில அதிகாரிகளின் முறைகேடான செயற்பாடுகளால் அது தாமதமாகியுள்ளதாகவும் பிரதமர் சபையில் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று வாய் மூல விடைக்கான வினாக்கள் வேளையில் மதுர விதானகே எம்பி, எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளிக்கும்போதே பிரதமர் இவ்வாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் மேலும் தெரிவித்த பிரதமர், பொது நிர்வாக மற்றும் உள்நாட்டு அலுவல்கள் அமைச்சுக்கள் இரண்டு அமைச்சுக்களாக இயங்கின. கடந்த ஒரு வருடத்திற்கு முன்னரே அந்த அமைச்சுக்கள் மீண்டும் ஒன்றாக இணைக்கப்பட்டது.
இந்த அமைச்சுகளின் செயற்பாடுகளை டிஜிட்டல் மயப்படுத்தும் நடவடிக்கைகள் காலதாமதமாவதற்கு சில அதிகாரிகளின் அசமந்தப்போக்கே காரணம். அதனால், இந்த பாதிப்புக்கு மக்களே நட்டஈடு செலுத்த வேண்டியநிலை ஏற்பட்டுள்ளது.
பதிவாளர் நாயகம் திணைக்களத்துடன் இணைந்த நாடளாவிய ரீதியில் உள்ள ஏனைய அலுவலகங்கள், தேவையான தரவுகளை சேகரித்து வருகின்றன. இது தொடர்பில் சட்ட நிபுணர்கள் பலரது ஆலோசனைகளையும் பெற்றுக் கொண்டுள்ளோம்.
சம்பந்தப்பட்ட பாராளுமன்ற தெரிவுக் குழுவுக்கும் இது தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்துவதற்கான சந்தர்ப்பத்தை ஏற்படுத்தி, மக்களுக்கு நிவாரணம் பெற்றுக் கொடுப்பது சம்பந்தமாக கவனம் செலுத்தி வருகின்றோம்.
காணிகளுக்கான உறுதிப்பத்திரம் வழங்கல் மற்றும் முதலீட்டு நடவடிக்கைகளுக்காக காணிகள் வழங்கப்படும்போது, அது தொடர்பான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான தரவுகளை சேகரிக்க நிறுவனம் ஒன்று செயற்பட்டு வந்தது. அந்நிறுவனத்தின் செயல்பாடுகள் தற்போது நிறுத்தப்பட்டுள்ளன.
எனினும், எனோவா என்ற மற்றுமொரு நிறுவனத்திற்கு அந்த செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அந்த நிறுவனம் தற்போது தொடக்கத்திலிருந்து தரவுகளை பதிவு செய்யும் நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளது. இது காலத்தை வீண் விரயம் செய்யும் செயற்பாடாகும்.
அதைவேளை அரசாங்கம் மற்றும் பொது நிதியை வீணடிக்கும் செயற்பாடு என்றும் இதை, நான் சுட்டிக்காட்ட விரும்புகின்றேன் என்றார்.
No comments:
Post a Comment