சுரங்கப்பாதை முடிவுறும்போது தென்படும் ஒளியைப் போன்று நாடு நெருக்கடியிலிருந்து மீண்டு வரும் இச்சந்தர்ப்பத்தில், அனைவரது ஒத்துழைப்பும் குறிப்பாக ஊடகங்களின் ஒத்துழைப்பும் அவசியமானதென ஊடகத்துறை மற்றும் போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
UNDP ஏற்பாடு செய்திருந்த ஊடக வளர்ச்சி தொடர்பான செயலமர்வின் ஆரம்ப நிகழ்வில் உரையாற்றும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அமைச்சர், ஊடக மட்டுப்படுத்தலானது மேற்கொள்ளக்கூடாத ஒன்றாகும். இது ஜனநாயகத்துக்கு எதிரானது மட்டுமன்றி ஒழுக்கத்துக்கு எதிரானது, நோய்களை விட கடுமையானது.
ஆலோசனை, உடன்பாடு மற்றும் சம தன்மையுடைய ஒழுங்குபடுத்தல் மூலம் பொறுப்புள்ள ஊடகவியலாளர்களை உருவாக்குவது மற்றும் உண்மையான தகவல்களுக்கு முன்னுரிமை வழங்கி குரோதத்தை வெற்றி காண்பது ஆகியவையே ஊடகத்துறை அமைச்சர் என்ற வகையில் எனது பிரதான முயற்சியாகும்.
UNDP 1967ஆம் ஆண்டிலிருந்து நாட்டின் பிரதான அபிவிருத்தி, பொருளாதார திட்டங்கள், சுகாதாரம், கல்வி,நீதித்துறை மற்றும் தொலைத்தொடர்பு, தகவல்துறை மேம்பாட்டுக்காக உதவிகள், விசேட ஆலோசனைகளையும் தேவையான உபகரணங்களையும் வழங்கி வருகின்றது.
நாடு சுதந்திரம் அடைந்ததற்குப் பின்னர், முன்னர் எப்போதும் இல்லாத வகையில் பொருளாதார நெருக்கடியை சந்தித்தது.அந்நிலையிலிருந்து படிப்படியாக இயல்புநிலை உருவாகியுள்ளது.
சுரங்கப் பாதையின் முடிவில் காணப்படும் வெளிச்சம் எமக்குத் தென்பட்டாலும் நெருக்கடியான காலகட்டத்தை வெற்றிகொள்ள அனைவரதும் ஒத்துழைப்பு அவசியமாகும்.
குறிப்பாக ஊடகங்களின் ஒத்துழைப்பு இதற்கு அவசியமாகும். இவ்வாறான சந்தர்ப்பங்களிலேயே பொறுப்புள்ள பத்திரிகை கலாசாரம் மிகவும் முக்கியமாகின்றது. உருவாக்கப்படும் விமர்சனங்களுக்கு பதில் சொல்லும் சரியான மற்றும் சமநிலை செய்திப் பிரசுரிப்பு அதன் சாத்தியப்பாடுகளுக்கு முக்கியமாக அமையும்.
கடந்த காலங்களில் அறிந்தோ, அறியாமலோ வெளியிடப்பட்ட தவறான தகவல்கள், அடிப்படையற்ற தகவல்கள், மற்றும் குரோதத்தை விதைக்கும் தகவல்கள் என்பவை ஏற்படுத்திய தாக்கங்களால் நாம் பெருமளவு துன்பங்களை அனுபவித்துள்ளோம். அனைவரதும் நன்மைக்காக இவை முடிவுபெற வேண்டுமென்றார்.
(லோரன்ஸ் செல்வநாயகம்)
No comments:
Post a Comment