எதிர்க்கட்சிகள் கால்பந்தடிக்காமல் விவாதித்து மக்களுக்கு தீர்வொன்றை பெற்றுக் கொடுக்க முன்வர வேண்டும் - ஆஷு மாரசிங்க - News View

About Us

About Us

Breaking

Friday, August 18, 2023

எதிர்க்கட்சிகள் கால்பந்தடிக்காமல் விவாதித்து மக்களுக்கு தீர்வொன்றை பெற்றுக் கொடுக்க முன்வர வேண்டும் - ஆஷு மாரசிங்க

(எம்.ஆர்.எம்.வசீம்)

அரசியலமைப்பின் 13ஆம் திருத்தத்தை வைத்துக் கொண்டு எதிர்க்கட்சிகள் கால்பந்து அடிக்காமல் பாராளுமன்றத்தில் விவாதித்து மக்களுக்கு தீர்வொன்றை பெற்றுக் கொடுக்க முன்வர வேண்டும். ஏனெனில் 13ஆம் திருத்தம் தொடர்பில் பாராளுமன்றத்துக்கு மாத்திரமே தீர்மானிக்க முடியும் என ஜனாதிபதியின் பாராளுமன்ற நடவடிக்கைகள் தொடர்பான பிரதானியும் ஐக்கிய தேசிய கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான ஆஷு மாரசிங்க தெரிவித்தார்.

ஐக்கிய தேசிய கட்சி தலைமையகமான சிறிகொத்தவில் வியாழக்கிழமை (17) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவிததார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில், அரசியலமைப்பின் 13ஆம் திருத்தம் தொடர்பாக அனைத்து கட்சிகளும் கலந்துரையாடி அதனை செயற்படுத்த வேண்டும் என்ற நோக்கிலேயே 13 தொடர்பான தனது பிரேரணையை ஜனாதிபதி கடந்த வாரம் பாராளுமன்றத்துக்கு முன்வைத்திருந்தார்.

பாராளுமன்றத்தினால் மாத்திரமே இதற்கு தீர்வு காண முடியும். ஆனால் எதிர்க்கட்சிகள் இதனை சந்தர்ப்பமாக பயன்படுத்திக் கொண்டு 13ஆம் திருத்தத்தை வைத்துக் கொண்டு கால்பந்தாடி வருகின்றன.

13ஆம் திருத்தம் தொடர்பாக எதிர்க்கட்சிகளிடம் உறுதியான நிலைப்பாடு இல்லை. ஒரு தரப்பு ஆதரவளிக்கும்போது மற்ற தரப்பு அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கிறது. எதிர்க்கட்சிகளின் இந்த நிலைப்பாடு 13ஆம் திருத்தத்தில் மாத்திரமல்ல, அரசாங்கம் பாராளுமன்றத்துக்கு கொண்டுவந்திருக்கும் அனைத்து பிரேரணைகளிலும் அவ்வாறே இருக்கின்றது.

குறிப்பாக சர்வதேச நாணய நிதியத்துடன் செய்துகொண்டுள்ள ஒப்பந்தம் விடயத்திலும் எதிர்க்கட்சிகள் ஒரு நிலைப்பாட்டில் இல்லை. இவ்வாறான எதிர்க்கட்சி எதிர்காலத்தில் ஆட்சிக்கு வந்தால் நாட்டுக்கு என்ன நடக்கும் என தெரியாது.

மேலும், 13ஆம் திருத்தத்தை பாரியதொரு விடயமாக மக்கள் மத்தியில் பிரசாரம் செய்து, நாட்டில் மீண்டும் இனங்களுக்கிடையில் மோதலொன்றை ஏற்படுத்தவே எதிர்க்கட்சி முயற்சிக்கிறது.

நாடு தொடர்பில் உணர்வு இருக்கும் உண்மையான எதிர்க்கட்சி என்றால், 13 தொடர்பாக ஜனாதிபதி பாராளுமன்றத்துக்கு முன்வைத்திருக்கும் பிரேரணை சம்பந்தமாக பாராளுமன்றத்தில் விவாதித்து, மக்களுக்கு தீர்வொன்றை பெற்றுக் கொடுக்க முன்வர வேண்டும்.

மேலும், அரசாங்கம் வடக்கில் கைப்பற்றிய காணிகளில் ஒரு தொகையை அந்த மக்களுக்கு மீண்டும் கையளிக்க முற்படும்போது சிலர் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். ஆனால் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவரது காலத்தில் சுமார் 12 ஆயிரம் ஏக்கர் காணிகளை விடுவித்தார்.

ஆனால், தற்போது நாங்கள் 300 ஏக்கர் காணி விடுவிக்கும்போது, மஹிந்த ராஜபக்ஷவின் காலத்தில் எதிர்ப்பு தெரிவிக்காமல் இருந்த தேரர்கள் கூட இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.

யுத்தம் இடம்பெற்ற காலத்தில் இராணுவத்தினர் வடக்கில் கட்டிடங்கள் காணிகளை கைப்பற்றி இருந்தனர். யுத்தம் முடிவடைந்த பின்னர் அந்த கட்டிடங்கள் காணிகளை மீள கையளிக்க நடவடிக்கை எடுத்தனர். அதுவே தற்போதும் இடம்பெறுகிறது.

எனவே, யுத்தம் முடிவடைந்தும் வடக்கு, கிழக்கு மக்களுக்கு அவர்களின் உரிமைகளை அனுபவிக்க இன்னும் முடியாமல் போயிருக்கிறது. அவர்கள் தமிழர்கள் என்பதால் அவர்களை நசுக்க வேண்டுமா என நாங்கள் சமூகத்தில் கேட்க வேண்டும் என்றார்

No comments:

Post a Comment