நிர்மாணத்துறைக்கு புத்துயிரளித்து தேசிய பொருளாதாரத்திற்கு பாரிய பங்களிப்பை வழங்குவதே ஜனாதிபதியின் நோக்கம் - சாகல ரத்நாயக்க - News View

About Us

About Us

Breaking

Thursday, August 3, 2023

நிர்மாணத்துறைக்கு புத்துயிரளித்து தேசிய பொருளாதாரத்திற்கு பாரிய பங்களிப்பை வழங்குவதே ஜனாதிபதியின் நோக்கம் - சாகல ரத்நாயக்க

இலங்கையின் நிர்மாணத்துறைக்கு புத்துயிரளித்து தேசிய பொருளாதாரத்திற்கு பாரிய பங்களிப்பை வழங்குவதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் நோக்கமாகும் என தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதியின் பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க தெரிவித்தார்.

“நிர்மாணக் கைத்தொழில் புத்துயிர் பெறுவதற்கான செயற்குழு” நேற்று (02) ஜனாதிபதி அலுவலகத்தில் கூடிய போது சாகல ரத்நாயக்க மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

இலங்கையில் கடந்த காலங்களில் காணப்பட்ட பொருளாதார பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்து நிர்மாணத்துறையில் ஏற்பட்ட பிரச்சினைகளுக்கு தீர்வுகளை வழங்கி இந்தத் துறையில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கான அரசாங்கத்தின் தீர்மானங்களின் முன்னேற்றம் குறித்தும் இங்கு விரிவாக ஆராயப்பட்டது.

நிர்மாணத்துறையினருக்கு அரசாங்கம் வழங்க வேண்டிய மூன்று மாத நிலுவைத்தொகையை இந்த ஆகஸ்ட் மாதத்திற்குள் வழங்கக் கூடியதாக இருக்கும் என குழு உறுப்பினர்கள் சுட்டிக்காட்டினர்.

மேலும் உரையாற்றிய சாகல ரத்நாயக்க, வெளிநாட்டு உதவியின் கீழ் இலங்கையில் அமுல்படுத்தப்பட்டு, கடந்த கால பொருளாதார நெருக்கடியினால் பாதியில் நிறுத்தப்பட்ட அபிவிருத்தி திட்டங்களை விரைவாக மீள ஆரம்பிக்க வேண்டும் என்பது அரசாங்கத்தின் விருப்பமாகும் எனவும், கடன் மறுசீரமைப்பு வேலைத்திட்டத்தின் வெற்றியுடன், இந்த நடவடிக்கைகளை துரிதமாகச் செயல்படுத்த முடியும் என்றும் தெரிவித்தார்.

இதன்படி, உலக வங்கி மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கி என்பவற்றின் அனுசரணையுடன் இந்நாட்டில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள அபிவிருத்தித் திட்டங்களின் முன்னேற்றம் தொடர்பான அறிக்கையை வழங்குமாறு வெளிநாட்டு வளத் திணைக்கள அதிகாரிகளுக்கு சாகல ரத்நாயக்க பணிப்புரை விடுத்தார்.

No comments:

Post a Comment