பா.ஜ.க. செயற்குழுவில் முஸ்லிம் : தேர்தலுக்காக புது வடிவம் எடுக்கிறதா? வியூகம் என்ன? - News View

About Us

About Us

Breaking

Thursday, August 3, 2023

பா.ஜ.க. செயற்குழுவில் முஸ்லிம் : தேர்தலுக்காக புது வடிவம் எடுக்கிறதா? வியூகம் என்ன?

பிரதமர் நரேந்திர மோடி சில தினங்களுக்கு முன், தான் 'மூன்றாவது முறை பிரதமராவது' பற்றி பேசியிருந்தார்.

அதைத் தொடர்ந்து, கடந்த ஞாயிற்றுக்கிழமை பாரதிய ஜனதா கட்சி தனது தேசிய செயற்குழுவை அறிவித்தது. அதில் பல புதிய முகங்கள் இடம் பெற்றிருந்தனர்.

ரமன் சிங் போன்ற முன்னாள் முதல்வர்கள் கட்சியின் அமைப்பில் சேர்க்கப்பட்டுள்ளனர். அதேநேரத்தில் தாரிக் மன்சூர் மற்றும் அப்துல்லா குட்டி ஆகியோர் பாஜகவின் புதிய முஸ்லிம் முகங்களாக பார்க்கப்படுகிறார்கள்.

அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலையும், இந்த ஆண்டு நடக்க உள்ள நான்கு மாநிலங்களுக்கான சட்டசபைத் தேர்தல்களையும் மனதில் வைத்தே, பா.ஜ.க.வின் செயற்குழுவில் இந்த மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன என்ற கருத்துக்களும் எழுந்துள்ளன.

பா.ஜ.க.வின் சித்தாந்தம் மற்றும் கடந்த ஒன்பது ஆண்டு கால மோடி அரசின் செயல்பாடுகளின் மூலம் தேர்தலில் அதிகபட்ச இடங்களைப் பெற முடியும் என்பதை மனதில் வைத்தே தேசியச் செயற்குழுவில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக பா.ஜ.க மூத்த தலைவர் ஒருவர் கூறுகிறார்.

80 இடங்கள் கொண்ட உ.பி.க்கு அதிக முக்கியத்துவம்

நாடாளுமன்றத் தேர்தலில் உத்தரப் பிரதேசத்துக்கு இருக்கும் 80 தொகுதிகளை வைத்து, பாஜகவின் தேசிய செயற்குழுவில் அம்மாநிலத்துட்க்கு அதிகபட்ச முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது. அங்கிருந்து 8 உறுப்பினர்கள் புதிய செயற்குழுவில் இடம்பெற்றுள்ளனர்.

புதிய செயற்குழுவில், மூன்று துணைத் தலைவர்கள், இரண்டு பொதுச் செயலாளர்கள், ஒரு செயலாளர், ஒரு பொருளாளர், ஒரு இணைச் செயலாளர் ஆகியோர் உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள்.

சட்ட மன்றத் தேர்தல் நடக்கவிருக்கும் மாநிலங்கள் மீது அதிக கவனம்

இந்த ஆண்டு தெலங்கானா, ராஜஸ்தான், சத்தீஸ்கர் மற்றும் மத்திய பிரதேசம் ஆகிய நான்கு மாநிலங்களில் சட்ட சபைத் தேர்தல் நடைபெற உள்ளது.

பா.ஜ.க சமீபத்தில் தனது நான்கு மத்திய அமைச்சர்களை இந்த மாநிலங்களில் தேர்தல் பொறுப்பாளராக நியமித்துள்ளது. இப்போது இந்த மாநிலங்களுக்கும் தேசிய செயற்குழுவில் முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது.

சத்தீஸ்கரில் தேசிய துணைத் தலைவர் பதவிக்கு அதிகபட்சமாக மூன்று பிரதிநிதிகள் உள்ளனர். இவர்கள் முன்னாள் முதல்வர் ரமன் சிங், சரோஜ் பாண்டே, மற்றும் லதா உசெந்தி.

மற்ற மூன்று மாநிலங்களிலிருந்தும் தலா ஒரு பிரதிநிதி உள்ளார். ராஜஸ்தானைச் சேர்ந்த முன்னாள் முதல்வர் வசுந்தரா ராஜே, மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த சவுதன் சிங், தெலுங்கானாவைச் சேர்ந்த டி.கே.அருணா ஆகியோர் இந்த அமைப்பில் இடம் பெற்றுள்ளனர்.

அதே நேரத்தில் மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த கைலாஷ் விஜய்வர்கியா, ராஜஸ்தானில் இருந்து சுனில் பன்சால், தெலுங்கானாவில் இருந்து சஞ்சய் பேடி ஆகியோர் தேசிய பொதுச் செயலாளர் பதவிக்கு கொண்டுவரப்பட்டுள்ளனர்.

ராஜஸ்தான் மற்றும் மத்திய பிரதேசத்தில் இருந்து தலா ஒரு முகம் தேசிய செயலாளர்களில் சேர்க்கப்பட்டுள்ளது. அதாவது, புதிய அணியில் உள்ள 38 பேரில் 11 பேர் இந்த நான்கு மாநிலங்களைச் சேர்ந்தவர்கள்.

புதிய நிர்வாகிகள் யாருடைய அணி?

இப்போது ஒரு முக்கியமான கேள்வி எழுகிறது. இவர்கள் பா.ஜ.க தலைவர் ஜே.பி.நட்டாவின் பரிந்துரையின் பேரில் கட்சியின் செயற்குழுவில் உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டுள்ளார்களா அல்லது பிரதமர் நரேந்திர மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷா இதில் முக்கிய பங்கு வகிக்கிறார்களா?

மூத்த பத்திரிகையாளர் ராதிகா ராமசேஷன் கூறுகையில், "இது ஒரு கூட்டுப் பொறுப்பு. பிரதமர் மோடியும், அமித் ஷாவும் வெவ்வேறு மாதிரிச் சிந்திக்கிறார்கள் என்று சொல்வது முற்றிலும் தவறாகிவிடும். இருவரும் நெருக்கமான ஒரு அணியாக வேலை செய்கிறார்கள், ஜே.பி. நட்டா அவர்களின் உத்தரவை ஏற்றுக் கொள்கிறார். எனவே புது அணி மோடி - அமித்ஷா அணி,” என்று கூறுகிறார்.

யார் இந்த தாரிக் மன்சூர்?

இவை அனைத்திற்கும் நடுவே, பா.ஜ.க.வின் தேசியச் செயற்குழுவில் இடம் பெற்றுள்ள முஸ்லிம் முகமான தாரிக் மன்சூரின் பெயர் 'அதிர்ச்சி அலைகளை' ஏற்படுத்தியிருக்கிறது. விவாதமாகவும் மாறியிருக்கிறது.

உத்தரப் பிரதேச சட்ட மேலவை உறுப்பினரான இவர், அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர்.

2017ஆம் ஆண்டு முதல், புக்கல் நவாப், மொஹ்சின் ராசா, மற்றும் டேனிஷ் ஆசாத் அன்சாரிக்குப் பிறகு கட்சியால் சட்ட மேலவைக்கு அனுப்பப்பட்ட நான்காவது முஸ்லிம் உறுப்பினர் இவர்.

தாரிக் மன்சூர் துணைவேந்தராக இருந்தபோது, குடியுரிமை திருத்தச் சட்டம் (CAA) மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடு (NRC) ஆகியவற்றுக்கு எதிராக அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழகத்தில் ஆர்ப்பாட்டங்கள் நடந்தன. அப்போது பல்கலைக்கழக வளாகத்திற்குள் போலீசார் நுழைந்தனர். மன்சூர் மாணவர்களுக்கு ஆதரவாக நிற்கவில்லை என்று விமர்சிக்கப்பட்டார்.

பாரதிய ஜனதா கட்சியை உன்னிப்பாக கவனித்து வரும் மூத்த பத்திரிகையாளர் ராதிகா ராமசேஷன், "தாரிக் மன்சூர், அலிகர் முஸ்லிம் பல்கலைகழகத்தின் துணைவேந்தராக இருந்தபோது ஆர்.எஸ்.எஸ் உடன் தொடர்பு வைத்திருந்தார். பிஜேபியால் விரும்பப்பட்டதால்தான் அவர் அந்த அமைப்பில் சேர்க்கப்பட்டுள்ளார்,” என்கிறார்.

முக்தார் அன்சாரி மற்றும் ஷாநவாஸ் உசேன் ஆகியோருக்குப் பிறகு பாஜகவுக்கும் ஒரு முஸ்லிம் பிரதிநிதி தேவைப்பட்டது போலத் தெரிகிறது என்கிறார் அவர்.

இஸ்லாமியர்களை பா.ஜ.க பக்கம் இழுப்பாரா தாரிக் மன்சூர்?

தாரிக் மன்சூர் பஸ்மண்டா முஸ்லிம்கள் மத்தியில் கட்சியின் பிடியை வலுப்படுத்த உதவுவார் எனவும் நம்பப்படுகிறது.

மூத்த பத்திரிகையாளரான பிரமோத் ஜோஷி கூறுகையில், "தற்போதைக்கு அவரால் பெரிய அளவிலான முஸ்லிம்களை ஈர்க்க முடியும் என்று தோன்றவில்லை. ஆனால் இது ஒரு தொடக்கம்" என்கிறார்.

ராதிகா ராமசேஷனும் பிரமோத் ஜோஷியோடு உடன்படுகிறார். “தாரிக் மன்சூரை அமைப்பில் சேர்த்த பிறகு பஸ்மாண்டா முஸ்லிம்கள் பா.ஜ.க பக்கம் வருவார்கள் என்று தோன்றவில்லை,” என்கிறார் அவர்.

பா.ஜ.க.வில் துணைத் தலைவர் பதவிக்கு முக்கியத்துவம் இல்லாததால், மன்சூரின் பிரதிநிதித்துவம் வெறும் அடையாளம் மட்டுமே என்று அவர் கூறுகிறார்.

மறுபுறம், மூத்த பத்திரிகையாளர் பிரமோத் ஜோஷி இந்த நியமனங்களில் சமூகத்தில் பா.ஜ.க.வின் பிம்பத்தைக் கட்டமைப்பதன் ஒரு பகுதியாகப் பார்க்கிறார்.

"பா.ஜ.க இதுவரை முஸ்லிம்களை புறக்கணித்து அரசியலில் இயங்கி வந்தது. ஆனால், அவர்களுக்கு எதிரான கூட்டணி வலுவாக இருப்பதால் படிப்படியாக முஸ்லிம்கள் மத்தியிலும் செல்ல வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது," என்று அவர் கூறுகிறார்.

கேரளாவின் பக்கம் திரும்பிய பா.ஜ.க.வின் பார்வை

கேரளாவைச் சேர்ந்த அப்துல்லா குட்டிக்கும் பா.ஜ.க நிர்வாகிகளில் இடம் வழங்கப்பட்டுள்ளது.

இது குறித்து பிரமோத் ஜோஷி கூறுகையில், "தேசிய பிம்பத்தை முன்னிறுத்தும் பா.ஜ.க.வின் முயற்சி இது. பா.ஜ.க தெற்கில் புதிய பகுதிகளில் கால் பதிக்க விரும்புகிறது. தமிழகத்தில் 6 மாத பாத யாத்திரையை துவங்கியிருக்கிறது. கேரளா ஒரு புதிய பகுதி. அப்துல்லா குட்டியுடன் ஏ.கே. ஆண்டனியின் மகன் அனில் ஆண்டனியும் தேசிய செயற்குழுவில் சேர்க்கப்பட்டுள்ளார்,” என்கிறார்.

ராதிகா ராமசேசன் கூறுகையில், "கேரளாவின் மீது கவனம் செலுத்தவே அவர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர், ஆனால் இதுவும் வெறும் அடையாளத்திற்குத்தான்," என்று கூறுகிறார்.

பா.ஜ.க.வில் முஸ்லிம்களின் பிரதிநிதியாக முக்தார் அப்பாஸ் நக்வியும் கொண்டு வரப்பட்டார். அவர் உத்தரப் பிரதேசத்தில் ஷியா வாக்குகளை கொண்டு வருவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ராதிகா ராமசேஷன் கூறுகையில், ஒருமுறை நக்வி ராம்பூரிலிருந்து மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்றார். ஆனால் விஷ்வ ஹிந்து பரிஷத்தும் அவருக்கு ஆதரவாக அனைத்து இந்து வாக்குகளையும் பெற மிகவும் கடினமாக உழைத்தது, என்கிறார்.

ராதிகா ராமசேஷன் மற்றும் பிரமோத் ஜோஷி இருவரும், பா.ஜ.க. கட்சியில் சிறுபான்மை பிரதிநிதித்துவம் இல்லாததை பூர்த்தி செய்ய முயற்சிப்பதாக நம்புகிறார்கள்.

பா.ஜ.க.வில் பெண்கள் பங்கேற்பு குறைந்து வருகிறதா?

பாஜகவின் நிர்வாகக் குழுவில் மொத்தம் 38 பெயர்கள் உள்ளன. இதில் 13 தேசிய துணைத் தலைவர்கள், 8 தேசிய பொதுச் செயலாளர்கள், 13 தேசிய செயலாளர்கள், ஒரு அமைப்பு பொது செயலாளர், ஒரு இணை அமைப்பு பொது செயலாளர், ஒரு பொருளாளர் மற்றும் ஒரு இணை பொருளாளர் ஆகியோர் அடங்குவர்.

தேசியத் தலைவர் ஜே.பி. நட்டாவையும் சேர்த்து, கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினர்களின் எண்ணிக்கை 39 ஆக உள்ளது.

இதில் 9 பேர் மட்டுமே பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே நிர்வாகத்தில் பெண்களின் பங்களிப்பு 23% ஆக உள்ளது. தேசியப் பொதுச் செயலாளர்கள் பட்டியலில் ஒரு பெண் கூட இல்லை.

பெண்களுக்கு 33% இட ஒதுக்கீட்டைப் பற்றிப் எப்போதும் பேசி வரும் பாஜகவின் சொந்தக் கொள்கைகளுக்கு இணையாக இந்தத் தரவுகள் இல்லை.

அப்படியானால் பா.ஜ.க.வின் இந்தச் செயற்குழுவில் பெண்களுக்கு முறையான பங்கேற்பு உண்டா?

பெண்களுக்கு உரிய பிரதிநிதித்துவம் கொடுக்காததால் பா.ஜ.க.வால் வாக்குறுதியை நிறைவேற்ற முடியவில்லை என்கிறார் ராதிகா ராமசேஷன். முன்னதாக, பல பெண்களும் தங்கள் கட்சியில் சேர்க்கப்பட்டுள்ளனர், ஆனால் அது தொடர்ச்சியாகக் குறைந்து வருகிறது.

எனவே, பா.ஜ.க.வில் தகுதியான பெண்கள் பற்றாக்குறையா அல்லது வரும் காலங்களில் இது தொடர்பாக அமைப்பில் மாற்றம் வருமா?

"பா.ஜ.க.வில் திறமையான பெண்கள் குறைவு என்பது இல்லை. தெற்கில் பா.ஜ.க.வில் கூர்மையாகப் பேசும் பல பெண்கள் இருக்கிறார்கள்," என்கிறார் ராதிகா ராமசேஷன்.

மேலும் அவர் கூறுகிறார், "பெண்கள் அல்லது தலித்துகளின் பங்கேற்பைக் குறைப்பது உத்தியின் ஒரு பகுதியாக இருக்க முடியாது. பெண்களின் பங்கேற்பைக் குறைப்பது குறித்து கண்டிப்பாக விமர்சனங்கள் இருக்கும், எனவே வரும் காலங்களில் இன்னும் சில பெயர்கள் சேர்க்கப்படலாம் என நினைக்கிறேன். பெண்களின் பிரதிநிதித்துவம் தொடர்பாக பா.ஜ.க நிச்சயம் ஏதாவது செய்யும் என்பது உறுதி,” என்கிறார்.

2024 தேர்தலைச் சமாளிக்குமா இந்த நிர்வாகக் குழு?

2024 தேர்தலுக்கு இன்னும் கால அவகாசம் இருப்பதால், இக்குழுவில் சில மாற்றங்கள் செய்யப்படுமா?

இந்தக் கேள்விக்கு மூத்தப் பத்திரிக்கையாளர் ராதிகா ராமசேஷன் பதில் கூறும்போது, "லோக்சபா தேர்தலுக்கான இறுதி மாற்றம் இதுவல்ல. அதற்கு இன்னும் நிறைய கால அவகாசம் உள்ளது. அதனால் பெண்கள் பிரதிநிதித்துவம் குறைவாக உள்ளதை பா.ஜ.க சரி செய்யும் என எதிர்பார்க்கலாம்,” என்கிறார்.

மேலும், “இப்படிப்பட்ட மாற்றம் சமுதாயத்திற்கு என்ன செய்தியை அனுப்புகிறது. அதை மனதில் வைத்து பாஜக மாற்றங்களைச் செய்கிறது. அதனால் அதில் தலித்துகள், ஆதிவாசிகள், ஓபிசிகள் ஆகியோரை சேர்க்கலாம்," என்கிறார்.

பொதுச் செயலாளர் பதவியில் பா.ஜ.க வேறு எந்த நபர்களை சேர்க்கிறது என்பது முக்கியம்.

வரும் நாட்களில் பா.ஜ.க தேசியச் செயற்குழுவில் மேலும் சில மாற்றங்கள் செய்யப்படுமா?

இது பற்றி பிரமோத் ஜோஷி கூறும்போது, “பா.ஜ.க துரிதமாக மாறி வருகிறது. இது போன்ற சூழ்நிலையில், வரும் நாட்களில் அமைச்சரவையில் சில புதிய முகங்கள் சேர்க்கப்படலாம், அதேநேரத்தில் சில பழைய முகங்களும் கட்சிக்குள் கொண்டு வரப்படலாம்," என்கிறார்.

No comments:

Post a Comment