(எம்.ஆர்.எம்.வசீம்)
கல்வி பொதுத் தராதர உயர் தரப் பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டு நடவடிக்கை தாமதமாவதன் பொறுப்பை அரசாங்கம் ஏற்றுக் கொள்ள வேண்டும். எமது கோரிக்கைகளுக்கு அரசாங்கம் முறையான தீர்வொன்றை வழங்குமாக இருந்தால் விடைத்தாள் மதிப்பீட்டு நடவடிக்கையை உடனடியாக ஆரம்பிப்போம் என பல்கலைக்கழக பேராசிரியர்களின் சங்க சம்மேளனத்தின் தலைவர் பேராசிரியர் ஷியாம பன்னெஹெக தெரிவித்தார்.
கல்வி பொதுத் தராதர உயர் தரப் பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டு நடவடிக்கை தொடர்ந்து பிற்போடப்பட்டு வருவது தொடர்பாக பல்கலைக்கழக பேராசிரியர்களின் சங்க சம்மேளனம் மேற்கொண்டுள்ள தீர்மானம் தொடர்பாக குறிப்பிடுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், அரசாங்கத்தின் வரிக் கொள்கை காரணமாக அநீதி ஏற்பட்டிருக்கும் எமது சங்கத்தின் உறுப்பினர்களுக்கு நிவாரணம் வழங்கப்பட வேண்டும் என்பதன் அடிப்படையிலேயே பல்கலைக்கழக பேராசிரியர்கள் கல்வி பொதுத் தராதர உயர் தரப் பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டு நடவடிக்கையில் இருந்து விலகிக் கொள்ளத் தீர்மானித்தோம். வேறு எந்தக் கோரிக்கைகளும் இதனுடன் இணைக்கப்படவில்லை.
ஆனால், தற்போது இந்தப் பிரச்சினையும் இனவாத பிரச்சினை ஒன்றையும் ஏற்படுத்த முயற்சிக்கின்றனர்.
சிங்கள மொழி விடைத்தாள் மதிப்பீட்டு நடவடிக்கை மாத்திரம் மேற்கொள்வதில்லை, தமிழ் மொழி விடைத்தாள் மதிப்பீட்டு நடவடிக்கையும் இடம்பெறுவதாக தெரிவிக்கப்படுகிறது. எனினும், அவ்வாறு எதுவும் இடம்பெறவில்லை என்பதை பொறுப்புடன் தெரிவிக்கிறேன்.
இந்த சந்தர்ப்பத்தில் சிங்களம், தமிழ் என்ற பேச்சு இல்லை. இந்த செயற்பாட்டில் கலந்துகொள்ளாமல் இருக்கும் அனைவரும் பல்கலைக்கழக பேராசிரியர்கள் மாத்திரமில்லை. பாடசாலை ஆசிரியர்களும் இதில் கலந்துகொள்வதில்லை. அதனால் இந்த நிலையை தொடர்ந்து இழுத்தடித்துச் செல்வதற்கு நாங்கள் பொறுப்பில்லை.
அதனால் அரசாங்கம் இந்த விடயம் தொடர்பாக ஆரோக்கியமான தீர்மானம் ஒன்றை வழங்குமாக இருந்தால், விடைத்தாள் மதிப்பீட்டு நடவடிக்கையை எந்த சந்தர்ப்பத்திலும் நாங்கள் ஆரம்பிக்கத் தயாராக இருக்கிறோம் என்றார்.
No comments:
Post a Comment