(எம்.வை.எம்.சியாம்)
இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தில் கற்கை நெறிகளுக்கான கட்டணம் 55 வீதத்தால் அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும், இதனால் மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ள இலங்கை திறந்த பல்கலைக்கழக மாணவர்கள் சங்கத் தலைவர் முஹம்மது றிபாத், இதற்கு உரிய தீர்வு வழங்கப்படாவிட்டால் வீதியில் இறங்கி போராடவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், பல்கலைக்கழகங்களுக்குள் இன்று நெருக்கடி நிலை தோன்றியுள்ளது. பாடநெறிகளின் கட்டணங்கள் படிப்படியாக அதிகரித்து, மூன்று வருட காலத்துக்குரிய பாடங்கள் தற்போது இரண்டு வருடங்களாக குறைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், எவ்வித வசதிகளுமின்றி மாணவர்கள் பட்டப்படிப்பை முன்னெடுத்து வருகின்றனர்.
நூற்றுக்கு 55 வீதம் கட்டணம் அதிகரித்துள்ளது. பல்கலைக்கழக நிபந்தனைகளுக்கு அப்பால் இந்த கட்டணங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனால் கல்வியை தொடரும் மாணவர்கள் கற்றல் நடவடிக்கைகளை இடைநடுவில் கைவிடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
நூற்றுக்கு 10 வீதம் கட்டணத்தை நிறுத்துவதாக 2014ஆம் ஆண்டு அரசாங்கம் வாக்குறுதியளித்தது. ஆனால், இன்று அது தொடர்பில் கதையில்லை. பல்கலைக்கழக கற்கைகளுக்கு 55 வீத கட்டண அதிகரிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
எனவே, எதிர்கொண்டுள்ள நெருக்கடிகளுக்கு தீர்வு பெற்றுதர வேண்டும். இவற்றுக்கு தீர்வு கிடைக்காவிட்டால் வீதியில் இறங்கி நாமே போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றும் கூறியுள்ளார்.
No comments:
Post a Comment