20 இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபன ஊழியர்கள் கட்டாய விடுமுறையில் அனுப்பப்பட்டுள்ளதாக மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.
நேற்றையதினம் (28) எரிபொருள் விநியோக நடவடிக்கைகளைத் தடுத்து, எரிபொருள் விநியோக கடமைகளில் ஈடுபட்டிருந்த ஊழியர்களை தடுத்து நிறுத்திய தொழிற்சங்க தலைவர்கள் மற்றும் அதற்கு ஆதரவளித்த ஊழியர்களே இவ்வாறு கட்டாய விடுமுறையில் அனுப்பப்பட்டுள்ளளதாக, மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்தார்.
ஏற்கனவே அறிவிக்கப்பட்டதற்கு அமைய, அவர்களுக்கு இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபன வளாகம், இலங்கை பெற்றோலிய களஞ்சிய சேவை முனைய வளாகங்கள் ஆகியவற்றிற்குள் நுழைய தடை செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
தமது பணிப்புரைக்கமைய, இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் மற்றும் இலங்கை பெற்றோலிய சேமிப்பு முனைய நிர்வாகத்தினால் குறித்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
இதேவேளை, சேவையில் ஈடுபடாத, ஓய்வு பெற்ற ஊழியர்கள், அரசியல் கட்சிகளைச் சேர்ந்தவர்கள், தேர்தலில் போட்டியிடுவதற்காக விடுமுறை பெற்றுச் சென்றவர்கள் பெற்றோலிய கூட்டுத்தாபன வளாகங்களுக்குள் நுழைந்தமை தொடர்பில் அவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று விசாரணை மற்றும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
அத்தியாவசிய சேவையாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ள எரிபொருள் விநியோகம், களஞ்சியப்படுத்தல் உள்ளிட்ட நடவடிக்கைகளுக்கு இடையூறு ஏற்படுத்திய உள்ளிட்ட விடயங்களை கருத்திற் கொண்டு, CCTV காட்சிகள், அலுவலகத்திற்கு சமூகமளித்த பட்டியல் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் அவர்களுக்கு எதிரான நடவடிக்கை எடுக்கப்படுமென அமைச்சர் குறிப்பிட்டார்.
அத்துடன், இன்றையதினமும் (29) குறித்த நபர்கள் இவ்வாறு பணிக்கு இடையூறு விளைவிக்கும் நடவடிக்கையில் ஈடுபட தயாராகி வந்ததாக தகவல் கிடைத்துள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment