றிஸ்வான் சேகு முஹைதீன்
பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட, அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய (IUSF) அழைப்பாளர் வசந்த முதலிகே அது தொடர்பான வழக்கிலிருந்து விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
இன்றையதினம் (31) கொழும்பு பிரதான நீதவான் பிரசன்ன அல்விஸ் முன்னிலையில் முன்னிலைப்படுத்தப்பட்டபோது நீதிமன்றத்தினால் அவர் இவ்வாறு விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் வசந்த முதலிகேவுக்கு பொருந்தாது எனவும், அது தொடர்பில் அவர் மீது எந்தவொரு குற்றச்சாட்டும் இல்லையென பிரதான நீதவான் இதன்போது குறிப்பிட்டார்.
பயங்கரவாத தடைச் சட்டத்தை பயன்படுத்தி பொய்யான சாட்சியங்களை உருவாக்கி, இச்சட்டத்தை தவறாக பயன்படுத்தி மனிதர்களின் சுதந்திரத்தை எவ்வாறு பறிக்க முடியுமென நீதவான் இதன்போது கேள்வி எழுப்பியதாக, வசந்த முதலிகே சார்பில் முன்னிலையான சட்டத்தரணி இதன்போது குறிப்பிட்டார்.
இதன்போது கருத்து வெளியிட்ட அவர் மேலும் தெரிவிக்கையில், இன்று விடுதலையானது வசந்த முதலிகேக மட்டுமல்ல. நாம் மன்னிப்பு கோர வேண்டும் இந்நாட்டின் தமிழ், முஸ்லிம் மக்களுக்கு எதிராக கடந்த 30 வருடங்களாக பொய்யான சாட்சியங்கள் மூலம் தமது வாழ்க்கையை தொலைத்து விட்டுள்ள நிலையில், அவர்களை விடுதலை செய்ய இவ்வாறான செயற்பாடுகளை எம்மால் முன்னெடுத்துச் செல்ல முடியாமல் போனது.
இந்த பயங்காரவாத தடுப்புச் சட்டம் எனும் முறையற்ற சட்டம் மூலம் ஆட்சியாளர்கள் தங்களது இருப்புக்காக பயன்படுத்தப்படும் இச்சட்டத்தினால் பல பரம்பரையான மக்கள் துன்பப்பட்டுள்ளனர். இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பு மூலம் இந்த சட்டம் எவ்வாறான அநீதியான சட்டம் என வெளிப்படுத்தப்பட்டுள்ளது என அவர் மேலும் தெரிவித்தார்.
இதேவேளை, பொதுச் சொத்துகளுக்கு சேதம் விளைவித்தமை உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளில் வசந்த முதலிகே மீது தாக்கல் செய்யப்பட்டுள்ள ஏனைய வழக்கில் விதிக்கப்பட்ட விளக்கமறியலின் அடிப்படையில் அவர் தொடர்ந்தும் விளக்கமறியலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, கடந்த வாரம் (25) இது தொடர்பான மற்றுமொரு வழக்கில் கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட போது அவருக்கு பெப்ரவரி 08ஆம் திகதி வரை விளக்கமறியல் விதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கடந்த 2022 ஓகஸ்ட் 18ஆம் திகதி கைது செய்யப்பட்டிருந்த வசந்த முதலிகே பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் 90 நாள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டு அதன் பின்னர் தொடர்ச்சியாக விளக்கமறியலில் வைக்கப்பட்டு வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment