ஒரு மாதமாகக் கடலில் பட்டினியுடன் தத்தளித்த ரொஹிங்கியர் கரையொதுங்கினர் : காணாமல் போன 180 பேரின் நிலை என்ன? - News View

About Us

About Us

Breaking

Tuesday, December 27, 2022

ஒரு மாதமாகக் கடலில் பட்டினியுடன் தத்தளித்த ரொஹிங்கியர் கரையொதுங்கினர் : காணாமல் போன 180 பேரின் நிலை என்ன?

அடைக்கலம் தேடி பயணித்த படகின் இன்ஜின் பழுதானதால், நடுக்கடலில் உணவின்றி ஒரு மாத காலமாக தவித்துள்ளனர் அதில் பயணித்த 180 ரொஹிங்கிய முஸ்லிம்கள். எங்கு நடந்தது இந்த சம்பவம்? அவர்களுக்கு என்ன ஆனது?

1900 கிலோ மீட்டர் கடல் பயணத்திற்கு பிறகு இறுதியாக இந்த படகில் பயணித்தவர்களை இந்தோனேசியாவின் அட்சே பிராந்தியத்திற்குள் நுழைய கடந்த ஞாயிற்றுக்கிழமை அனுமதி அளிக்கப்பட்டது.

என்ன நடந்தது?
கடந்த நவம்பர் 25ஆம் திகதியன்று தெற்கு வங்கதேசத்தில் உள்ள ரொஹிங்கிய அகதிகள் முகாமில் இருந்து பெண்கள், குழந்தைள் உட்பட 180 பேருடன் இந்தோனேசியா நோக்கி புறப்பட்ட மீன்பிடிப் படகு, 6 நாட்கள் கழித்து நடுக்கடலில் இன்ஜின் பழுதாகி நின்றது.

அந்த படகை பழுது பார்க்க வழியில்லாத நிலையில், கடலின் நீரோட்டத்தாலும், காற்றின் திசை வேகத்தாலும் அந்த படகு இந்தோனேசீயாவின் வட முனை நோக்கி தானாக மிதந்து செல்லத் தொடங்கியது.

படகில் புறப்பட்டு சென்றவர்களை தொடர்பு கொண்டு இன்ஜின் பழுதான விவரம் தெரியவந்த பின்னர் உறவினர்கள் அகதிகளுக்கான ஐ.நா அமைப்பின் உதவியை நாடினர்.

பழுதான படகில் உணவின்றி ஒரு சிலர் இறந்து விட்ட நிலையில், இந்தியா மற்றும் இந்தோனேசியா அதிகாரிகளின் உதவியை நாடியது அகதிகளுக்கான ஐ.நா அமைப்பு.

உதவிய இந்திய கடற்படை
பின்னர் தெற்கு நிகோபார் தீவுகளுக்கு அருகே இந்த படகு வந்தபோது, அதனை கண்ட இந்திய கடற்படை, படகில் இருந்தவர்களுக்கு உணவு, தண்ணீர் வழங்கி உதவியது. மேலும் அந்த படகை தங்களது கப்பல் மூலம் இந்தோனேனீசியாவின் கடல் பகுதிக்கு அருகே இழுத்து வந்து விட்டுச் சென்றது இந்திய கடற்படை.

இந்தோனேசியாவின் நிலப்பரப்புக்கு அருகே கடலில் நின்று கொண்டு இருந்த படகில் இருந்தவர்களில் சிலருக்கு மட்டும், அந்நாட்டிற்குள் நுழைய 6 நாட்களுக்கு பிறகு அனுமதி வழங்கப்பட்டது.

இதேபோல வேறொரு படகு மூலம் இந்தோனேனீசியாவிற்கு வந்த 57 நபர்கள் மீட்கப்பட்டதாக அட்சே பெசார் மாவட்ட உள்ளூர் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

பசியுடன் மீட்கப்பட்ட ரொஹிங்கிய முஸ்லிம்கள்
படகில் இருந்து மீட்கப்பட்டவர்கள் அனைவரும் பல நாட்களாக உணவின்றி கடலில் தவித்த நிலையில், மீட்கப்படும் போது அனைவரும் பசியுடனும், சோர்வாகவும் இருந்ததாக அட்சே பெசார் மாவட்டத்தின் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார். இதில் 3 பேர் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக அவர் கூறினார்.

மீட்கப்பட்ட ரொஹிங்கிய முஸ்லிம்களை அரசின் காப்பகங்களில் தற்காலிமாக தங்க வைப்பதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக உள்ளூர் குடியுரிமை அதிகாரி, ஏ.எஃப்.பி செய்தி முகமையிடம் தெரிவித்துள்ளார்.

புலம்பெயர்பவர்களுக்கான சர்வதேச அமைப்பு, கடந்த காலங்களில் உயிரை பணயம் வைத்து மலேசியா, இந்தோனேசியாவுக்கு அடைக்கலம் தேடி படகில் வரும் ரொஹிங்கிய முஸ்லிம்களின் எண்ணிக்கை அதிகரித்து இருப்பது கவலையளிப்பதாக தெரிவித்துள்ளது.

மியன்மார் மற்றும் பங்களாதேஷத்தில் உள்ள ரொஹிங்கிய முஸ்லிம்கள் அகதிகள் மையத்தில் இருந்து கடந்த 2 மாதங்களில் மட்டும் 5 படகுகள் வரை அடைக்கலம் தேடி புறப்பட்டு சென்று இருக்கிறது.

காணாமல் போன 180 பேர் நிலை என்ன?
பங்களாதேஷத்தில் இருந்து 180 ரொஹிங்கிய முஸ்லிம்களுடன் புறப்பட்ட மற்றொரு படகின் நிலை குறித்து எந்த வித தகவலும் கிடைக்காதது கவலையளிப்பதாக, ஐ.நாவின் அகதிகளுக்கான முகமை தெரிவித்துள்ளது.

அவர்கள் பயணித்த படகு உடைந்து மூழ்கி இருப்பதற்கான சாத்தியம் இருப்பதால், அதில் பயணித்த 180 பேரும் இறந்திருக்கக்கூடும் என அந்த அமைப்பின் செய்தித் தொடர்பாளர் பாபர் பலோச் தெரிவித்துள்ளார்.

காணாமல் போன படகில் பயணம் செய்தவர்களின் உறவினர்களுடன் தொடர்ந்து பேசி வருவதாக அவர் குறிப்பிட்டார்.

ரொஹிங்கிய முஸ்லிம்களுக்கு என்ன பிரச்சினை?
மியன்மார் நாட்டில் வசிக்கும் இன சிறுபான்மையினரான ரொஹிங்கிய முஸ்லிம்களுக்கு எதிராக அந்நாட்டின் ராணுவ அத்துமீறல்கள் காரணமாக 10 லட்சத்திற்கும் அதிகமான ரொஹிங்கிய முஸ்லிம்கள் அந்நாட்டை விட்டு வெளியேறினர்.

இவர்களில் பெரும்பாலானோர் தெற்கு பங்களாதேஷத்தில் உள்ள அகதிகள் மூகாமில் தஞ்சம் புகுந்துள்ளனர்.

அகதிகள் மூகாமில் இருக்கும் அதிக மக்கள் நெருக்கடி காரணமாகவும், பிழைப்புக்காகவும் புகலிடம் தேடி ஆயிரக்கணக்கான ரொஹிங்கிய முஸ்லிம்கள் படகுகள் மூலமாக மலேசியா மற்றும் இந்தோனேசியா நாடுகளுக்கு அண்மைக்காலமாக செல்லத் தொடங்கியுள்ளனர்.

No comments:

Post a Comment