பங்களாதேஷில் வெடித்துச் சிதறிய கென்டெய்னர்கள் : 34 பேர் பலி, 450 பேர் காயம் : இரசாயனங்கள் கடலில் கலப்பதை தவிர்க்க பணியாற்றும் ராணுவம் - News View

About Us

About Us

Breaking

Sunday, June 5, 2022

பங்களாதேஷில் வெடித்துச் சிதறிய கென்டெய்னர்கள் : 34 பேர் பலி, 450 பேர் காயம் : இரசாயனங்கள் கடலில் கலப்பதை தவிர்க்க பணியாற்றும் ராணுவம்

பங்களாதேஷின் சிட்டகாங் நகர் அருகே உள்ள ஒரு சேமிப்பு கிடங்கில் உண்டான தீ மற்றும் வெடிப்புச் சம்பவத்தால் குறைந்தது 34 பேர் உயிரிழந்துள்ளனர், 450 பேர் காயமடைந்துள்ளனர். மேலும் பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் என உயர்மட்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சீதாகுண்டா எனும் இடத்தில் இருக்கும் இந்த சேமிப்பு கிடங்கில் வைக்கப்பட்டிருந்த கெண்டெய்னர்கள் வெடித்துச் சிதறியதால், இன்று (05) காலை உண்டான தீயைக் கட்டுப்படுத்த நூற்றுக்கணக்கான மக்கள் அந்த இடத்தில் திரண்டனர்.

தீ ஏற்பட்டதற்கான காரணம் இன்னும் தெரியவில்லை. ஆனால் இந்த கெண்டெய்னர்கள் சிலவற்றில் வேதிப் பொருள்கள் சேமித்து வைக்கப்பட்டிருந்தன.

விபத்து நடந்த பகுதியில் இருக்கும் மருத்துவமனைகள் நிரம்பி வழிகின்றன. உடனடியாக ரத்ததானம் செய்ய முன் வரவேண்டும் என்று அங்குள்ள மக்களை மருத்துவமனைகள் கோரியுள்ளன.

காயமடைந்தவர்களில் பெரும்பாலானவர்கள் மிகவும் கவலைக்கிடமான நிலையில் இருப்பதால் உயிரிழப்புகள் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.

''நான் நின்ற இடத்தில் இருந்து 10 மீட்டர் தூரத்துக்கு இந்த வெடிப்பு என்னை தூக்கி வீசியது. என்னுடைய கைகள் மற்றும் கால்கள் எரிந்து போயின'', என்று அப்பகுதியில் இருந்த லொரி டிரைவர் தோஃபேல் அகமது என்பவர் ஏ.எஃப்.பி செய்தி முகமையிடம் தெரிவித்துள்ளார்.

மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ள தன்னார்வலர் ஒருவர் தீயால் பாதிக்கப்பட்ட பகுதியில் இன்னும் அதிகமான உடல்கள் இருப்பதை தாம் பார்த்ததாக அந்த செய்தி முகமையிடம் தெரிவித்துள்ளார்.

தீயணைப்பு வீரர்கள் குறைந்தது ஐந்து பேரும் இந்த வெடிப்பில் உயிரிழந்தனர். பல தீயணைப்பு வீரர்களுக்கு காயம் ஏற்பட்டுள்ளது.

அருகே பல கிலோ மீட்டர் தூரத்துக்கு இந்த வெடிப்புச் சத்தம் கேட்கும் அளவுக்கு இது மிகப்பெரிய வெடிப்பாக இருந்தது. அருகே இருந்த கட்டடங்களின் கதவு, ஜன்னல்கள் அதிர்ந்து போயின.

''நெருப்பு பந்துகள் மழைபோல பொழிவது போல'' இந்த வெடிப்புச் சம்பவம் இருந்தது என்று அப்பகுதியில் கடை வைத்திருக்கும் ஒருவர் அங்கிருந்த செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

அரை கிலோ மீட்டர் தூரத்துக்கு பறந்து வந்த தீப்பிடித்த பொருளொன்று தமது அருகாமையில் விழுந்தது என்றும் அவர் கூறியுள்ளார்.

தீ விபத்து நடந்த சேமிப்புக் கிடங்கின் சிதைந்துபோன கூரையின் படங்களையும், கென்டெய்னர்களின் எச்சங்களையும் காட்டும் படங்களும் வெளியாகியுள்ளன.

ஞாயிறு காலை நிகழ்ந்த இந்த வெடி விபத்தால் உண்டான தீயை கட்டுப்படுத்த தீயணைப்பு வீரர்கள் கடுமையாக போராடி வருகின்றனர். தொடர்ந்து வெடிப்புச் சம்பவங்கள் நிகழ்ந்து வருவதால் தீயை கட்டுப்படுத்துவது மிகவும் கடினமானதாக உள்ளது என்று தீயணைப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இரசாயனங்கள் கடலில் கலப்பதை தவிர்ப்பதற்காக ராணுவமும் அப்பகுதியில் பணியாற்றி வருகிறது. ராணுவ மருத்துவமனைகளும் காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்க உதவி செய்து வருகின்றன.

சிட்டகாங் நகரில் இருந்து 40 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது சீதாகுண்டா.துறைமுகத்தில் இருந்து அனுப்பி வைக்கப்படும் கென்டெய்னர்களை மாற்றுவதற்கான இடமாக இந்த சீதாகுண்டா சேமிப்புக் கிடங்கு உள்ளது. சிட்டகாங் நகரம் பங்களாதேஷத்தின் இரண்டாவது மிகப்பெரிய நகரமாகும்.

No comments:

Post a Comment