இடைக்கால அரசுக்கு இணக்கம் தெரிவிக்காவிடின் சங்க மஹா பிரகடனத்தை அறிவிப்போம் : பிரதமர் உட்பட அமைச்சரவை பதவி விலக வேண்டும் : ஒரு குடும்பத்திற்காக நாட்டை பலி கொடுக்க முடியாது - பேராசிரியர் ஒலகன்வத்தே சந்திரசிறி தேரர் - News View

About Us

About Us

Breaking

Sunday, May 1, 2022

இடைக்கால அரசுக்கு இணக்கம் தெரிவிக்காவிடின் சங்க மஹா பிரகடனத்தை அறிவிப்போம் : பிரதமர் உட்பட அமைச்சரவை பதவி விலக வேண்டும் : ஒரு குடும்பத்திற்காக நாட்டை பலி கொடுக்க முடியாது - பேராசிரியர் ஒலகன்வத்தே சந்திரசிறி தேரர்

(இராஜதுரை ஹஷான்)

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உட்பட அமைச்சரவை முழுமையாக பதவி விலக வேண்டும். இடைக்கால அரசாங்கத்தை ஸ்தாபித்து நாட்டு மக்கள் எதிர்கொண்டுள்ள அடிப்படை பிரச்சினைகளுக்கு பாராளுமன்ற மட்டத்தில் தீர்வு காண வேண்டும். நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியின் அதிகாரம் முழுமையாக குறைக்கப்பட வேண்டும் என்று பேராசிரியர் ஒலகன்வத்தே சந்திரசிறி தேரர் தெரிவித்தார்.

இடைக்கால அரசாங்கத்திற்கு எதிர்க்கட்சிகள் இணக்கம் தெரிவிக்காவிடின் சகல அரசியல் கட்சிகளையும் புறக்கணித்து, மகாநாயக்க தேரர்களையும், மகா சங்கத்தினரையும் ஒன்றிணைத்து சங்க மஹா பிரகடனத்தை நாட்டிற்கு அறிவிப்போம் என்றும் பேராசிரியர் ஒலகன்வத்தே சந்திரசிறி தேரர் சுட்டிக்காட்டினார்.

நாடளாவிய ரீதியில் உள்ள 12000 விகாரைகளிலிருந்து சுமார் ஆயிரம் பௌத்த தேரர்கள் நேற்று சனிக்கிழமை கொழும்பு பௌத்த மகா சம்மேளன சபையில் இருந்து கொழும்பு சுதந்திர சதுக்கம் வரை நடைபேரணியாக சென்றனர்.

பின்னர் சுதந்திர சதுக்கத்தில் சங்க மகா பிரகடனத்திற்கான மகா மாநாடு இடம்பெற்றது. இம்மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே பேராசிரியர் ஒலகன்வத்தே சந்திரசிறி தேரர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ சுய சிந்தனையில் உள்ளாரா, இல்லையா என்பது சந்தேகத்திற்கிடமாக உள்ளது. நாட்டு மக்கள் பொருளாதார ரீதியில் பாரிய நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ளார்கள்.

வாழ்வா? சாவா? என்ற போராட்டத்தை தாங்கிக் கொள்ள முடியாத நிலையில் மக்கள் நாடு தழுவிய ரீதியில் அரசாங்கத்திற்கு எதிராக போராட்டங்களில் ஈடுபடுகிறார்கள்.

அரசாங்கத்திற்கு எதிராக போராட்டங்களில் ஈடுபடாதவர்களை காண்பது ஆச்சரியமாகவே உள்ளது. ஒரு குடும்பத்தின் அதிகார போராட்டத்திற்கு நாட்டை பலி கொடுக்க முடியாது.

ஜனாதிபதி உட்பட அரசாங்கத்தின் மீது நாட்டு மக்கள் எவருக்கும் நம்பிக்கை கிடையாது. மக்களின் நம்பிக்கை இல்லாதொழிந்தால் அதனை மீள கட்டியெழுப்புவது சாத்தியமற்றது. என்றுமில்லாதளவிற்கு மக்கள் அரசாங்கத்தையும், அரசியல் கட்டமைப்பையும் கடுமையாக விமர்சிக்கிறார்கள்.

நாட்டு மக்களின் கருத்துக்கும் அபிலாசைக்கும் ஜனாதிபதி உட்பட பிரதமர் அவதானம் செலுத்த வேண்டும். பௌத்த ஆலோசனைகள் வழங்கும் போது தலையை அசைப்பதால் மாத்திரம் எவ்வித பயனும் ஏற்படாது.

பௌத்த மக்களின் ஆதரவுடன் ஆட்சிக்கு வந்துள்ளோம், சிங்கள பௌத்த அரசாங்கம் என பெருமைப்பட்டுக் கொண்டவர்கள் மகா சங்கத்தினரது ஆலோனைக்கமைய பதவி விலக வேண்டும் என்றார்.

இதன்போது சங்க மகா பிரகடனத்தின் வாக்குறுதிகளும் பேராசிரியர் ஒலகன்வத்தே சந்திரசிறி தேரரால் வெளியிடப்பட்டன.

அவையாவன

நாடு பாரிய பொருளாதார நெருக்கடியினை எதிர்கொண்டுள்ளது. அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடி விரைந்து தீர்வு காண வேண்டும். விசேட ஆலோசனைகளுக்கமைய தீர்வு தீர்மானங்களை முன்னெடுப்பது அவசியமாகும். மக்களின் போராட்டம் குறைவடைவதற்கு அரசாங்கம் அவதானம் செலுத்த வேண்டும்.

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியின் அதிகாரங்கள் குறைக்கப்பட்டு பாராளுமன்றத்தின் அதிகாரங்கள் பலப்படுத்தப்பட வேண்டும். அரசியலமைப்பு திருத்தம் கட்டாயமானதாகும். பாராளுமன்றில் அங்கம் வகிக்கும் சகல கட்சிகளையும் உள்ளடக்கிய வகையில் இடைக்கால அரசாங்கத்தை ஸ்தாபிப்பது குறுகிய கால தீர்வாக அமையும்.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உட்பட முழு அமைச்சரவையும் முழுமையாக பதவி விலக வேண்டும். இடைக்கால அரசாங்கத்திற்கு சகல கட்சிகளும் இணக்கம் தெரிவிக்க வேண்டும் இல்லாவிடின் மகா சங்கத்தினரையும், மகாநாயக்க தேரர்களையும் ஒன்றினைத்து சங்க மகா பிரகடனத்தை அறிவிப்போம்.

No comments:

Post a Comment