அரசாங்கம் மக்களுக்கு மறைத்து மேற்கொண்ட உடன்படிக்கையை பாராளுமன்றத்தில் சபைப்படுத்தினார் அநுரகுமார - News View

About Us

About Us

Breaking

Friday, December 10, 2021

அரசாங்கம் மக்களுக்கு மறைத்து மேற்கொண்ட உடன்படிக்கையை பாராளுமன்றத்தில் சபைப்படுத்தினார் அநுரகுமார

ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்

இலங்கை அரசாங்கம் மற்றும் அமெரிக்காவின் நியூ போட்ரஸ் நிறுவனத்திற்கும் இடையில் செய்துகொள்ளப்பட்ட இரகசிய உடன்படிக்கை என்னவென்பதை முன்வைக்குமாறு எதிர்கட்சியினர் தொடர்ச்சியாக சபையில் வலியுறுத்திய போதிலும் அரசாங்கம் உடன்படிக்கையை சபைப்படுத்த மறுத்த நிலையில், நிதி அமைச்சரும் அரசாங்கமும் மூடி மறைத்த உடன்படிக்கையை பொதுமக்கள் பார்வைக்காக சபைப்படுத்துவதாக கூறி மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக குறித்த உடன்படிக்கையை இன்று (நேற்று) பாராளுமன்றத்தில் சபைப்படுத்தினார்.

பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (10) இடம்பெற்ற நிதி அமைச்சு, பொருளாதார கொள்கைகள் மற்றும் திட்ட செயற்படுத்துகை அமைச்சு, நிதி மூலதன சந்தை மற்றும் அரச தொழில் முயற்சி மறுசீரமைப்பு இராஜாங்க அமைச்சு, சமுர்த்தி உள்ளக பொருளாதார, நுண்நிதிய, சுயதொழில் மற்றும் தொழில் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சுக்கான நிதி ஒதுக்கீடுகள் மீதான குழு நிலை விவாதத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில், இலங்கை அரசாங்கம் மற்றும் நியூ போட்ரஸ் நிறுவனத்திற்கு இடையில் செய்துகொள்ளப்பட்ட உடன்படிக்கை என்ன என்பதை சபையில் சமர்பிக்க வேண்டும் என பல்வேறு சந்தர்ப்பங்களில் நான் கேட்டிருந்தேன். உடன்படிக்கையை சபையில் சமர்பிப்பதாக அரசாங்கம் வாக்குறுதி கொடுத்தும் இன்றுவரை அதனை சபைப்படுத்தவில்லை.

ஆகவே இன்றைய விவாதத்திற்கு இந்த உடன்படிக்கை மிகவும் அவசியமான ஒன்றாகும். இது குறித்த அமைச்சரவைப் பத்திரம் என்னிடம் இல்லை, நிதி அமைச்சர் பஷில் ராஜபக்ஷவின் கையொப்பத்துடன் திறைசேரி செயலாளர் மூலமாக இந்த உடன்படிக்கையை செய்துகொள்ள வலியுறுத்தப்பட்டுள்ளது.

அதேபோல் ஸ்ரீலங்கா அரசாங்கம் மற்றும் நியூ போட்ரஸ் நிறுவனத்திற்கு இடையில் செய்துகொண்ட உடன்படிக்கையை அரசாங்கம் பாராளுமன்றத்திற்கு சபைப்படுத்தாது மறைத்தாலும் என்னிடம் இந்த உடன்படிக்கை உள்ளது.

சஜித் ருசீக்க ஆட்டிகல இலங்கை தரப்பில் கைச்சாத்திட்டுள்ள கெரவலப்பிட்டி மின் நிலையத்தை அமெரிக்காவுக்கு ஒப்படைக்கும் இந்த உடன்படிக்கையை என்ன என்பதை நாம் பார்த்துவிட்டோம்.

நாம் இதன் உண்மைகளை அறிந்துகொள்ள தொடர்ச்சியாக வலியுறுத்தியும், கேள்வி எழுப்பியும், உடன்படிக்கையின் காரணிகளை வெளிப்படுத்தியும் அதனை அரசாங்கம் திட்டமிட்டே மூடி மறைத்து வந்தது.

ஆனால் பொதுமக்கள் பிரதிநிதிகள் என்ற ரீதியில் இதனை மக்களுக்கு வெளிப்படுத்த வேண்டிய கடமை எமக்கு உள்ள காரணத்தினால் அரசாங்கம் மூடி மறைத்த இந்த உடன்படிக்கையை, நிதி அமைச்சரும், எரிசக்தி அமைச்சரும் சபைப்படுத்த மறுத்த உடன்படிக்கையை நான் சபைப்படுத்துகின்றேன்.

அமைச்சரவையில் அனுமதி வழங்கப்பட்ட நிறுவனத்துடன் இந்த உடன்படிக்கை செய்துகொள்ளாது வேறொரு நிறுவத்துடன் உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டுள்ளது.

இலங்கை நிறுவனமொன்று ஆனால் அமெரிக்காவில் பதிவை கொண்டுள்ள நிறுவனமொன்று எவ்வாறு இந்த உடன்படிக்கையை செய்ய முடியும். அதேபோல் இரகசியத்தன்மை என்ற சரத்தை அடிப்படையாக வைத்து இரண்டு தரப்பும் இணக்கம் தெரிவிக்கும் வரையில் இரண்டு ஆண்டுகளுக்கு நாட்டுக்கும் மக்களுக்கும் வெளிப்படுத்த முடியாது என்ற இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது.

இது எந்த விதத்திலும் நியாயமற்ற, நாட்டிற்கு பொருத்தம் இல்லாத ஒன்றாகும். நாட்டின் வளத்தை இவ்வாறு விற்க இவர்களுக்கு யார் அனுமதி கொடுத்தது.

ஆகவே இந்த மோசடி காரணமாகவே அரசாங்கம் உடன்படிக்கையை மறைத்தது. ஆகவே நாட்டு மக்களும், பாராளுமன்ற உறுப்பினர்களும் தெரிந்துகொள்ளும் விதமாக நான் இந்த உடன்படிக்கையை சபைப்படுத்துகின்றேன் என்றார்.

No comments:

Post a Comment