அமெரிக்காவைச் சேர்ந்த வீட்டு வசதி கடன் நிறுவனம் ஒன்றில் சூம் மீட்டிங் வாயிலாக 900 பணியாளர்களை பணி நீக்கம் செய்த அந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி கடும் விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ளார்.
இந்திய வம்சாவளியைச் சேர்ந்த விஷால் கார்க் என்பவர், பெட்டர்.கொம் என்ற வீட்டு வசதி கடன் நிறுவனத்தை நடத்தி வருகிறார். இந்த வலைத்தளத்தில் புரோக்கர் கட்டணமின்றி நிலம், வீடு வாங்க கடன் வசதி பெறலாம்.
இந்நிலையில், சூம் மீட்டிங் வாயிலாக 900 பணியாளர்களை பணிநீக்கம் செய்துள்ளார் விஷால் கார்க்.
விஷால் கார்க், அந்த சூம் மீட்டிங்கில், "நீங்கள் இந்த அழைப்பில் இடம்பெற்றிருந்தீர்கள் என்றால் இன்று நமது நிறுவனத்தில் நடைபெறும் ஆட்குறைப்பில் நீங்களும் ஒருவர். நீங்கள் துரதிர்ஷ்டவசமான குழுவைச் சேர்ந்தவர். கடந்த முறை இதே முடிவை எடுத்தபோது நான் அழுதேன்" என தெரிவித்துள்ளார். இச்செய்தி சமூக ஊடகங்கள் வழியாக தெரியவந்துள்ளது.
கிறிஸ்துமஸ் பண்டிகை நெருங்கி வரும் நிலையில்,இந்த நடவடிக்கை மிகவும் கடுமையானது என பலரும் சமூக ஊடகங்களில் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
இந்நடவடிக்கை தொடர்பாக விஷால் கார்க் கூறுகையில், பணியாளர்களின் செயல்திறன், சந்தை மாற்றங்களால் 15 சதவீத பணியாளர்கள் நீக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
ஆனால், கடந்த வாரம் முதலீட்டாளர்களிடமிருந்து பெறப்பட்ட 750 மில்லியன் டொலர் குறித்து விஷால் கார்க் ஏதும் குறிப்பிடவில்லை.
அந்நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரி கெவின் ரியான் கூறுகையில், "இந்த சமயத்தில் பணி நீக்கம் செய்வது மிகவும் கவலையளிப்பதாக உள்ளது. எனினும், வேகமாக வளர்ந்து வரும் வீட்டு வசதி சந்தையில் வளர்ச்சியடைய கவனம் முழுவதையும் அதில் செலுத்தும் பணியாளர்களே தேவை" என தெரிவித்தார்.
பணி நீக்கம் செய்யப்பட்ட தனது நிறுவனத்தின் ஊழியர்கள் சக ஊழியர்கள் மற்றும் வாடிக்கையாளர்களிடமிருந்தும் பணத்தைத் திருடுகிறார்கள் என, முன்னதாக தான் எழுதிய அநாமதேய வலைப்பதிவில் விஷால் கார்க் குற்றம் சாட்டியுள்ளதாக ஃபார்ச்சூன் இதழ் தெரிவித்துள்ளது.
மேலும், அப்பதிவில், எட்டு மணி நேரத்திற்கான ஊதியத்தைப் பெற்றுக் கொண்டு ஒருநாளில் இரண்டு மணி நேரம் மட்டுமே அவர்கள் பணி செய்வதாகவும் விஷால் கார்க் தெரிவித்துள்ளார்.
இதற்கு முன்னதாகவும் இவ்வாறான பணி நீக்கத்துக்காக பெயர் பெற்றவர் விஷால் கார்க், ஒரு முறை ஊழியர்களுக்கு அனுப்பிய மின்னஞ்சல் ஃபோர்ப்ஸ் பத்திரிகைக்குக் கிடைத்தது.
அந்த மெயிலில் அவர், "நீங்கள் படு மந்தமாக இருக்கிறீர்கள். மந்தமான டொல்பின்கள் எனக்கு வேண்டாம். நீங்கள் என்னை தர்மசங்கடத்துக்கு ஆளாக்குறீர்கள். உங்கள் பணியை இத்தோடு முடித்துக் கொள்ளுங்கள்" என்று அந்த மெயிலில் குறிப்பிட்டிருந்தார்.
பணி நீக்க நடவடிக்கையை பிரிட்டனின் சார்ட்டர்ட் மேனேஜ்மென்ட் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ஆன் ஃப்ராங்க் விமர்சித்துள்ளார்.
"மோசமான மேலாளர்கள், நேரடியாகவோ அல்லது மெய்நிகர் வாயிலாகவோ மிக மோசமாக பணிநீக்கம் செய்வார்கள்" என தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment