(எம்.மனோசித்ரா)
சுகாதார அமைச்சின் செயலாளர் மேஜர் ஜெனரல் சஞ்சீவ முணசிங்கவின் இராணுவ மயமான செயற்பாட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் 5 மாவட்டங்களில் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட தீர்மானித்துள்ளதாக அதன் மத்திய மற்றும் ஊடகக்குழு உறுப்பினர் வைத்தியர் வாசன் ரட்ணசிங்கம் தெரிவித்தார்.
அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில், அரச மருத்துவ அதிகாரிகளின் பங்குபற்றலின்றி உள்ளக பயிற்சியை நிறைவு செய்து, வைத்திய நிபுணத்துவதிற்காக காத்திருக்கின்றவர்களுக்கான இடமாற்று பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. எனினும் இது இடமாற்ற சபையில் சகலரதும் ஒத்துழைப்பின் கீழ் வெளியிடப்படவில்லை.
கடந்த அரசாங்கத்தின் போது ஏற்பட்டதைப் போன்று, இம்முறையும் பல குளறுபடிகள் ஏற்பட்டுள்ளன. இதனால் பல இடங்களில் வைத்தியர்களுக்கான பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.
கொவிட் சிகிச்சை நிலையங்களில் பணிபுரியும் வைத்தியர்களின் இடமாற்றங்களினால் குறித்த பகுதிகளிலுள்ள வைத்தியர்களுக்கு பற்றாக்குறை ஏற்படுகிறது. சுகாதார அமைச்சின் செயலாளர் மேஜர் ஜெனரல் சஞ்சீவ முணசிங்கவின் இராணுவமயமான செயற்பாடே இதற்கு காரணமாகும்.
வைத்தியர்கள் பற்றாக்குறை ஏற்படக்கூடிய இரத்தினபுரி, நுவரெலியா, பொலன்னறுவை, திருகோணமலை மற்றும் மன்னார் ஆகிய மாவட்டங்களில் காணப்படுகின்ற வைத்தியசாலைகள் உள்ளிட்ட சுகாதார நிலையங்களில் நாளை திங்கட்கிழமை காலை 8 மணி முதல் தொழிற்சங்க நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தீர்மானித்துள்ளது.
நாளை (20) காலை 8 மணி முதல் 24 மணித்தியாலங்களுக்கு இந்த அடையாளப் பணிப்பகிஷ்கரிப்பு மேற்கொள்ளப்படவுள்ளது. பணிப்பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்பட்டாலும், அவசர சிகிச்சைப் பிரிவுகளின் நடவடிக்கைகள் முன்னெடுக்கடும் என அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் குறிப்பிட்டுள்ளது.
No comments:
Post a Comment