(இராஜதுரை ஹஷான்)
இறக்குமதி செய்யப்படும் உரம் அவசியம் என உறுதிப்படுத்தப்பட்ட பயிர்ச் செய்கைகளுக்கு தேவையான உரம் மற்றும் கிருமி நாசினிகளை மூன்று அமைச்சுக்கள் ஊடாக இறக்குமதி செய்ய விவசாயத்துறை அமைச்சு அனுமதி வழங்கியுள்ளது.
அதற்கமைய தேயிலை மற்றும் தெங்கு உட்பட பெருந்தோட்ட பயிர்ச் செய்கைக்கு தேவையான உரத்தை பெற்றுக் கொள்வதற்கான அறிவுறுத்தல் மற்றும் அனுமதிப்பத்திரம் வழங்கும் பொறுப்பு பெருந்தோட்ட அமைச்சுக்கு வழங்கப்பட்டுள்ளது.
சுற்றுலாத்துறை சேவை கைத்தொழிலுக்கு அவசியமான பூக்கள் உட்பட்ட அதனுடன் தொடர்புடைய பயிர்ச் செய்கைக்கு தேவையான அனுமதிப்பத்திரத்தை விநியோகிக்கும் அதிகாரம் சுற்றுலாத்துறை அமைச்சுக்கு வழங்கப்பட்டுள்ளது.
நீர் மூலமான பயிர்ச் செய்கை, வளியை அடிப்படையாகக் கொண்ட பயிர்ச் செய்கை ஆகியவற்றுக்கு தேவையான உர இறக்குமதிக்கான அனுமதிப்பத்திரம் விவசாயத்துறை அமைச்சின் ஊடாக விநியோகிக்கப்படும்.
பெரும்போக விவசாய நடவடிக்கைகளுக்கு தேவையான சிறந்த உரத்தை வழங்குமாறு கோரிக்கையை முன்வைத்து விவசாயிகள் நாடு தழுவிய ரீதியில் தொடர் போராட்டத்தில் ஈடுப்பட்டு வருகிறார்கள்.
சேதனப் பசளையையும், அரசாங்கம் தற்போது வழங்கும் நெனோ நைட்ரஜன் கிருமிநாசினியையும் பயன்படுத்தும் முறைமை தமக்கு தெரியாது. ஆகவே இரசாயன உரத்தை தமக்கு பெற்றுத்தருமாறு விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளார்கள்.
பெரும்போகத்திற்கு தேவையான சேதனப் பசளை உரம் மற்றும் நெனோ நைட்ரஜன் கிருமிநாசினிகள் நாடு தழுவிய ரீதியில் உள்ள அனைத்து விவசாய திணைக்களங்களுக்கும் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளன.
ஆகவே விவசாயிகள் பெரும்போக விவசாய நடவடிக்கைகளில் ஈடுப்படுவது அவசியமாகும் என விவசாயத்துறை அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
No comments:
Post a Comment