தடுப்பூசி வழங்கப்படாதவர்களுக்கு மீண்டும் திங்கள் முதல் வழங்கப்படும் : கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் - News View

About Us

About Us

Breaking

Saturday, September 4, 2021

தடுப்பூசி வழங்கப்படாதவர்களுக்கு மீண்டும் திங்கள் முதல் வழங்கப்படும் : கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர்

கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பிரிவில் கொவிட்19 இரண்டாவது தடுப்பூசி வழங்கப்படாதவர்களுக்கு எதிர்வரும் திங்கட்கிழமை (06) முதல் தடுப்பூசிகள் வழங்கப்படவுள்ளதாக, கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி டாக்டர் ஜீ. சுகுணன் தெரிவித்தார்.

இதுவரையில் 02 இலட்சம் கொவிட்-19 முதலாவது தடுப்பூசியும், 01 இலட்சத்தி 10 ஆயிரம் இரண்டாவது தடுப்பூசியும் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும், இதில் முதலாவது தடுப்பூசி 01 இலட்சத்தி 99 ஆயிரத்தி 16 நபர்களுக்கும், இரண்டாவது தடுப்பூசி 97 ஆயிரத்தி 977 நபர்களுக்கும் ஏற்றப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

கிடைக்கப்பெறவுள்ள மேலும் ஒரு தொகுதி சினோபாம் கொவிட்-19 இரண்டாவது தடுப்பூசி கிரமமான முறையில் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பிரிவிலுள்ள 13 சுகாதார வைத்தியதிகாரி பிரிவுகளிலும், 07 ஆதார வைத்தியாசாலைகளிலும், 13 பிரதேச வைத்தியசாலைகளிலும் மற்றும் சுகாதார வைத்தியதிகாரி பிரிவுகளில் விசேடமாக அமைக்கப்பட்டுள்ள கொவிட்-19 தடுப்பூசி ஏற்றும் விசேட மையங்களிலும் இரண்டாவது தடுப்பூசி வழங்கப்படவுள்ளதாகவும் தெரிவித்தார்.

முதலாவது தடுப்பூசி பெற்றுக் கொண்டவர்கள், இரண்டாவது தடுப்பூசி இதுவரை பெறாதவர்கள் தத்தமது சுகாதார வைத்தியதிகாரி பிரிவுகளில் ஏற்படுத்தப்பட்டுள்ள தடுப்பூசி ஏற்றும் நிலையங்களுக்குச் சென்று தங்களுக்கான இரண்டாவது தடுப்பூசியினை பெற்றுக் கொள்ளுமாறு கேட்டுள்ளார்.

இரண்டாவது தடுப்பூசி ஏற்றுவது தொடர்பாக பொது மக்களுக்கு பொது அறிவித்தல்கள் விடுக்கப்படுமெனவும், அவ் அறிவுறுத்தலுக்கமைய தடுப்பூசி வழங்கப்படும் மையங்களுக்குச் சென்று முன்னுரிமை அடிப்படையில் தங்களுக்கான தடுப்பூசிகளை பெற்றுக் கொள்ளுமாறும், இது தொடர்பாக மேலதிக தகவல் தேவைப்படுவோர் சம்மந்தப்பட்ட சுகாதார வைத்தியதிகாரிகள் மற்றும் பொதுச் சுகாதார பரிசோதகர்களிடம் பெற்றுக் கொள்ளலாமெனவும் அறிவித்துள்ளார்.

இதேவேளை விசேட தேவையுள்ளவர்கள் மற்றும் வயோதிபர்கள் ஆகியோருக்கு வீடு வீடாக சென்று தொடர்ந்தும் நடமாடும் சேவையூடாக தடுப்பூசி வழங்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

ஒலுவில் விசேட நிருபர்

No comments:

Post a Comment