அவுஸ்திரேலியாவில் தெரு ஒன்றுக்கு தமிழ்க் கவிஞர் கவிக்கோ அப்துல் ரகுமான் பெயர் - News View

About Us

About Us

Breaking

Sunday, August 29, 2021

அவுஸ்திரேலியாவில் தெரு ஒன்றுக்கு தமிழ்க் கவிஞர் கவிக்கோ அப்துல் ரகுமான் பெயர்

'பித்தா பிறைசூடிப் பெருமானே அருளாளா' என்று தொடங்கும் சுந்தரர் தேவாரப் பாடல் எப்படி பக்தி இயக்க காலத்தின் அடையாளமாக இருக்கிறதோ அதைப்போல அப்துல் ரகுமான் எழுதிய 'பித்தன்' கவிதைகள் நவீனத்துவ தமிழ்க் கவிதை மரபில் ஓர் அழியாத அடையாளம்.

கவிக்கோ என்று புகழப்படும் அப்துல் ரகுமானின் 'பால் வீதி' கவிதைத் தொகுப்பு இன்றும் தமிழில் படிமங்களைப் பயில்வோருக்கு ஒரு பயிற்சிப் பட்டறையாக இருக்கும் நூல். தமிழில் தோன்றிய நவீனத்துவ கவிதை இயக்கமான வானம்பாடி இயக்கத்தில் முக்கிய பங்கேற்பாளர் அப்துல் ரகுமான்.

இப்படி தமிழ்க் கவிதையின் அழுத்தமான அடையாளமாக உள்ள கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவாக அவுஸ்திரேலிய நாட்டில் ஒரு தெருவுக்கு பெயர் சூட்டப்படுகிறது.

மெல்பர்ன் நகரில் உள்ள ஒரு தெருவுக்கு 'கவிக்கோ' தெரு என்று பெயர் சூட்டப்படுவதாகவும், அப்துல் ரகுமான் நினைவாகவே இந்தப் பெயர் வைக்கப்பட்டதாகவும் சிங்கப்பூர் தொழிலதிபர் எம்.ஏ.முஸ்தபா தெரிவித்துள்ளார்.

அவுஸ்திரேலியாவின் மெல்பர்ன் நகரில் அமைய உள்ள புதிய குடியிருப்புப் பகுதியில் ஒரு தெரு இனி, 'கவிக்கோ ஸ்டிரீட்' (Kavikko Street) என்று குறிப்பிடப்படும் என்றும், இது தமக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளித்துள்ளது என்றும் அவர் பிபிசி தமிழிடம் கூறினார்.

மெல்பர்ன் நகரில் தனக்குச் சொந்தமான இடத்தில் புதிய குடியிருப்பு பகுதி ஒன்றை அமைக்கும் பணியை மேற்கொண்டுள்ள அவர், அங்குள்ள தெருக்களுக்கு தமிழில் பெயர் சூட்ட விரும்பியுள்ளார். இதையடுத்து, அவுஸ்திரேலிய அரசாங்கத்திடம் இதற்கான விண்ணப்பத்தை அளித்துள்ளார்.

"அவுஸ்திரேலியாவைப் பொறுத்தவரை ஓரு தெருவுக்கு பெயர் சூட்டுவது என்றால், மூன்று பெயர்களை பொதுமக்கள் அரசுக்குப் பரிந்துரைக்கலாம். அவற்றை அரசாங்கம் பரிசீலிக்கும். ஏதேனும் ஒரு பெயர் ஏற்கப்பட்டால் விவரம் தெரிவிக்கப்படும். இல்லையெனில் மூன்று பெயர்களும் நிராகரிக்கப்படும்.
"அந்த அரசாங்கம் எதன் அடிப்படையில் நாம் பரிந்துரைக்கும் பெயர்களை ஏற்றுக் கொள்கிறது என்பது தெரியாது. எனினும் 'கவிக்கோ' என்று நான் முன்மொழிந்தது ஏற்றுக் கொள்ளப்பட்டதாக எனக்கு அதிகாரபூர்வ தகவல் கிடைத்தது. அவுஸ்திரேலியாவில் இதுவரை எந்தவொரு தெருவுக்கும் தமிழ்ப் பெயர் சூட்டப்பட்டதில்லை என்றே அறிகிறேன். அந்த வகையில் கவிக்கோ பெயரை ஒரு தெரு தாங்கிப்பிடிக்கும் என்பது மகிழ்ச்சி தருகிறது," என்கிறார் முஸ்தபா.

பத்து ஆண்டுகளுக்கு முன்னர் தாம் டெல்லி சென்றிருந்தபோது அங்குள்ள ஒரு சாலைக்கு மகாகவி பாரதியின் பெயர் சூட்டப்பட்டிருப்பதை தாம் பார்க்க நேரிட்டதாகக் குறிப்பிடுபவர், ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் கனடாவில் உள்ள ஒரு சாலைக்கு இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மானின் பெயர் வைக்கப்பட்டதை கேள்விப்பட்டுள்ளார். அதன் பிறகே தமக்கும் அத்தகைய எண்ணம் ஏற்பட்டது என்கிறார்.

"அவுஸ்திரேலியாவில் உள்ள மெல்ட்டன் (Melton) என்ற இடத்தில் ஒரு குடியிருப்புப் பகுதியை நிர்மாணிக்கும் பணியை தொடங்கி உள்ளோம். அப்போது மகாகவி பாரதியார், ஏ.ஆர். ரஹ்மானின் பெயர்களில் அமைந்த தெருக்களின் நினைவு வந்தது. அதேபோன்று அவுஸ்திரேலியாவில் ஏன் நாம் முயற்சி செய்யக்கூடாது? என்று தோன்றியது.

இதையடுத்து, கவிக்கோ தெரு, கவிக்கோ அப்துல் ரஹ்மான், பொயட் கவிக்கோ (Poet Kavikko) என மூன்று பெயர்களை அரசாங்கத்திடம் பரிந்துரைத்தேன். அவற்றுள் 'கவிக்கோ' தெரு என்ற பெயருக்கு அனுமதி கிடைத்துள்ளது.

"இதில் சிபாரிசுக்கு இடமே இல்லை. அரசாங்கம் விரும்பவில்லை எனில் மூன்று பெயர்களுமே நிராகரிக்கப்படலாம். நாங்கள் பரிந்துரைத்த பெயர்கள் குறித்து ஏதேனும் ஆய்வு மேற்கொண்டனரா, ஏதேனும் நடைமுறையைப் பின்பற்றுகிறார்களா என்பது எல்லாம் தெரியாது.

"இதற்காக நான் அதிகம் மெனக்கெட்டேன், உழைத்தேன் என்று சொல்வதெல்லாம் மிகை. விவரம் அறிந்து முயற்சி செய்தேன். அது கைகூடியது, அவ்வளவுதான். மிக விரைவில் அந்த குடியிருப்புப் பகுதி நிர்மாணிக்கப்படும். அங்கு கவிக்கோவின் பெயர் தாங்கிய பலகை அங்குள்ள தெருவில் காணப்படும் என்பதுதான் தகவல்," என்கிறார் முஸ்தபா.

கவிக்கோ பெயரை பரிந்துரைக்க என்ன காரணம் என்று கேட்டால், உலக அளவில் அப்துல் ரகுமான் குறித்து பேச வேண்டும் என்பதே தமது விருப்பம் என்கிறார். மேலும் திரையுலக வெளிச்சம் அதிகம் படாத பெரும் படைப்பாளர்களை உலகறியச் செய்ய வேண்டும் என்று தாம் விரும்புவதாகவும் சொல்கிறார்.
மேலும் 4 தமிழ்ப் பெயர்கள்
"கவிக்கோ அப்துல் ரகுமான், ஈரோடு தமிழன்பன், சிற்பி பாலசுப்ரமணியன், மு.மேத்தா, வைரமுத்து ஆகிய ஐவரும் எனக்கு நன்கு அறிமுகமானவர்கள். இவர்களில் கவிக்கோ காலமாகிவிட்டார் என்பதால் அவரது பெயரை முதலில் பரிந்துரைத்தேன். அடுத்து மிகப்பெரிய குடியிருப்புப் பகுதி நிர்மாணிக்கப்படும் போது மீதமுள்ள நால்வரின் பெயரை அவுஸ்திரேலிய தெருக்களுக்கு சூட்ட வேண்டும் என்பதே எனது விருப்பம், திட்டம்.

"இதேபோல் சிங்கப்பூரைச் சேர்ந்த கவிஞர் இக்பால், மலேசியாவை சேர்ந்த சீனி நைனா முகம்மது ஆகியோரின் பெயர்களையும் சூட்ட விரும்புகிறேன். ஒளிவட்டத்தில் இல்லாத நிறைய கவிஞர்கள் நம்மிடையே வாழ்ந்தனர். கவிஞர்கள் கண்ணதாசன், பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம், வைரமுத்து உள்ளிட்டோர் திரையுலகில் சாதித்ததால் உலக அளவில் அறியப்படுகிறார்கள்.

"ஆனால் கவிக்கோ போன்ற பெரும் படைப்பாளிகள் அந்த அளவுக்குப் பேசப்படுவதில்லை. காலம் சென்ற தமிழக முதல்வர் கருணாநிதியுடன் கவிக்கோ நெருக்கமாக இருந்தார். எனவே தமிழகத்தில் உள்ள நடப்பு அரசாங்கம் கவிக்கோவை பெருமைப்படுத்தும் என எதிர்பார்க்கிறோம். அதற்கான நடவடிக்கைகளை பல்வேறு தரப்பினரும் மேற்கொண்டு வரும் நிலையில், அவுஸ்திரேலியாவில் ஒரு தெருவுக்கு அவரது பெயர் சூட்டப்படுவது உலகத் தமிழர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் என கருதுகிறேன்.

"இந்தத் தகவல் வெளியானது முதல் பல்வேறு நாடுகளில் இருந்து புலம்பெயர் தமிழர்கள் தொடர்பு கொண்டு பேசி வருகின்றனர். மறைந்த பிறகும் கவிக்கோ இன்றளவும் தமிழர்கள் மனதில் நிலைத்துள்ளார் என்பது இதன் மூலம் உறுதியாகிறது," என்கிறார் சிங்கப்பூர் தொழிலதிபர் முஸ்தபா.  

No comments:

Post a Comment