உயிரிழப்போர் உடல் நல்லடக்கத்துக்காக காத்தான்குடியிலிருந்து இலவசமாக பிரேதப் பெட்டி மற்றும் பைகள் - News View

About Us

About Us

Breaking

Friday, August 27, 2021

உயிரிழப்போர் உடல் நல்லடக்கத்துக்காக காத்தான்குடியிலிருந்து இலவசமாக பிரேதப் பெட்டி மற்றும் பைகள்

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை உட்பட மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள வைத்தியசாலைகளில் கொவிட் தொற்றினால் மரணிப்பவர்களின் உடலை அடக்கம் செய்வதற்கான பிரேதப் பெட்டி மற்றும் பைகள் என்பவை காத்தான்குடியிலிருந்து இலவசமாக வழங்கப்பட்டு வருகின்றன.

காத்தான்குடி நகர சபைத் தவிசாளர் எஸ்.எச்.அஸ்பரின் நடவடிக்கையினால் இந்தப் பெட்டிகளும் பைகளும் இலவசமாக வழங்கப்பட்டு வருகின்றன.

காத்தான்குடி நகர சபை தவிசாளர் எஸ்.எச்.அஸ்பர் கொழும்பு மாவட்ட பள்ளிவாயல்களின் சம்மேளனத்திடம் விடுத்த வேண்டுகோளையடுத்து இப்பெட்டிகள் வழங்கப்பட்டுள்ளன. 

அதே போன்று சடலம் வைக்கப்படும் பைகள் காத்தான்குடியிலுள்ள தனவந்தர்களினால் வாங்கி அன்பளிப்பு செய்யப்பட்டுள்ளன.

இப்பெட்டிகள் காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் மண்டபத்தில் அடுக்கி வைக்கப்பட்டுள்ளதுடன், இதுவரை 39 சடலங்களை நல்லடக்கம் செய்ய இவ்வாறு இலவசமாக பெட்டிகள் வழங்கப்பட்டுள்ளன. 

எந்தச் சமயத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும் கொவிட் தொற்றினால் மரணிப்பவர்களின் உடல்களை அடக்கம் செய்வதற்காக இந்தப் பெட்டிகளும் பைகளும் இங்கிருந்து இலவசமாக வழங்கப்பட்டு வருவதுடன் கொவிட் தொற்றினால் மரணிப்பவர்களுக்காக இப்பெட்டிகளை எவர் கோரினாலும் வழங்கப்பட்டு வருகின்றன.

காத்தான்குடி நகர சபை வாகனத்திலேயே சடலங்கள் ஏற்றப்பட்டு ஓட்டமாவடி மஜ்மா நகருக்கு கொண்டு செல்லப்படுகின்றன. 

அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் மற்றும் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை உட்பட இம்மாவட்டத்தில் உள்ள ஏனைய வைத்தியசாலைகளில் கொவிட் தொற்றினால் மரணித்த ஆறு பேரின் சடலங்களை அடக்கம் செய்வதற்கும் இவ்வாறு பெட்டிகளும் பைகளும் வழங்கப்பட்டுள்ளன.

இவற்றை ஒழுங்குபடுத்தி செயற்படுத்துவதற்காக காத்தான்குடி நகர சபைத் தவிசாளர் எஸ்.எச்.அஸ்பர் தலைமையிலும் மேற்பார்வையிலும் காத்தான்குடி நகர சபை உத்தியோகத்தரும் தவிசாளரின் இணைப்புச் செயலாளருமான சப்ரி பசீர் நியமிக்கப்பட்டு இப்பணியை மிகச் சிறப்பாக செய்து வருகின்றார். குறித்த பெட்களும் பைகளும் வாகனமும் எந்நேரமும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதைக் காண முடிகின்றது.

எம்.எஸ்.எம்.நூர்தீன்

No comments:

Post a Comment