அரசாங்கம் வருட இறுதிக்குள் பாரிய நிதி நெருக்கடிக்குள் தள்ளப்படும் - செல்வம் அடைக்கலநாதன் - News View

About Us

About Us

Breaking

Sunday, June 13, 2021

அரசாங்கம் வருட இறுதிக்குள் பாரிய நிதி நெருக்கடிக்குள் தள்ளப்படும் - செல்வம் அடைக்கலநாதன்

தமிழ் தேசியக் கூட்டமைபில் இருந்து பங்காளிக் கட்சியான தமிழீழ விடுதலை இயக்கம் டெலோ வெளியில் வந்து செயல்படுவதற்கான நிலை தற்போது வரை இல்லை. சில பிரச்சினைகள் கட்சிக்குள் உள்ளது. அதனை நிவர்த்தி செய்து கொண்டு கூட்டுக்குள் இருந்து கொண்டு செயல் படுவோம் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், டெலோ கட்சியின் தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.

மன்னாரில் உள்ள அவரது அலுவலகத்தில் நேற்று (13) காலை இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போது பல்வேறு விடயங்கள் தொடர்பாக கருத்து தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், தற்போதைய அரசாங்கம் வருட இறுதிக்குள் பாரிய நிதி நெருக்கடிக்குள் தள்ளப்படும் சூழ்நிலையில் காணப்படுகின்றது. அதற்கான முதல்படி எரிபொருட்களின் விலையேற்றம். 

மிகவும் மோசமான ஒரு சூழல் இந்த நாட்டில் இருக்கின்ற நிலையில் வறிய மக்கள் பயன்படுத்துகின்ற மண்னெண்னை 7 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனால் சாதாரண மக்கள் கடற்தொழிலாளர்கள், விவசாயிகள் அன்றாட கூலித் தொழிலாளர்கள் ஆகியோர் பாரிய பிரச்சினைக்குள் தள்ளப்பட்டுள்ளனர்.

அரசாங்கம் தன்னை நியாயப்படுத்த கூறுகின்ற காரணங்களை ஏற்றுக் கொள்ள முடியாது. நாடு முடக்கப்பட்டுள்ள நிலையில் மக்களும் முடக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் இவ்வாறான ஒரு அபாயச் செய்தியான எரிபொருட்களின் விலையேற்றம் செய்யப்பட்டமையை வன்மையாக கண்டிக்கின்றோம்.

எரி பொருட்கள் மட்டும் இல்லை. ஏனைய அத்தியாவசியப் பொருட்களும் விலை அதிகரிப்புச் செய்யப்படுவதற்கான காரணமாகவும் உள்ளது. பாண் உட்பட அனைத்துப் பொருட்களின் விலையும் அதிகரிப்பதற்கான சந்தர்ப்பம் ஏற்படும்.

எனவே இந்த அரசாங்கம் மக்கள் தொடர்பில் சிந்திக்கின்ற அரசாங்கமாக செயல்படவில்லை என்பதை தெரிவித்துக் கொள்ளுகின்றேன்.

அந்த வகையில் இலங்கை அரசாங்கம் உடனடியாக விலையேற்றங்களை குறைக்க வேண்டும். நாட்டில் வாழ்கின்ற மக்களுக்கு நல்ல செய்தியை விலை குறைப்பின் ஊடாக சொல்ல வேண்டும். இல்லை என்றால் நான் கூறியது போல் இவ் வருட இறுதிக்குள் பாரிய நிதி நெருக்கடிக்குள் தள்ளப்படும் என தெரிவித்தார்.

மன்னார் நிருபர் லெம்பட்

No comments:

Post a Comment