வடக்கு மாகாணத்தில் சுகாதாரத் தொண்டர்களாக நிரந்தர நியமனமின்றி சேவையாற்றுவோரை ஒரு இலட்சம் அரச தொழில் வழங்கும் திட்டத்துக்குள் உள்ளீர்த்து நிரந்தர நியமனம் வழங்குமாறு ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச பணித்துள்ளார்.
ஜனாதிபதியின் செயலாளர், கலாநிதி பீ.பி.ஜயசுந்தரவுக்கு இந்த பணிப்பை ஜனாதிபதி வழங்கினார்.
ஜனாதிபதி செயலகத்தில் அண்மையில் இடம்பெற்ற மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர்களின் கலந்துரையாடலிலேயே ஜனாதிபதி இதனைத் தெரித்துள்ளார்.
வடக்கு வைத்தியசாலைகளில் சுகாதாரத் தொண்டர்களாக பணியாற்றியவர்களுக்கு மாகாண சுகாதார அமைச்சினால் நிரந்தர நியமனம் வழங்கி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்ட போது, ஏற்பட்ட முறைகேடு காரணமாக நியமனம் இடைநிறுத்தப்பட்டது.
இதையடுத்து தமக்கான நிரந்தர நியமனத்தை இடைநிறுத்தி அநீதி இழைக்கப்படுவதாக பாதிக்கப்பட்ட சுகாதாரத் தொண்டர்கள் தெரிவித்ததுடன், வட மாகாண ஆளுநரின் செயலகம் முன்பாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
முன்பதாக இந்த விடயம் தொடர்பாக பல்வேறு உயர்தரப்பினருடன் கலந்துரையாடி வந்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, ஜனாதிபதியுடன் இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்திலும் அவர்களது பிரச்சினை தொடர்பில் தொடர்ந்தும் பிரஸ்தாபித்து வந்த நிலையில், சுகாதார தொண்டர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்க ஜனாதிபதியினால் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment