அமெரிக்காவில் பாராளுமன்றம் அமைந்துள்ள கெப்பிடல் கட்டிடத்திற்கு வெளியே காரில் வந்த மர்ம நபர் ஒருவர் நடத்திய கத்திக்குத்து தாக்குதலில் பொலிஸ் அதிகாரி ஒருவர் பலியானார்.
குறித்த கட்டிடத்திற்கு வெளியே பாதுகாப்பு வலயம் அமைந்த பகுதியில் மர்ம நபர் தனது காரால் தடுப்பு பகுதியில் மோதியுள்ளார். இந்த சம்பவத்தில் இரு அதிகாரிகள் காயமடைந்தனர்.
இதன் பின்னர் காரில் இருந்து வெளியே குதித்த அந்த நபர் அதிகாரிகளை கத்தியால் குத்தியுள்ளார். இதில், பொலிஸ் அதிகாரி ஒருவர் உயிரிழந்துள்ளார். இதனை தொடர்ந்து பொலிசார் அந்த நபரை சுட்டு கொன்றனர்.
இந்த தாக்குதலை மேற்கொண்ட நபர் 25 வயதானவர் என்றும் இந்த தாக்குதல் நடத்திய நபரின் அடையாளம் தெரிய வரவில்லை. அவரது தாக்குதலுக்கான நோக்கம் பற்றிய விவரமும் வெளியிடப்படவில்லை.
இது குறித்து வாஷிங்டன் பெருநகர காவல் துறை உயரதிகாரி ராபர்ட் கன்டீ கூறுகையில், இது பயங்கரவாத தாக்குதலுடன் தொடர்புடையது அல்ல என தெரிவித்துள்ளார். ஆனால் விசாரணை தொடர்ந்து நடைபெறும் என அவர் கூறியுள்ளார்.
இதேவேளை, கெபிட்டல் கட்டிடம் முடக்கப்பட்டுள்ளது. கட்டிடத்தின் உள்ளே இருந்து யாருக்கும் வெளியே செல்ல அனுமதியில்லை. இதேபோன்று கட்டிடத்திற்குள் செல்வதற்கும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவத்தில் பாதுகாப்பு அதிகாரியான வில்லியம் பில்லி இவான்ஸ் எனபவரே கொல்லப்பட்டவராவார்.
இந்த தாக்குதலுக்கு அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், அவரது மனைவி ஆகியோர் கடும் கண்டனம் வெளியிட்டுள்ளதுடன் வெள்ளை மாளிகையில் அரைக் கம்பத்தில் கொடிகளை பறக்க விடுமாறு ஜோ பைடன், உத்தரவிட்டுள்ளார்.
No comments:
Post a Comment