முஸ்லிம்களின் ஜனாசாக்களை நல்லடக்கம் செய்வது தொடர்பான வழிகாட்டிகள் இன்று வெளியிடப்படும் - அமைச்சர் கெஹலிய - News View

About Us

About Us

Breaking

Monday, March 1, 2021

முஸ்லிம்களின் ஜனாசாக்களை நல்லடக்கம் செய்வது தொடர்பான வழிகாட்டிகள் இன்று வெளியிடப்படும் - அமைச்சர் கெஹலிய

கொவிட் தொற்றுக்குள்ளாகி மரணிக்கும் முஸ்லிம்களின் ஜனாசாக்களை நல்லடக்கம் செய்வது தொடர்பான வழிகாட்டிகள் இன்று வெளியிடப்படுவதாக அமைச்சரவை பேச்சாளரும், வெகுஜன ஊடகத்துறை அமைச்சருமான கெஹலிய ரம்புக்வெல தெரிவித்தார்.

கொவிட் தொற்றுக்குள்ளாகி மரணிக்கும் முஸ்லிம்களின் ஜனாசாக்களை நல்லடக்கம் செய்வது தொடர்பான வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது. வர்த்தமானிக்கு அமைவான வழிகாட்டிகளை வகுப்பதில் ஈடுபட்டுள்ள குழுவினர் அது தொடர்பாக அறிவிக்க இருப்பதாக அமைச்சர் தெரிவித்தார்.

அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர்களுடனான சந்திப்பு அரசாங்க தகவல் திணைக்களத்தின் கேட்போர் கூடத்தில் இன்று (2) நடைபெற்றது. இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கொவிட் தொற்றுக்குள்ளாகி இறக்கும் முஸ்லிம்களின் ஜனாசாக்களை நல்லடக்கம் செய்வது தொடர்பான வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது. ஆனால் அதனை நடைமுறைப்படுத்துவதற்கான விதிமுறைகள் இதுவரை அறிவிக்கப்படவில்லை என்று கேட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அமைச்சர் அவ்வாறு தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில், இந்த ஜனாசாக்களை இரணைதீவில் நல்லடக்கம் செய்வதற்கான நடவடிக்கைக்கான அடிப்படை வழிகாட்டிகள் தயாரிக்கப்படுவதாக அவர் தெரிவித்தார். இது தொடர்பான இறுதித் தீர்மானம் இன்று வெளியிடப்பட இருக்கின்றது என்றும் அவர் மேலும் தெரிவித்தார். 

முன்னர் வளைகுடா பகுதியில் அமைந்துள்ள இரணைத்தீவு இராணுவத்திற்குட்பட்ட பகுதியாகும். இங்கு சுமார் 200 பேர் வாழ்கின்றனர். இந்த தீவுக்கு கொவிட் தொற்றுக்குள்ளாகி மரணிக்கும் முஸ்லிம்களின் ஜனாசாக்களை நல்லடக்கத்திற்காக கொண்டு செல்வது சிரமமானதாக அமையும் என்று செய்தியாளர் கேட்ட கேள்விக்கு அமைச்சர் பதிலளித்தார்.

இதற்கு பதிலாக வேறு இடமொன்றை தெரிவு செய்தால் என்ன ? என்றும் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு காரணம் இங்குள்ள மக்கள் நிலத்தடி நீரையே பயன்படுத்துகின்றனர். கொழும்பில் போன்று குழாய் நீர் வசதி இங்கு இல்லை என்றும் செய்தியாளர் சுட்டிக்காட்டினார்.

இந்த விடயம் தொடர்பில் ஜனாசாக்களை நல்லடக்கம் செய்வது தொடர்பான விடயத்தை ஆராய்ந்து வரும் குழுவினர் கவனத்திற்கு கொண்டு வரப்படும் என்றும் அமைச்சர் கூறினார். அவர்களே இது தொடர்பாக விரிவான முறையில் ஆராய்ந்து தீர்மானங்களை மேற்கொள்வர் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

நல்லடக்கத்திற்காக எடுத்துச் செல்லப்படும் ஜனாசாக்களுக்கான செலவை அரசாங்கம் பொறுப்பேற்கும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

அரசாங்க தகவல் திணைக்களம்

No comments:

Post a Comment