துபாயில் சுகாதார பணியாளர்கள் மற்றும் முன்கள பணியாளர்களுக்கு பைசர் பயோ என்டெக் கொரோனா தடுப்பூசியின் 2ஆவது டோஸ் போடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
துபாய் சுகாதார ஆணையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது துபாய் நகரில் கொரோனா தடுப்பூசி போடும் பணியானது பல்வேறு மையங்களில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த தடுப்பூசியை ஏற்கனவே போட்டுக் கொண்ட சுகாதார பணியாளர்கள் மற்றும் முன்கள பணியாளர்களுக்கு 2வது டோஸ் தடுப்பூசி போடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
ஏற்கனவே தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள் 21 நாட்கள் நிறைவடைந்திருந்தால் அவர்களுக்கு 2ஆவது டோஸ் தடுப்பூசி போடப்படுகிறது. எனினும் இந்த 2ஆவது டோஸ் தடுப்பூசி போட வருபவர்கள் முறையாக பதிவுசெய்து, தங்களுக்கு கொடுக்கப்பட்ட நேரத்தில் மட்டுமே வர வேண்டும்.
முதல் டோஸ் தடுப்பூசியானது துபாய் நகரில் வசித்து வரும் மருத்துவ பணியாளர்களுக்கும், முக்கிய பணியில் ஈடுபட்டு வருபவர்களுக்கும், 60 வயதுக்கு மேற்பட்டோருக்கும், நாட்பட்ட வியாதியுடையோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
துபாய் நகரில் அல் சபா, ஜபில், அல் மிசர், நாத் அல் ஹமர், அல் பர்சா மற்றும் அப்டவுண் மிர்திப் ஆகிய இடங்களில் செயல்பட்டு வரும் ஆரம்ப சுகாதார மையங்களிலும், ஹத்தா ஆஸ்பத்திரியிலும் இந்த தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.
இந்த தடுப்பூசியை போட வருபவர்கள் துபாய் சுகாதார ஆணையத்தின் இணையதளத்தில் முன்பதிவு செய்து வருமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
துபாய் வீதி மற்றும் போக்குவரத்து ஆணையத்தின் ஊழியர் ஒருவர் 2வது தடவையாக நேற்று கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டார்.
அவர் கூறும்போது, இந்த தடுப்பூசி போட்டுக் கொண்டதால் எனக்கு எந்தவிதமான பாதிப்பும் ஏற்படவில்லை. நான் நல்ல முறையில் இருக்கிறேன். எனக்கு இந்த வாய்ப்பினை வழங்கியதற்காக சுகாதாரத் துறைக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என மகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.
அதேபோல் 2வது டோஸ் தடுப்பூசி போட்டுக் கொண்ட மற்றவர்களும் தாங்கள் நலமுடன் இருப்பதாக தெரிவித்தனர்.
சார்ஜா பகுதியில் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ள விரும்பும் வயதானவர்கள், மாற்றுத் திறனாளிகள் உள்ளிட்டோர் தங்களது வீடுகளிலேயே தடுப்பூசி போட்டுக் கொள்ளும் வசதி செய்யப்பட்டுள்ளது.
சார்ஜா அரசின் சமூக நலத்துறை, அமீரக சுகாதாரம் மற்றும் தடுப்புத் துறையுடன் இணைந்த இந்த வசதியை செய்துள்ளது. இந்த வசதியை பெற விரும்புவோர் 800700 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம்.
இந்த வசதியானது சார்ஜா, அல் தைத், மதாம், அல் பதையா, மலிகா, கோர்பக்கான், கல்பா, டிப்பா அல் ஹசன், அல் ஹம்ரியா உள்ளிட்ட இடங்களில் இருந்து வருகிறது. இந்த வாய்ப்பினை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
No comments:
Post a Comment