மட்டக்களப்பு மாநகர சபையின் புதிய ஆணையாளராக மாணிக்கவாசகம் தயாபரன் நியமனம்! - News View

About Us

About Us

Breaking

Thursday, December 3, 2020

மட்டக்களப்பு மாநகர சபையின் புதிய ஆணையாளராக மாணிக்கவாசகம் தயாபரன் நியமனம்!

மட்டக்களப்பு மாநகர சபையின் புதிய ஆணையாளராக மாணிக்கவாசகம் தயாபரன் நியமிக்கப்பட்டுள்ளார்.

கிழக்கு மாகாண ஆளுநர் அனுராத யகம்பத்தினால் அவர் இன்று (வியாழக்கிழமை) நியமிக்கப்பட்டதுடன் அதற்கான நியமனக் கடிதம் ஆளுநர் காரியாலயத்தில் வைத்து வழங்கப்பட்டுள்ளது.

இதுவரைக்கும் மாநகர சபையின் ஆணையாளராக க.சித்திரவேல் கடமையாற்றியிருந்த நிலையில், நிர்வாக சேவையின் முதல் தரத்தினைச் சேர்ந்த மாணிக்கவாசகம் தயாபரன் நியமிக்கப்பட்டுள்ளார்.

அரச சேவையில் ஆசிரியராக இணைந்து கொண்ட இவர் 1990ஆண்டு இலங்கை நிருவாக சேவைக்குள் உள்வாங்கப்பட்டு ஆலையடிவேம்பு உதவி அரசாங்க அதிபர் அலுவலகத்தில் உதவி அரசாங்க அதிபராக கடமையாற்றினார்.

அதன் பின்னர் மட்டக்களப்பு மாவட்ட உதவி காணி ஆணையாளர், மட்டக்களப்பு மாவட்ட உள்ளுராட்சி உதவி ஆணையாளர், கிழக்கு மாகாண உள்ளுராட்சி ஆணையாளர், கிழக்குப் பல்கலைக்கழக பதிவாளர், மத்திய வங்கியின் கிழக்கு மாகாண வறுமை ஒழிப்பு நுண்கடன் திட்டத்தின் கிழக்கு மாகாண முகாமையாளராகவும் அவர் பணியாற்றியுள்ளார்.

அரச துறையில் பல்வேறுபட்ட உயர் பதவிகளை வகித்து வந்த இவர் குச்சவெளி, வெருகல், மண்முனை வடக்கு ஆகிய பிரதேச செயலகங்களில் பிரதேச செயலாளராகவும் கடமையாற்றியதுடன் கொழும்பில் உள்ள பொது நிர்வாக உள்நாட்டு அலுவல்கள் அமைச்சில் கடமையாற்றி வந்த இவர் உடன் அமுலுக்கு வரும் வகையில் கிழக்கு மாகாண ஆளுனரால் இப்பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.

மட்டக்களப்பு குருக்கள்மடத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட இவர் குருக்கள்மடம் கலைமகள் வித்தியாலயத்தில் தனது ஆரம்பக் கல்வியை கற்று, அதன்பின்னர் உயர்கல்வியை மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரியில் தொடர்ந்த அவர், தனது பட்டப்படிப்பினை பேராதெனிய, கிழக்கு பல்கலைக்கழகம் மற்றும் லண்டன் பல்கலைக்கழகங்களில் பூர்த்தி செய்துள்ளார்.

No comments:

Post a Comment