(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்)
வடக்கு கிழக்கு அபிவிருத்திக்காக அதிகளவு நிதி ஒதுக்கப்பட்டதென்றல் அது மஹிந்த ராஜபக்ஷ ஆட்சியில் என்பதை மறந்துவிட வேண்டாம், அதேபோல் தமிழர் பிரதிநிதிகள் ஒத்துழைப்பு வழங்கினாலும் அல்லது வழங்காவிட்டாலும் கூட வடக்கு கிழக்கில் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கான அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை என அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை, வரவு செலவு திட்ட விவாதத்தில் நெடுஞ்சாலைகள் மற்றும் போக்குவரத்து அமைச்சுகள் மற்றும் இராஜாங்க அமைச்சுகளுக்கான நிதி ஒதுக்கீடு மீதான விவாதத்தில் உரையாற்றிய செல்வராஜா கஜேந்திரன் எம்.பியும், ஸ்ரீதரன் எம்.பியும் வடக்கு கிழக்கு அபிவிருத்தி குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தியாக வேண்டும் என வாதிட்டனர்.
இதன்போது சபையில் இருந்த அமைச்சர் நாமல் ராஜபக்ஷ கூறுகையில், கௌரவ வடக்கு உறுப்பினர்கள் உங்களின் யோசனைகளை எமக்கு முன்வையுங்கள். அபிவிருத்தி வேலைத்திட்டங்களில் நீங்கள் கலந்துகொள்ளுங்கள். ஒன்றை மாத்திரம் தெளிவாக கூறிக்கொள்கிறேன்.
வடக்கு கிழக்கு அபிவிருத்திக்காக அதிகளவு நிதி ஒதுக்கப்பட்டதென்றால் அது மஹிந்த ராஜபக்ஷ ஆட்சியில் என்பதை மறந்துவிட வேண்டாம்.
அதேபோல் அடுத்த ஐந்து ஆண்டுகளில் வடக்கு கிழக்கில் அபிவிருத்தி வேலைத்திட்டங்களை முன்னெடுக்கவும், அப்பகுதிகளில் இளைஞர்களுக்கான வேலை வாய்ப்புகளை உருவாக்கவும், சுற்றுலாத்துறையை மேம்படுத்தவும், கல்வியை மேம்படுத்தவும் நடவடிக்கை எடுப்போம் என்பதையும் கூறிக்கொள்கிறேன்.
வடக்குக்கு ஒதுக்கப்பட்ட நிதியில் 80 சதவீத நிதி மீண்டும் எமக்கே திருப்பி அனுப்பப்பட்டது, ஏனென்றால் உங்களின் முதலமைச்சர் அதனைக் கொண்டு சேவையாற்ற தவறியதன் காரணத்தினால் இந்நிதி திரும்பி வந்தது.
அதேபோல் ஒரு பில்லியன் டொலர் நிதி வடக்கிற்கு ஒதுக்கி வீதிகள், புகையிரத பாதைகள், பாடசாலைகள், பாலங்கள், வைத்தியசாலைகள் அமைக்கப்பட்டது.
அதேபோல் நீங்கள் ஒத்துழைப்பு வழங்காவிட்டாலும் கூட அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கான அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படும், அதற்கான ஒத்துழைப்புகளை தாருங்கள் என்றார்.
No comments:
Post a Comment