பந்தயத்துக்காக வாகனம் ஓட்டுபவர்களை மனநல வைத்தியர்களிடம் ஒப்படைக்க நடவடிக்கை - News View

About Us

About Us

Breaking

Tuesday, December 8, 2020

பந்தயத்துக்காக வாகனம் ஓட்டுபவர்களை மனநல வைத்தியர்களிடம் ஒப்படைக்க நடவடிக்கை

கிம்புலாவள சந்தியில் இருந்து புதிய வைத்தியசாலை பாதையில் மோட்டார் சைக்கிள் பந்தயம் நடாத்த ஏற்பாடு செய்யப்படு செய்யப்பட்டதாக கூறப்படும் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள் 24 பேர் மிரிஹான பொலிசாரினால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் பிரதி பொலிஸ்மா அதிபருமான அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

நேற்றுமுன்தினம் மிரிஹான பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு கிடைத்த தகவலின்படி மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையின் போது மோட்டார் சைக்கிள் குழு பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

இந்த மோட்டார் சைக்கிள்கள் பொலிஸ் பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளதுடன், உரிமையாளர்களிடம் இருந்து வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், அவர்களுக்கு எதிராக வழக்குத் தொடர நடவடிக்கை எடுப்பதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கூறினார்.

மொரட்டுவ எகட உயன பகுதியில் வேகமாக வந்து விபத்துக்குள்ளாகிய மோட்டார் சைக்கிள் விபத்தை தொடர்ந்து, இதுபோன்ற நடவடிக்கையில் ஈடுபடுத்தப்படும் மோட்டார் சைக்கிள் மற்றும் வாகன ஓட்டுனர்களை கைது செய்ய விசேட நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

கொழும்பு கம்பஹா உள்ளிட்ட நாட்டின் பல்வேறு பிரதேசங்களில் இவ்வாறான மோட்டார் சைக்கிள் மற்றும் வாகன பந்தயங்கள் சில இளைஞர்களால் நடத்தப்படுவதாக தகவல்கள் கிடைத்துள்ளன. அவர்கள் தமது பொழுதுபோக்கிற்காக மேற்கொள்கின்ற இவ்வாறான நடவடிக்கைகளினால் நாட்டில் விலை மதிக்க முடியாத உயிரிழப்புகள் ஏற்படுகின்றன. எதிர்காலத்தில் இவ்வாறானவர்கள் தொடர்பாக கடும் சட்ட நடவடிக்கை எடுப்பதுடன் அவர்களை நீதிமன்ற அனுமதியுடன் மனநல வைத்தியர்களிடம் பரிந்துரைக்கவும் நடவடிக்கை எடுப்பதாக அவர் தெரிவித்தார்.

மோட்டார் சைக்கிள் அல்லது வாகன பந்தயம் மேற்கொள்வதற்கு தேவை எனில் அதற்கான தகுந்த இடங்கள் இருக்கின்றன, அதே போன்ற நடவடிக்கைகளை நெடுஞ்சாலைகளில் மேற்கொள்வது சட்டவிரோதமானது என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண சுட்டிக்காட்டினார்.

No comments:

Post a Comment