
தன்மீது நம்பிக்கை வைத்தவர்கள் விடுத்த அழைப்பிற்கு அமையவே ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைத்துவத்தை ஏற்பதற்கான அறிவிப்பை வெளியிட்டதாக முன்னாள் சபாநாயகரும் ஐக்கிய தேசியக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினருமான கரு ஜெயசூரிய தெரிவித்துள்ளார்.
எனினும் தனது இந்த அறிவிப்பை ஐக்கிய தேசியக் கட்சியிலுள்ள சிலர் தவறாக சித்தரித்துக் கொண்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.
கரு ஜெயசூரிய, இன்று (செவ்வாய்க்கிழமை) பௌத்த மக்களின் பெருந்தலைமைத்துவங்களான அஸ்கிரிய மற்றும் மல்வத்துப்பீட மகாநாயக்க தேரர்களைச் சந்திப்பதற்காக கண்டிக்கு விஜயம் செய்தார்.
குறித்த இரண்டு தலைமைப் பீடங்களின் தேரர்களை சந்தித்து ஆசிபெற்றுக் கொண்ட அவர், ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஏற்பட்டுள்ள சரிவுநிலை, அடுத்தகட்டமாக எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் என பல ஆலோசனைகளையும் பெற்றுக் கொண்டார்.
இதையடுத்து, ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைத்துவத்தை ஏற்பதற்கு விருப்பம் வெளியிட்ட போதிலும் அதுகுறித்து கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க வெளியிட்ட எதிர்க்கருத்து தொடர்பாகவும் ஊடகவியலாளர்களால் எழுப்பப்பட்ட கேள்விகளுக்குப் பதிலளித்தார்.
இதன்போது அவர் கூறுகையில், “’பாரிய வரலாற்றைக் கொண்ட ஐக்கிய தேசியக் கட்சி பாரிய பின்னடைவைச் சந்தித்திருப்பது குறித்து கவலையடைகிறோம். மகாநாயக்க தேரர்களும் இது குறித்த தங்களது கவலையை வெளியிட்டார்கள்.
என்னிடமும் எதிர்பாராத தரப்பிலிருந்து கட்சித் தலைமைத்துவத்தைப் பொறுப்பேற்கும்படி கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுவந்தன. அதே தருணத்தில் கட்சித் தலைவர் பதவியிலிருந்து விலகுவதாக ரணில் விக்ரமசிங்க அறிவிப்பையும் வெளியிட்டிருந்ததால்தான் நானும் தலைமைத்துவ சவாலை ஏற்கத் தயார் என்ற அறிவிப்பை வெளியிட்டிருந்தேன்.
எனினும், இந்த அறிவிப்பை சிலர் தவறாகப் புரிந்துகொண்டனர். தற்போதைய கட்சித் தலைமைத்துவத்திற்கு எதிரான அச்சுறுத்தல் என்றும் கூறியிருந்தார்கள். அது முற்றிலும் பிழையாகும். சில ஊடகங்களிலும் அவ்வாறு வெளியிடப்பட்டிருந்தன. பின்னர் அதுகுறித்து நான் தெளிவுபடுத்தலை வழங்கியிருந்தேன்.
நாடாளுமன்றத்தில் ஜனநாயகத்திற்கு விரோதமான செயற்பாடுகளைத் தடுப்பதற்கும், அதேபோல தற்போதைய பிரதமரான முன்னாள் ஜனாதிபதியிடமிருந்து பிரதமர் பதவிக்கான அழைப்பு பல தடவை வந்த போதிலும் அதனை நிராகரிப்பதற்கும் நடவடிக்கை எடுத்தேன். இதனால் ரணில் விக்ரமசிங்கவும் அன்று பாதுகாக்கப்பட்டார்.
இப்படியிருக்க என்மீது நம்பிக்கை வைத்தவர்கள் தலைமைத்துவத்தை ஏற்பதற்கான அழைப்பை விடுத்தார்கள். பலரும் தலைமைத்துவத்திற்கு விருப்பம் கோரியுள்ள நிலையில் ஜனநாயக வழியில் கட்சிக்குள் இருக்கும் பொறிமுறைக்கு அமைய கட்சித் தலைவர் தெரிவுசெய்யப்படுவார்” என்று குறிப்பிட்டார்.
No comments:
Post a Comment