
கட்சி உறுப்புரிமை நீக்கப்பட்ட ஐக்கிய தேசியக் கட்சியின் 38 உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கு எதிராக எதிர்வரும் 10 ஆம் திகதி வரை அடுத்தகட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டாம் என மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.
மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரிகளுக்கு இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய மக்கள் சக்திக்கு ஆதரவு வழங்கியமையால் தம்மை ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்புரிமையிலிருந்து நீக்கியமைக்கு எதிராக அவர்கள் தாக்கல் செய்த மனு இன்று பரீசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
கட்சி உறுப்புரிமையை நீக்கும் செயற்பாட்டை தடுத்து, அதற்கு எதிராக இடைக்கால தடையுத்தரவை பிறப்பிக்குமாறு மனுதாரர்கள் கோரியிருந்தனர்.
அத்துடன், கட்சி உறுப்புரிமையிலிருந்து நீக்கி, உள்ளூராட்சி மன்றங்களின் பதவியிலிருந்து நீக்குதல் தொடர்பில் வர்த்தமானியில் அறிவிப்பதை நிறுத்துமாறு உத்தரவிடுமாறும் அவர்கள் கோரியிருந்தனர்.
கொழும்பு மாநகர சபை உள்ளிட்ட உள்ளூராட்சி மன்றங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் 38 உறுப்பினர்கள் தாக்கல் செய்திருந்த இந்த மனு மேன்முறையீட்டு நீதிமன்ற தலைமை நீதிபதி A.H.M.D. நவாஸ் மற்றும் நீதிபதி சோபித ராஜகருணா ஆகியோர் முன்னிலையில் இன்று பரீசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
எதிர்வரும் 09 ஆம் திகதி இந்த மனு பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.
No comments:
Post a Comment