துபாய் தேரா தீவு பகுதிக்கு செல்லும் 5 பாலங்கள் போக்குவரத்துக்காக திறக்கப்பட்டது - News View

About Us

About Us

Breaking

Sunday, August 9, 2020

துபாய் தேரா தீவு பகுதிக்கு செல்லும் 5 பாலங்கள் போக்குவரத்துக்காக திறக்கப்பட்டது

துபாய் தேரா தீவு பகுதிக்கு செல்லும் 2 ஆயிரத்து 571 மீட்டர் நீளமுள்ள 5 பாலங்கள் போக்குவரத்துக்காக நேற்று திறக்கப்பட்டது.

துபாய் வீதி மற்றும் போக்குவரத்து ஆணையத்தின் பொது இயக்குனர் மத்தார் அல் தயார் கூறியதாவது துபாய் தேரா தீவு பகுதியை இணைக்கும் வகையில் பாலங்கள் கட்டும் பணி மேற்கொள்ளப்பட்டு வந்தது. இந்த பணிகள் அனைத்தும் நிறைவடைந்ததால், நேற்று 5 பாலங்கள் போக்குவரத்துக்காக திறக்கப்பட்டது. இந்த பாலங்களின் மொத்த நீளம் 2 ஆயிரத்து 571 மீட்டர் ஆகும்.

இந்த பாலங்கள் அமைக்கும் பணி நகீல் நிறுவனத்துடன் இணைந்து மேற்கொள்ளப்பட்டது. இந்த புதிய பாலங்கள் திறக்கப்பட்டுள்ளதால், தேரா தீவு பகுதியை நகரின் பல்வேறு பகுதிகளில் இருந்து எளிதில் சென்றடைய உதவியாக இருக்கும்.

இந்த பாலங்கள் அனைத்தும் கல்ப் வீதியில் இருந்து அபுபக்கர் அல் சித்திக் வீதியை இணைக்கும் வகையில் இருந்து வருகிறது. இந்த புதிய பாலங்களின் மூலம் ஒரு மணி நேரத்தில் 20 ஆயிரத்து 700 வாகனங்கள் செல்ல உதவியாக இருக்கும். 

மேலும் இந்த பாலத்தின் மூலம் ஷேக் ராஷித் வீதி, அல் மினா வீதி, அல் கலீஜ் வீதி மற்றும் கெய்ரோ வீதி ஆகியவற்றை எளிதில் சென்றடைய முடியும்.

முதலாவது பாலமானது அல் கலீஜ் வீதியில் இருந்து தேரா தீவின் வடக்கு பகுதியை இணைக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. இதன் நீளம் 472 மீட்டர் ஆகும். இதன் மூலம் மணிக்கு 3 ஆயிரம் வாகனங்கள் வரை செல்ல முடியும்.

2-வது பாலமானது சின்டகா சுரங்கப் பாதையில் இருந்து தேரா தீவுப் பகுதியை இணைக்கும் வகையில் 503 மீட்டர் நீளத்தில் அமைந்துள்ளது. இதன் மூலம் மணிக்கு 4 ஆயிரத்து 500 வாகனங்கள் வரை செல்ல முடியும்.

3-வது பாலமானது தேரா தீவு பகுதியில் இருந்து அல் கலீஜ் வீதியை இணைக்கும் வகையில் 647 மீட்டர் தூரம் அளவுக்கு அமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மணிக்கு 3 ஆயிரம் வாகனங்கள் வரை செல்ல முடியும். இந்த பாலங்கள் ஒவ்வொன்றும் தலா 2 வழித்தடங்களை கொண்டதாக அமைக்கப்பட்டுள்ளது.

4-வது பாலமானது 362 மீட்டர் தூரத்தில் தேரா தீவு பகுதியின் உட்புற வீதிகளை இணைக்கும் வகையில் 6 வழித்தடங்களை கொண்டு மணிக்கு 7 ஆயிரத்து 200 வாகனங்கள் செல்லும் வகையில் அமைந்துள்ளது.

5-வது பாலமானது கல்ப் வீதியில் இருந்து தேரா தீவின் தெற்கு பகுதிக்கு செல்லும் வகையிலும் அபுபக்கர் அல் சித்திக் சாலையை இணைக்கும் வகையில் 587 மீட்டர் தூரத்தில் 2 வழித்தடங்களை கொண்டு அமைந்துள்ளது. இதன் மூலம் மணிக்கு 3 ஆயிரம் வாகனங்கள் செல்ல முடியும். இந்த பாலங்களின் மூலம் இந்த பகுதிக்கு விரைவாகவும், வேகமாகவும் செல்ல உதவும். இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment