பிரதமர் மஹிந்த தேர்தல் சட்டவிதிகளுக்கு புறம்பாக செயற்படுகிறார் - சட்டவிதிகள் ஐக்கிய மக்கள் சக்திக்கு மாத்திரமா எனவும் கேள்வி எழுப்பியுள்ளார் துஷார இந்துனில் - News View

About Us

About Us

Breaking

Wednesday, June 24, 2020

பிரதமர் மஹிந்த தேர்தல் சட்டவிதிகளுக்கு புறம்பாக செயற்படுகிறார் - சட்டவிதிகள் ஐக்கிய மக்கள் சக்திக்கு மாத்திரமா எனவும் கேள்வி எழுப்பியுள்ளார் துஷார இந்துனில்

(செ.தேன்மொழி)

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தேர்தல் சட்டவிதிகளுக்கு புறம்பாக செயற்படுவதாக குற்றஞ்சாட்டியுள்ள ஐக்கிய மக்கள் சக்தியின் குருணாகல் மாவட்ட வேட்பாளர் துஷார இந்துனில், இந்த விடயம் தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழுவை அவதானம் செலுத்துமாறு குறிப்பிட்டு கடிதமொன்றை அனுப்ப இருப்பதாகவும் தெரிவித்தார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமையகத்தில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற ஊடகவிலாளர் சந்திப்பில் இவ்வாறு தெரிவித்தார். 

அவர் மேலும் கூறியதாவது, ஸ்ரீலங்கா சுதந்திர பொதுஜன முன்னணியின் குருணாகல் மாவட்ட வேட்பாளரான பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தேர்தல் பிரசார கூட்டங்களில் கலந்துகொள்வதற்காக வருகைதரும் போது அரச சொத்துகளை முறையற்று பயன்படுத்தி வருகின்றார்.

அரசாங்கம் சார்ந்த வேலைத்திட்டம் ஒன்றிற்காக இல்லாது தனது தனிப்பட்ட தேர்தல் செயற்பாடுகளுக்காக அரச சொத்துகளை முறையற்று பயன்படுத்துவது தேர்தல் சட்டவிதிகளுக்கமைய முறைகேடான செயற்பாடாகும். இந்த விடயம் தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு அறிவித்தல் செய்ய எதிர்ப்பார்த்திருக்கின்றேன்.

இதேவேளை இதன்போது அவருடன் வந்த பெருந்தொகையான பாதுகாப்பு படைகள் மற்றும் வாகனங்களினால் முழு வீதியும் மூடப்பட்டிருந்தது.

இந்நிலையில் அவருடன் வந்த வாகனங்கள் அனைத்தும் அவருடைய தனிப்பட்ட வாகனங்களா?, பாதுகாப்பு படையினர் தனியார் நிறுவனங்களுக்கிணங்க செயற்படுபவர்களா ? என்பது தொடர்பிலும் ஆராய்ந்து பார்க்குமாறும் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு தெரிவிக்க எதிர்பார்த்திருப்பதுடன், இதன்போது அவருடன் வருகைதந்த வாகனங்களுக்காக எரிபொருள் உள்ளிட்ட பாவனை செலவுகளை அவரது தனிப்பட்ட நிதியிலிருந்தா செய்துள்ளார் என்பது தொடர்பிலும் ஆராய்ந்து பார்க்குமாறும் கேட்டுக் கொள்ளவுள்ளேன்.

முன்னாள் எதிர்க்கட்சி தலைவரான சஜித் பிரேமதாசவுக்கு எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தை பயன்படுத்துவதற்கான அதிகாரம் இல்லை என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தனது உத்தியோகபூர்வ இல்லத்தையும், அலரி மாளிகையையும் தேர்தல் பிரசார நடவடிக்கைகளுக்காக பயன்படுத்தி வருகின்றார்.

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக தனிமைப்படுத்தல் மற்றும் தொற்று நீக்க சட்டவிதிகளுக்கமைய தேர்தல் பிரசார நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியுள்ளதால், ஐக்கிய மக்கள் சக்தி அந்த சட்டவிதிகளுக்கமையவே செயற்பட்டு வருகின்றது. ஆனால் ஆளும் தரப்பினர் இதற்கு மாறாகவே செயற்பட்டு வருகின்றனர். 

இந்நிலையில் இந்த சட்டவிதிகள் அனைத்தும் ஐக்கிய மக்கள் சக்திக்கு மாத்திரமே விதிக்கப்பட்டுள்ளதா? ஆளும் தரப்பினர் அதனை கடைப்பிடிக்க வேண்டிய அவசியம் இல்லையா? என்பது தொடர்பிலும் தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் கேள்வியெழுப்ப எதிர்பார்த்திருக்கின்றேன்.

No comments:

Post a Comment