பயணிகள் விமான சேவை இடைநிறுத்தம் மே 15 வரை நீடிப்பு - விசேட விமானங்கள், சரக்கு விமானங்கள் இயங்கும் - News View

About Us

About Us

Breaking

Saturday, April 25, 2020

பயணிகள் விமான சேவை இடைநிறுத்தம் மே 15 வரை நீடிப்பு - விசேட விமானங்கள், சரக்கு விமானங்கள் இயங்கும்

ஶ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனம் தனது நாளாந்த பயணிகள் விமான சேவைகளின் தற்காலிகமாக இடைநிறுத்தத்தை எதிர்வரும் மே 15 வரை நீடிப்பதாக அறிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் தொற்று நோய் காரணமாக தாம் விமான சேவைகளை மேற்கொள்ளும் உலகளாவிய வலையமைப்பிலுள்ள நாடுகள் விதித்துள்ள பயணக் கட்டுப்பாடுகள், தொடர்ந்தும் நடைமுறையில் இருப்பதால், இந்நடவடிக்கையை எடுத்துள்ளதாக ஶ்ரீலங்கன் விமான சேவை அறிவித்துள்ளது.

இந்த இடைநிறுத்தமானது இம்மாதம் 30ஆம் திகதி வரை நீடிக்கப்படுவதாக அந்நிறுவனம் ஏற்கனவே அறிவித்திருந்த நிலையில் அது மேலும் நீடிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஆயினும் சரக்கு விமான சேவைகள் தொடர்ந்தும் இடம்பெற்று வருவதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

அரசாங்கம் மற்றும் தொழில்துறைகளுக்கான மருத்துவ பொருட்கள், உபகரணங்கள், அத்தியாவசிய பொருட்கள் ஆகியவற்றுக்கான சரக்கு விமான சேவைகளை ஶ்ரீ லங்கன் விமான சேவை மேற்கொண்டுள்ளதோடு இது நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள அசாதாரண சூழலில் அந்நியச் செலாவணியை பெருமளவில் பெற்றுத் தரும் நடவடிக்கையாகும் என தெரிவித்துள்ளது.

அத்துடன் உதவி தேவைப்படுகின்ற இலங்கையர்களை நாட்டுக்கு அழைத்து வருவதற்காக, ஶ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விசேட பயணிகள் விமானங்களை தேவைக்கு அமைய இயக்கும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பான மேலதிக தகவல்களுக்கு, பயணிகள் தங்களது பயண முகவர்கள், அருகிலுள்ள ஶ்ரீலங்கன் எயார்லைன்ஸ் அலுவலகம் அல்லது ஶ்ரீலங்கன் எயார்லைன்ஸின் உலகளாவிய தொடர்பு மையத்தை +94117771979 எனும் தொலைபேசி வழியாக தொடர்பு கொள்ளுமாறு ஶ்ரீலங்கன் விமான சேவை நிறுவனம் கேட்டுக்கொண்டுள்ளது.

No comments:

Post a Comment