எதிர்வரும் பொதுத் தேர்தலானது இலங்கையின் ஜனநாயக ஆட்சி முறைக்கும், சிறுபான்மை இனங்களுக்கும் அதிலும் குறிப்பாக, முஸ்லிம்களுக்கு ஜீவமரணப் போராட்டமாக அமையப்போகின்றது. இத்தேர்தலை முஸ்லிம்கள் மிகவும் கவனமாக பயன்படுத்த வேண்டும். என திகாமடுல்ல மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஐ.எம்.மன்சூர் தெரிவித்தார்.
நேற்றுமுன்தினம் (07) தனது சம்மாந்துறை அலுவலகத்தில் எதிர்வருகின்ற பொதுத்தேர்தலை எவ்வாறு எதிர்கொள்வது தொடர்பாக தனது கட்சி ஆதரவாளர்கள் மற்றும் அரசியல் செயற்பாட்டாளர்களை சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்தும் உரையாற்றுகையிலே இத்தேர்தலானது நாட்டின் அரசியல் எதிர்காலத்தையும், முஸ்லிம் சமூகத்தின் எதிர்காலத்தையும் தீர்மானிக்கும் ஒரு தேர்தலாக அமையவுள்ளது. முஸ்லிம் சமூகத்திற்கெதிராக திட்டமிடப்பட்டுள்ள சதிகள் அனைத்தையும் முறியடித்து தேசிய ரீதியில் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கச் செய்வதன் மூலமாக எதிர்காலத்தில் முஸ்லிம்களுக்கு எதிராக சட்டங்களை கொண்டு வருவதற்கு முயல்கின்ற சக்திகளுக்கு இடம்கொடுக்கக்கூடாது.
இந்தியாவில் எவ்வாறு மோடி அரசாங்கம் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பெற்றதன் பின்னர் அங்கு வாழும் முஸ்லிம்களை நசுக்கும் நடவடிக்கை கொண்டுள்ளதனைப் போன்று எதிர்காலத்தில் எமது நாட்டிலும் ஏற்பலாம். எதிர்வரும் காலங்களில் இந்த அரசாங்கம் தேர்தல் முறை மாற்றம், புதிய சட்டங்கள் மற்றும் பௌத்த பேராதிக்கத்துக்குச் சார்பான ஒரு புதிய அரசியல் யாப்பை அமுலாக்குவதற்கு உறுதி பூண்டுள்ளது.
இந்த அரசாங்கத்திற்கு தேவை எதிர்வருகின்ற தேர்தலில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பாராளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவு. அந்த ஆதரவுக்காக சிறுபான்மையினரினதும், எதிர்கட்சிகளில் கால்களில் விழாமல் தனது கட்சியான பொதுஜன பெரமுன இத்தேர்தலில் பெரும்பான்மை பெருவதற்கு பல்வேறு வியூகங்களை வகுத்துள்ளது.
இதனைப் பெற்றுக்கொடுப்பதற்கு வசதியாக எம்மிடையே உள்ள சிலர் சிறுபான்மை மக்களின் வாக்குகளை பெற்றுக்கொடுத்து அவர்களை வெற்றியடையச் செய்து அவர்களின் இலக்குகளை அடைய துணைபோய் இருக்கின்றார்கள். சிறுபான்மை மக்களின் வாக்குகளை பிரித்துக் கொடுப்பதற்காக நம்மிடையே பலர் வரிந்து கட்டிக்கொண்டு இருக்கின்றார்கள். இதற்கான நியாயங்களையும் கூறிவருகின்றனர். இதில் ஒட்டுமொத்தமாக முஸ்லிம் சமூகம் அழிந்துபோவதற்கான ஒரு வாய்ப்பும் சந்தர்ப்பமும் உள்ளது.
தற்போது மிகவும் ஆபத்தான சூழ்நிலைகள், பாரிய சவால்களுக்கு மத்தியில் வாழ்ந்து கொண்டிருக்கும் தற்போதைய காலகட்டத்தில் நாம் எதிர்கொள்ளக்கூடிய விதத்தில் நாம் செயற்பட வேண்டும். இதில் விட்டுக் கொடுப்பு மிகவும் அவசியமாகின்றது. இதயசுத்தியோடு முஸ்லிம் அரசியல் தலைமைகள் செயற்பட வேண்டும்.
முஸ்லிம்களின் இதயமாக கருதப்படும் அம்பாறை மாவட்டத்தை எதிர்வரும் தேர்தலில் நாம் வெற்றி கொள்ள வேண்டும். தேசிய ரீதியில் ஏற்பட்டுள்ள ஆபத்துக்களிலிருந்து நம்மை நாம் பாதுகாத்துக்கொள்ள வேண்டும். இந்த விடயத்தில் விட்டுக்கொடுப்பை ஏற்படுத்த நான் என்றும் தயாராக இருக்கின்றேன்.
எனவே, எதிர்வருகின்ற பொதுத்தேர்தல் பௌத்தபேராதிக்கத்துக்கும், ஜனநாயகத்துக்குமிடையே நடக்கவிருக்கும் போராகும். இதில் முஸ்லிம் மக்கள் சிந்தித்து மிகவும் கவனமாக வாக்குகளை பயன்படுத்த வேண்டும். என்றார்.
No comments:
Post a Comment