கல்முனை மாநகர சபைப் பிரதேசங்களில் கொரோனா வைரஸ் தாக்கத்தை தடுப்பதற்கான நடவடிக்கைகளை கூட்டுப்பொறுப்புடன் முன்னெடுத்து வருகின்ற கல்முனை மாநகர சபை, பிரதேச செயலகங்கள், பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை, பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகங்கள், பொலிஸ் மற்றும் முப்படைகளின் உயர் அதிகாரிகளும் வர்த்தக சங்கங்களின் பிரதிநிதிகளும் உள்ளடங்கிய செயலணியின் மூன்றாவது ஒருங்கிணைப்புக் கூட்டம் சனிக்கிழமை (2020-03-28) பிற்பகல் கல்முனை மாநகர சபை மண்டபத்தில் மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப் தலைமையில்நடைபெற்றது.
இக்கூட்டத்தின்போது கொரோனா வைரஸ் பரவலை முற்றாக தடுக்கும் நோக்கில், பொது மக்கள் ஒன்றுகூடுவதை தவிர்க்கும் பொருட்டு, அங்கு ஏகமனதாக எடுக்கப்பட்ட தீர்மானங்கள் தொடர்பில் வர்த்தகர்களினதும் பொது மக்களினதும் கவனத்திற்கு இத்தால் அறியத்தரப்படுகிறது.
* அமுலில் உள்ள ஊரடங்கு சட்டம் தற்காலிகமாக தளர்த்தப்படுகின்ற வேளையில் பொதுச் சந்தைகள், வர்த்தக நிலையங்கள், கடைகள் எதுவும் திறக்கப்படக் கூடாது.
* இக்காலப்பகுதியில் பொது மக்கள் தமக்கு தேவையான அத்தியாவசிய உணவுப் பொருட்களை தமது வீடுகளுக்கு முன்னால் வருகின்ற நடமாடும் விற்பனை வியாபாரிகளிடம் கொள்வனவு செய்தல் வேண்டும்.
* தமது வீதிகளுக்கு நடமாடும் விற்பனை வியாபாரிகள் வராத பட்சத்தில், அது குறித்து பிரதேச செயலகம் அல்லது கிராம சேவகருக்கு தொலைபேசி மூலம் தெரியப்படுத்தினால், உரிய ஏற்பாட்டுக்கு நடவடிக்கை எடுக்கப்படும்.
* ஆகையினால் ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்டாலும் வர்த்தகர்கள் எவரும் சந்தைகள், வர்த்தக நிலையங்கள், கடைகள் எதனையும் திறந்து வியாபார நடவடிக்கைகளை மேற்கொள்ளக் கூடாது.
* இவ்வுத்தரவை மீறும் வர்த்தகர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று இத்தால் அறியத் தரப்படுகிறது.
* அவ்வாறே ஊரடங்கு சட்டம் தளர்த்தப்படுகின்றபோது, அவசிய தேவையின்றி பொது மக்கள் எவரும் வீட்டில் இருந்து வெளியேறி, வீதிகளில் நடமாட வேண்டாம்.
* ஊரடங்கு சட்டம் அமுலில் உள்ளபோது எக்காரணம் கொண்டும் எவரும் வீட்டில் இருந்து வெளியேற வேண்டாம் என இத்தால் கண்டிப்பான உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது.
* ஊரடங்கு உத்தரவை உதாசீனம் செய்து, வீதிகளில் நடமாடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுப்பதற்கும் அவர்களை கைது செய்து, தடுத்து வைப்பதற்கும் பொலிஸ் மற்றும் முப்படையினருக்கு அதிகாரமளிக்கப்பட்டுள்ளது என்பதை கவனத்தில் கொள்ளுங்கள்.
* சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் இவ்வாறு தண்டிக்கப்படுவோரை விடுவிப்பதற்கு எம்மால் எவ்வித மனிதாபிமான உதவியும் வழங்கப்பட மாட்டாது.
* இக்காலப்பகுதியில் மரண சம்பவங்கள் நிகழ்ந்தால், மரண வீட்டிற்கு செல்வோர் அங்கு தரித்திருக்காமல், உடனடியாக தமது வீடுகளுக்கு திரும்பி விட வேண்டும் என்பதுடன் ஜனாஸா / பூதவுடல் நல்லடக்கத்தில் உறவினர்கள் உள்ளிட்ட 20 பேர் மாத்திரமே பங்குபற்ற வேண்டும்.
* மறு அறிவித்தல் வரை திருமணங்கள் உள்ளிட்ட எந்த வைபவமும் நடத்தப்படக் கூடாது.
* அசாதாரண சூழ்நிலை காரணமாக வருமானமின்றி பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்காக சேகரிக்கப்படுகின்ற நிவாரணங்களை தனி நபர்கள் அல்லது பள்ளிவாசல்கள், கோவில்கள், விகாரைகள் மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்கள் நேரடியாக விநியோகம் செய்ய முடியாது என அரசாங்கம் உத்தரவிட்டிருப்பதனால், அந்நிவாரணங்கள் வழங்கப்படவுள்ள பயனாளிகளின் பட்டியலை பொலிஸ் நிலையத்திடம் கையளித்து, அதற்கான பாஸ் அனுமதியை பெற்று, பொலிஸ் மற்றும் முப்படையினருடன் இணைந்தே அவை விநியோகம் செய்யப்பட வேண்டும்.
* சமீப காலப்பகுதியில் வெளிநாடுகளில் இருந்து வந்திருப்போர் தொடர்ந்தும் தனிமைப்படுத்தலை கடைப்பிடிக்க வேண்டும் என்பதுடன் அவ்வாறானோர் வெளியில் நடமாடினால் அவர்கள் குறித்து கிராம சேவகர் அல்லது பொதுச் சுகாதார பரிசோதகர் அல்லது பொலிஸாருக்கு தெரியப்படுத்துமாறு இத்தால் வேண்டுகோள் விடுக்கப்படுகிறது.
* நடமாடும் வியாபாரிகளுக்கு பாஸ் எனும் தற்காலிக அனுமதிப் பாத்திரம் வழங்கும் விடயத்தில் அரசியல்வாதிகளின் தலையீடு முற்றாக தடை செய்யப்பட்டு, பிரதேச செயலாளர், சுகாதார வைத்திய அதிகாரி, பொலிஸ் ஆகிய மூன்று தரப்பினரும் இணைந்து, பரிசீலனை செய்து, பொருத்தமானவர்களுக்கு மாத்திரம் அத்தகைய பாஸ் வழங்கப்படும்.
மேற்படி அறிவுறுத்தல்களை பொது மக்கள் முழுமையாக பின்பற்றுவதன் மூலம் எமது பகுதியில் கொடிய ஆட்கொல்லியான கொரோனா வைரஸ் பரவலை முற்றாக தடுப்பதற்கு ஒத்துழைப்பு வழங்குமாறு அன்புடன் வேண்டிக்கொள்கின்றேன்.
கல்முனை மாநகர சபைப் பிரதேசங்களில் கொரோனா வைரஸ் தாக்கத்தை தடுப்பதற்கான செயலணியின் இன்றைய ஒருங்கிணைப்புக் கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்களை கண்டிப்பாக அமுல்படுத்தும் பொருட்டு, வர்த்தகர்கள் மற்றும் பொது மக்களுக்கு தெரியப்படுத்துவதற்காக கல்முனை மாநகராட்சிக்குட்பட்ட பிரதேசங்களிலுள்ள வணக்கஸ்தலங்களின் ஒலிபெருக்கி மூலம் மாநகர முதல்வர் அறிவித்தல் விடுக்க வேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டதற்கமைவாக அதற்குரிய ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக முதல்வரின் ஊடகப் பிரிவு தெரிவிக்கின்றது.
இக்கூட்டத்தில் கல்முனை மாநகர ஆணையாளர் எம்.சி.அன்சார், கல்முனை பிரதேச செயலாளர் எம்.எம்.நஸீர், சாய்ந்தமருது பிரதேச செயலாளர் எம்.எம்.றிகாஸ், கல்முனை வடக்கு உப பிரதேச செயலாளர் அதியசயராஜ், கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் கே.சுகுணன், கல்முனை பொலிஸ் பொறுப்பதிகாரி கே.எச்.சுஜீத் பெரேரா, பிராந்திய சுகாதார பணிமனையின் தொற்றா நோய் பிரிவு பொறுப்பதிகாரி டாக்டர் என்.ஆரிப், மாநகர சபையின் பிரதம சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் அர்ஷாத் காரியப்பர், கல்முனை தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் எம்.எச்.றிஸ்பின், சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் ஏ.எம்.அஜ்வத், கல்முனை வடக்கு சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் கணேஷ்வரன் ஆகியோருடன் முப்படைகளின் உயர் அதிகாரிகளும் மாநகர சபை உறுப்பினர்களும் பொதுச் சுகாதாரப் பரிசோதகர்களும் கல்முனை வர்த்தகர் சங்கத் தலைவர் கே.எம்.எம்.சித்தீக், சாய்ந்தமருது வர்த்தகர் சங்கத் தலைவர் எம்.எஸ்.எம்.முபாரக், கல்முனை பொதுச் சந்தை வர்த்தகர் சங்கத்தின் செயலாளர் ஏ.எல்.கபீர் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் பலரும் பங்கேற்றிருந்தனர்.
No comments:
Post a Comment