கொரோனா ஒரு உலகளாவிய தொற்று நோய் எனவும் இந்த வைரஸ் தாக்குதலுக்கு உயிரிழப்புகள் மேலும் அதிகரிக்கலாம் எனவும் உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
சீனாவின் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் பரவத்தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது உலகின் 114 நாடுகளுக்கு பரவியுள்ளது.
இந்த வைரஸ் தாக்குதலுக்கு உலகம் முழுவதும் 4 ஆயிரத்து 291 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 1 லட்சத்து 21 ஆயிரம் பேருக்கு வைரஸ் பரவி இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், கொரோனா வைரஸ் தாக்குதலை ஒரு உலக தொற்று நோயாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
இது குறித்து சுவிஸ்சர்லாந்து தலைநகர் ஜெனிவாவில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் பேசிய உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ராஸ் அதானம் கெப்ரியேசஸ் கூறியதாவது.
''சீனாவுக்கு வெளியே உள்ள நாடுகளில் கடந்த இரண்டு வாரங்களாக கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மூன்று மடங்கு அதிகரித்துள்ளது. கொரோனா வைரஸ் பரவு நாடுகளும் எண்ணிக்கையும் மூன்று மடங்கு உயர்ந்துள்ளது.
அடுத்து வரும் நாட்களிலும், வாரங்களிலும் கொரோனா தாக்குதலுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை, வைரஸ் பாதிக்கப்பட்டோர் மற்றும் நாடுகளின் எண்ணிக்கை உச்சத்தை தொடலாம்.
வைரஸ் பரவல் மற்றும் அதன் தீவிரத்தின் தன்மை மிகவும் அபாயகரமானதாக உள்ளது. வைரஸ் கிருமியை கட்டுப்படுத்த உலக நாடுகள் தீவிரம் காட்டாதது எங்களுக்கு மிகுந்த கவலை அளிக்கிறது’’ என்றார்.
No comments:
Post a Comment