பொதுத் தேர்தலுக்கான வேட்பு மனுக்களை போறுப்பேற்கும் பணி இன்று ஆரம்பம் - 19 ஆம் திகதி நண்பகலுடன் நிறைவு - 23 கட்சிகள் களமிறங்க முஸ்தீபு - News View

About Us

About Us

Breaking

Wednesday, March 11, 2020

பொதுத் தேர்தலுக்கான வேட்பு மனுக்களை போறுப்பேற்கும் பணி இன்று ஆரம்பம் - 19 ஆம் திகதி நண்பகலுடன் நிறைவு - 23 கட்சிகள் களமிறங்க முஸ்தீபு

பொதுத் தேர்தலுக்கான வேட்பு மனுக்கள் இன்று முதல் 19ஆம் திகதி நண்பகல் 12 மணி வரை ஏற்கப்படவுள்ளதுடன் இதற்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ள தாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்தது. 

இதனையொட்டி மாவட்ட செயலகங்களுக்கருகில் விசேட பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. 22 மாவட்ட செயலகங்களும் வேட்பு மனுக்களை ஏற்கத் தயார் நிலையில் உள்ளதுடன், தெரிவத்தாட்சி அதிகாரிகளுக்குத் தேவையான ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் தேர்தல் ஆணைக்குழு குறிப்பிட்டது. 

பாராளுமன்றம் கடந்த 3 ஆம் திகதி ஜனாதிபதியால் கலைக்கப்பட்ட நிலையில், ஏப்ரல் 25 இல் தேர்தல் நடத்தப்படவுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை தேர்தல் ஆணைக்குழு முன்னெடுத்துள்ளது. இதற்கமைய இன்று முதல் வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டு 19 ஆம் திகதி நண்பகல் வரை மனுக்கள் ஏற்கப்படவுள்ளன. அன்றைய தினம் நண்பகல் அங்கீகரிக்கப்பட்ட வேட்பு மனுக்கள் பற்றி ஆணைக்குழு தலைவரால் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படும். 

இதேவேளை, வேட்பு மனுக்களைக் கையளிப்பதற்கு கட்சி செயலாளர் உட்பட மூவருக்கே அனுமதி உள்ளதாகவும் சுயேச்சைக் குழுக்கள் சார்பில் மூவருக்கே மாவட்ட செயலகங்களுக்கு வர அனுமதிக்கப்படுவர் எனவும் உதவி தேர்தல் ஆணையாளர் ரசிக்க பீரிஸ் தினகரனுக்குத் தெரிவித்தார்.

இதேவேளை, மாவட்ட செயலகங்களுக்கருகில் விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதோடு நாளை முதல் பாதுகாப்பு செயற்பாடுகள் அதிகரிக்கப்படுமென்றும் உதவி தேர்தல் ஆணையாளர் சன்ன டி சில்வா கூறினார். 

இது தவிர வேட்பு மனுக்களைக் கையளிக்க ஊர்வலமாக வருவதும் தடை செய்யப்பட்டுள்ளது. பெருந்தொகையினர் ஒரே இடத்தில் கூடுவதும் தேர்தல் சட்டத்திற்கு அமைய தடை செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

பாராளுமன்றம் கலைக்கப்பட்டுத் தேர்தல் அறிவிக்கப்பட்ட நாள் முதல் தேர்தல் சட்டம் அமுலுக்கு வருவதோடு, தேர்தல் நிறைவடையும் வரை இது அமுலில் இருக்கும் எனவும் அவர் தெரிவித்தார். 

சகல மாவட்ட செயலகங்கள் மற்றும் பொலிஸ் நிலையங்களிலும் விசேட பொலிஸ் பிரிவுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதால், தேர்தல் தொடர்பான முறைப்பாடுகளை இங்கு முன்வைக்க முடியும் எனவும் அவர் குறிப்பிட்டார். 

கட்சிகள் மும்முரம்
பொதுத் தேர்தலில் போட்டியிடுவதாக 23 கட்சிகள் அறிவித்துள்ளதாக தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது. 

இதேவேளை பிரதான கட்சிகள் வேட்பு மனு தயாரிக்கும் பணியில் மும்முரமாக ஈடுபட்டுள்ளதோடு பொதுஜன பெரமுனவின் வேட்பு மனு பட்டியல் இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளதாகவும் அடுத்த வாரம் வேட்பு மனுக்கள் கையளிக்கப்படும் எனவும் கட்சி முக்கியஸ்தர் ஒருவர் கூறினார்.

சுதந்திரக் கட்சி, மக்கள் ஐக்கிய முன்னணி, தேசிய சுதந்திர முன்னணி, கம்யூனிஸ்ட் கட்சி, சமசமாஜ கட்சி, பிவிதுரு ஹெல உருமய உட்பட பல கட்சிகள் மொட்டு சின்னத்தில் போட்டியிட உள்ளன. 

ஐ.தே.க இரண்டாக பிரிந்துள்ள நிலையில், சஜித் பிரேமதாஸ தலைமையில் ஒரு குழுவும் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் ஒரு குழுவும் தனித்தனியாக போட்டியிட தயாராகி வருகின்றன. இவையும் தனித்தனியாக வேட்பு மனுக்களைத் தயாரித்து வருவதோடு இறுதி நேரத்தில் மாற்றங்கள் இடம்பெறலாம் என்பதால், இறுதி கட்டத்திலேயே வேட்பு மனுக்களை கையளிக்க திட்டமிட்டுள்ளதாகவும் அறிய வருகிறது. 

தமிழ் முற்போக்கு கூட்டணி, முஸ்லிம் காங்கிரஸ், மக்கள் காங்கிரஸ், ஹெல உருமய உட்பட பல கட்சிகள் சஜித் பிரேமதாஸ தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி கூட்டணியில் இணைந்து போட்டியிட திட்டமிடப்பட்டுள்ளன. 

வடக்கு, கிழக்கில் பல தமிழ் கட்சிகள் போட்டியிட தயாராகி வருவதோடு தமிழ் தேசிய கூட்டமைப்புடன் இணைந்து செயற்பட்ட சில கட்சிகள் இம்முறை தனியாக போட்டியிடத் தயாராகியுள்ளன. 

சி.வி விக்னேஷ்வரன் தலைமையில் தமிழ் மக்கள் தேசிய கூட்டணியும் இம்முறை தனியாக போட்டியிடுவதுடன் இதனுடன் சுரேஷ் பிரேமச்சந்திரன், ஸ்ரீகாந்தா, அனந்தி சசிதரன் ஆகியோரின் கட்சிகளும் இணைந்து போட்டியிட உள்ளன. 

கஜேந்திரன் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ் தேசிய மக்கள் முன்னணியும் தனியாக களமிறங்க இருக்கும் அதேவேளை, அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையிலான குழு ஈபிடிபியின் கீழ் வடக்கு, கிழக்கில் போட்டியிட இருப்பதாக அறிவித்துள்ளது. 

ஜே.வி.பியும் 22 மாவட்டங்களிலும் வேட்பு மனுக்களை தாக்கல் செய்யவுள்ளதாக அறிவித்துள்ளது.

எம்.ஏ.எம்.நிலாம், ஷம்ஸ் பாஹிம்

No comments:

Post a Comment