கட்சியின் பின்னால் மக்களை அழைத்துச் சென்றதனாலேயே அம்பாறை மாவட்ட மக்கள் இழி நிலையையும் அவலத்தையும் சந்தித்தனர் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பி.எச்.பியசேன தெரிவித்தார்.
அக்கரைப்பற்றில் அமைந்துள்ள பொதுஜன பெரமுனவின் கட்சி அலுவலகத்தில் ஞாயிற்றுக்கிழமை (02) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திபொன்றின் போதே இவ்வாறு கூறினார்.
அவர் தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில், அம்பாறை மாவட்டத்தில் மக்கள் நிம்மதியாகவும் ஒற்றுமையாகவும் வாழ்வதற்கு தடையாகவுள்ளவர்கள் தமிழ்த் தேசிய கூட்டமைப்பும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸுமே.
கடந்த காலத்தில் நல்லாட்சி அரசுக்கு முட்டுக்கொடுத்த இவர்கள் மக்களுக்கு எதனையும் பெற்றுக் கொடுக்கவில்லை. மாறாக தாங்கள் பெறவேண்டியவற்றை தாராளமாக பெற்றுக் கொண்டனர் என்றார்.
அரசுக்கு ஒரு முகத்தையும் மக்களுக்கு இன்னுமொரு முகத்தையும் காட்டி தங்களுக்கு கிடைக்க வேண்டியவற்றை பெற்றுக் கொண்டு மக்களை நடுத் தெருவில் விட்ட அரசியல் தலைமைகளே இந்த அரசியல் தலைமைகள்.
தமிழ்த் தேசிய கூட்டமைப்பு மிக நீண்ட காலமாக தமிழ் மக்களின் வாழ்வை சிதைத்து சீரழித்து சின்னாபின்னமாக்கி மக்களை அவல நிலைக்கு கொண்டு சென்றுள்ளனர். இருந்தாலும் அவர்கள் இன்னும் அடங்கவில்லை.
தாங்கள் பதவியை பிடித்து சிம்மாசனத்தில் அமர வேண்டும் என்பதற்காக மக்களிடம் எவற்றையெல்லாம் கூறி இன்னும் தமிழர்கள் வாழ்வை சிதறடிக்க நினைக்கின்றனர் என்றார்.
இதேநேரம் எமது ஜனாதிபதி கோட்டாபய எமது நாட்டை ஆசியாவின் ஆச்சரியமிக்க நாடாக மாற்றும் பயணத்தில் இன்று கிராமங்களையும் கட்டி இழுத்துச் செல்ல திட்டமிட்டுள்ளார்.
இதற்கமைவாக பல்வேறு அபிவிருத்தி பணிகளை கிராமங்களுக்கு வழங்கியுள்ளதுடன் கல்வித்தரத்தில் குறைந்த சித்தியினை பெற்றுள்ள ஒரு இலட்சம் இளைஞர் யுவதிகளுக்கும் நேரடியாக அரசின் கண்காணிப்பில் தொழில் வாய்ப்பை வழங்க திட்டமிட்டுள்ளார். ஆகவே இந்த சந்தர்ப்பத்தை நாம் சரியாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்றார்.
வாச்சிக்குடா விஷேட நிருபர்
No comments:
Post a Comment