நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் சிறுபான்மை சமூகத்தின் பேரம் பேசும் சக்தியை இல்லாமல் செய்வதற்காக சிறுபான்மை சமூகத்திலிருந்து முகவர்கள் நியமனம் செய்யப்பட்டு செயல்பட்டு வருகின்றனர். குறிப்பாக முஸ்லிம் சமூகத்தின் பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தை இல்லாமல் செய்வதற்கு முஸ்லிம் அரசியல் தரகர்கள் நியமனம் செய்யப்பட்டு தற்போது முஸ்லிம் பிரதேசங்களில் சமூகத்திற்கு எதிரான செயல்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இந்த விடயத்தில் முஸ்லிம் அரசியல் தலைவர்கள் மிகவும் அவதானமாக செயல்பட்டு ஒற்றுமைப்பட்ட செயற்பாடுகளை முன்வைத்து நமது சமூகத்தின் பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தை பாதுகாக்கும் செயல்பாடுகளை முன்னெடுக்க வேண்டும் என முன்னாள் கிழக்கு மாகாண அமைச்சரும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் அரசியல் அதி உயர்பீட உறுப்பினருமான எம்.எஸ். உதுமாலெப்பை தெரிவித்தார்.
ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் அட்டாளைச்சேனை மத்திய குழுவின் தலைவர் எஸ்.எல். அழிம் தலைமையில் பீச் ஹோட்டலில் நடைபெற்ற சமகால அரசியல் தொடர்பான அட்டாளைச்சேனை மத்திய குழுக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றியபோதே அவர் அவ்வாறு தெரிவித்தார். இக்கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எல்.எம்.நஸீர் உட்பட கட்சியின் முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டனர்.
தொடர்ந்தும் உதுமாலெப்பை உரையாற்றுகையில் வட - கிழக்கு மாகாணங்களில் முஸ்லிம் மக்களின் அதிகப்படியான ஆதரவைப் பெற்றுள்ள சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸூம், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியும் முதலில் சமூக நலன்சார் முன்னிட்டு தங்களின் ஒற்றுமையினைப் பலப்படுத்துவதன் ஊடாகவே நமது பாராளுமன்ற பிரதிநிதித்துவங்களை பாதுகாப்பதுடன், அதிகரிக்கவும் வாய்ப்புகள் உள்ளன.
இந்த நிலைமையில் முஸ்லிம் அரசியல் தலைமைகள் மிகவும் நிதானமாக செயல்பட்டு தீர்மானங்களை மேற்கொள்ள வேண்டுமெனவும், அட்டாளைச்சேனைப் பிரதேச நிலைமை கருதி நடைபெறவுள்ள பொதுத்தேர்தலில் போட்டியிடுவதற்கு ஒரு வேட்பாளருக்கு இடம் தரவேண்டும் என்ற கோரிக்கையினை நமது கட்சியின் உயர்பீட உறுப்பினர்கள், முக்கியஸ்தர்கள் கட்சியின் தலைமையிடம் கோரிக்கை விடுப்போம். அதற்கான செயற்படுகளை மேற்கொள்ளுங்கள்.
அதனை விட்டுவிட்டு கட்சியின் அடிமட்ட பேராளிகள் மத்தியில் பிரதேச வாத உணர்வுகளை ஊட்டி கட்சிக்கு எதிரான செயற்பாடுகள் முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள் தவிர்க்கப்பட வேண்டும். நாம் இந்த விடயத்தில் மிகவும் நிதானமாக செயல்பட வேண்டும். இலங்கை முஸ்லிம்கள் அரசியல் வரலாற்றில் ஒரு போதும் இல்லாத ஒரு நிலமை தற்போது உருவாகியுள்ளது.
ஒற்றுமையாக செயற்பட்டு எமது அரசியல் பலத்தை எதிர்வரும் பொதுத் தேர்தலில் நிருபிப்பதன் ஊடாகவே எமது சமூகத்தின் எதிர்காலம் சிறப்பாக அமைய வாய்ப்பு கிடைக்கும். நாம் பிரிந்து விடாமல் ஒற்றுமையாக செயல்படுவதில் மாத்திரம் தான் நமது சமூகத்தின் விடயங்களையும், நமக்கான விடயங்களையும், பெறலாம் என்பதனை கட்சி தொண்டர்கள் மனதில் வைத்து செயல்பட வேண்டும்.
சிறிலங்கா முஸ்லிம் காங்கரஸின் மூத்த தலைவர்கள் பெரும் தலைவர் எம்.எச்.எம். அஸ்ரப் அவர்களுடன் இணைந்து கட்சியை வளர்த்தவர்கள் பலர் இது வரை பாராளுமன்றம் செல்ல முடியாத நிலைமையில் நமது பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எல்.எம். நஸீர் தேசிய பட்டியல் ஊடாக பாராளுமன்றம் அனுப்பிய கட்சியின் தலைமையையும் கட்சியையும் நாம் மறந்து விட முயாது என்பதனை கட்சித் தொண்டர்கள் மனதில் வைத்து செயல்பட வேண்டும்.
கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம் சமூகத்தின் பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தை இல்லாமல் செயற்வதற்காக பாரிய சதியினை பேரினவாதிகள் மேற்கொண்டு வருகின்றனர். அதற்காக கிழக்கு மாகாண முஸ்லிம் பிரதேசங்களில் முகவர்கள் நியமிக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றனர். இந்த சூழ் நிலையில் நமக்குள் நாம் பிரிந்து செயல்பட முற்படுவதால் நமது சமூத்திற்கு எதிரானவர்களுக்கு சந்தர்ப்பம் வழங்குவதாக அமையும் என்பதனை நாம் மறந்து விடக்கூடாது.
அம்பாறை மாவட்டத்தில் எதிர்வரும் பொதுத்தேர்தலில் போட்டியிட்டு தோல்வி அடைவதற்கு சில கட்சிகள் வேட்பாளர்களைத் தேடி அழைகின்றனர். அவர்களுடன் இணைந்து தோல்வி அடைய வேண்டிய அவசியம் நமக்கு இல்லை. எனவே நமது கட்சியினரை தோல்வி அடையும் வேட்பாளர்களாக மாற்றுவதற்காக பல மறைமுக செயற்பாடுகளை சிலர் மேற்கொண்டு வருகின்றனர். எனவே இந்த விடயத்தில் நாம் நிதானமாக செயல்பட வேண்டும்.
அம்பாறை மாவட்டத்தில் மொட்டுச்சின்னத்தில் போட்டியிடும் எந்த ஒரு முஸ்லிம் தமிழ் வேட்பாளர்களும் வெற்றி பெருவதற்கான வாய்ப்புகள் இல்லை. அம்பாறை மாவட்டத்தில் மொட்டுச்சின்னத்தில் போட்டியிடும் மூன்று பெரும்பான்மை வேட்பாளர்கள் வெற்றி பெருவார்கள் என்பது யதார்த்தமாகும். சென்ற பொதுத்தேர்தலில் முடிவுகளும் மூன்று பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த வேட்பாளர்கள் பாராளுமன்றம செல்லக் கூடிய தேர்தல் முடிவுகள் கிடைத்தன. அதே நிலமைதான் நடைபெறவுள்ள பொதுத்தேர்தலிலு;ம் இடம் பெறும்.
எனவே கிழக்கு மாகாண முஸ்லிம்களின் பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தை பாதுகாப்பதற்கும் அதிகரிப்பதற்கும் நமது முஸ்லிம் அரசியல் தலைமைகள் ஒற்றுமைப்பட வேண்டிய காலகட்டத்தில் உள்ளோம். வடகிழக்கு மாகாணத்தில் முஸ்லிம் தலைமைகள் பிரிந்து செயல்பட்டால் நமது சமூகத்தின் பாராளுமன்ற பிரதிநிதித்துவங்கள் இல்லாமல் போகக்கூடிய அபாயம் உள்ளது.
தேசிய காங்கிரஸிலிருந்து வெளியேறி, நாங்கள் சமூகத்தின் நலனுக்காகவே முஸ்லிம் காங்கிரஸ் கட்சியில் இணைந்து கொண்டோம் என்பதனை கட்சிப் போராளிகள் எல்லோரும் உணர்ந்து கொள்ள வேண்டும். பட்டம், பதவி, பணத்திற்காக கட்சி மாறுவது என்றால் இன்றும் மாறலாம்.
அவைகளைத் புறம்தள்ளிவிட்டுத்தான் நமது சமூக நலனுக்காக முஸ்லிம் காங்கிரஸ் கட்சியில் இணைந்து முஸ்லிம் காங்கிரஸ் கட்சியினையும், தலைமைத்துவத்தினையும் பலப்படுத்தியுள்ளோம். எங்களின் இணைவின் பின் முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் வளர்ச்சி அட்டாளைச்சேனை, இறக்காமம், பொத்துவில் போன்ற பிரதேசங்களில் அதிகரித்ததனை நடைபெற்று முடிந்த ஜனாதிபதி தேர்தலில் வாக்களிக்கப்பட்ட யதார்த்தத்தினை எல்லோரும் அறிவீர்கள்.
எது எப்படி இருந்தாலும் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் வடக்கு, கிழக்கு சிறுபான்மை மக்கள் முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் றஊப் ஹக்கீம், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் றிசாட் பதியுதீன், தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இராசம்பந்தன் ஆகியோரின் ஆணைப்படி சிறுபான்மை மக்கள் வாக்களித்துள்ளனர். ஆனால் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமை விட்ட பாரிய வரலாற்று தவறினால் ஐக்கிய தேசியக் கட்சியின் மீது நம்பிக்கை வைத்து வாக்களித்த சிறுபான்மை சமூகத்தினர் ஏமாற்றப்பட்டுள்ள நிலைமை உருவாகி உள்ளது.
எனவே, ஜனாதிபதி தேர்தலில் விட்ட வரலாற்றுத் தவறைப் போல் நடைபெறவுள்ள பொதுத் தேர்தலிலும் நம்பிக்கை துரோகம் இழைக்கும் செயல்பாடுகள் நடைபெறுமா என்பதனை முன்கூட்டியே சிறுபான்மை கட்சிகளின் தலைமைகள் ஆராய்ந்து நமது அரசியல் பாதையினை நாம் மாற்ற வேண்டிய நிலைமை குறித்து ஆராய வேண்டியுள்ளது. ஐக்கிய தேசியக் கட்சியினால் நாம் தொடர்ந்த ஏமாற்றமடைய முடியாது. எனவே, இந்த நிலைமை குறித்து கட்சியின் தலைவரிடம் நாம் எடுத்துக் கூறவேண்டும் எனத் தெரிவித்தார்.
No comments:
Post a Comment