தைவான் நாட்டின் இராணுவத் தளபதி ஹெலிகொப்டர் விபத்தில் பலி - News View

About Us

About Us

Breaking

Thursday, January 2, 2020

தைவான் நாட்டின் இராணுவத் தளபதி ஹெலிகொப்டர் விபத்தில் பலி

தைவானில் ஹெலிகொப்டர் விபத்தில் அந்த நாட்டின் இராணுவ தளபதி ஷென் யி மிங் உட்பட 8 பேர் பலியாகினர்.

தைவான் நாட்டின் தலைநகர் தைபேயில் உள்ள சாங்சன் விமானப்படை தளத்தில் இருந்து நேற்று உள்ளூர் நேரப்படி காலை 8.07 மணிக்கு ‘யூஎச் 60 எம்’ ரக ஹெலிகொப்டர் புறப்பட்டு சென்றது.

ஹெலிகொப்டரில் அந்த நாட்டின் இராணுவ தளபதி ஷென் யி மிங் (வயது 62) உடன் மூத்த இராணுவ அதிகாரிகள் 13 பேர் பயணம் செய்தனர். அவர்கள் நாட்டின் வடகிழக்கு பகுதியில் டோங்காவ் தீவில் உள்ள இராணுவ தளத்துக்கு சென்று கொண்டிருந்தனர்.

ஹெலிகொப்டர் புறப்பட்டு சென்ற 13 நிமிடங்களுக்கு பிறகு கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை இழந்தது. இதையடுத்து இராணுவ தளபதியுடன் மாயமான ஹெலிகொப்டரை தேடும் பணிகள் முடுக்கிவிடப்பட்டன.

விமானப்படைக்கு சொந்தமான 20 இக்கும் மேற்பட்ட ஹெலிகொப்டர்கள் மற்றும் சிறிய விமானங்கள் தேடுதல் வேட்டையில் ஈடுபடுத்தப்பட்டன. இதில் நியூ தைபே சிட்டி நகருக்கு அருகே உள்ள மலைப்பாங்கான பகுதியில் ஹெலிகொப்டர் விழுந்து நொறுங்கி கிடப்பது கண்டுப்பிடிக்கப்பட்டது.
இந்த கோர விபத்தில் இராணுவ தளபதி ஷென் யி மிங் உள்ட்ட 8 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். 5 பேர் மட்டும் காயங்களுடன் உயிர் தப்பினர். அவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர். 

இந்த விபத்து குறித்து விமானப்படை மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘‘ஹெலிகொப்டர் நடுவானில் பறந்தபோது மோசமான வானிலை காரணமாக தொடர்ந்து பயணிக்க முடியாத சூழல் ஏற்பட்டது. எனவே விமானி ஹெலிகொப்டரை அவசரமாக தரையிறக்க முயற்சித்தார். அப்போது சற்றும் எதிர்பாராத விதமாக ஹெலிகொப்டர் தரையில் விழுந்து நொறுங்கியது’’ என்றார்.

தைவான் நாடு ஜனாதிபதித் தேர்தலுக்கு தயாராகி வரும் நிலையில் ஹெலிகொப்டர் விபத்தில் அந்த நாட்டின் இராணுவத் தளபதி உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஹெலிகொப்டர் விபத்தை தொடர்ந்து அந்த நாட்டின் ஜனாதிபதி சாய் இங் வென் நேற்று தனது தேர்தல் பிரசாரத்தை ரத்து செய்தார். விபத்தில் உயிரிழந்த இராணுவ தளபதி ஷென் யி மிங் மற்றும் இராணுவ அதிகாரிகளின் குடும்பங்களுக்கு அவர் ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பேஸ்புக் பதிவில் ‘‘இராணுவ தளபதி ஷென் யி மிங் ஒரு சிறந்த, திறமையான தளபதியாக இருந்தார், அதேபோல் அனைவராலும் விரும்பப்பட்ட மற்றும் மதிக்கப்பட்ட ஒரு அதிகாரியாக இருந்தார். அவரது இறப்பு நமக்கு மிகுந்த துயரத்தை அளித்து இருக்கிறது’’ என தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment