நாடுபூராவும் நிறுத்தப்பட்டு மற்றும் தடைப்பட்டிருந்த அனைத்து அபிவிருத்தி திட்டங்களையும் மீண்டும் அரம்பிப்பதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.
தங்காலை விகாரையில் இடம்பெற்ற சமய நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே பிரதமர் இவ்வாறு தெரிவித்தார்.
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இங்குதொடர்ந்தும் உரையாற்றும் போது தெரிவித்ததாவது கடந்த அரசாங்கத்தின் காலத்தில் நிறுத்தப்பட்ட சகல அபிவிருத்தி வேலைகளும் மீண்டும் ஆரம்பிக்கப்படும்.
கைத்தொழில் முதலீடுகளுக்காக பொருத்தமான இடங்களைத் தெரிவு செய்வதில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது. இவற்றில் முதலீடு செய்வதற்காக முதலீட்டாளர்களுக்கு அழைப்பு விடுக்கிறோம். இது தொடர்பாக தற்பொழுது வெளிநாட்டு தூதுவர்கள் மற்றும் விசேட பிரதிநிதிகளுடன் கலந்துரையாடப்படுகின்றன.
ஹம்பாந்தோட்டை கைத்தொழில் பேட்டையின் செயற்பாடுகள் மீண்டும் குறுகிய காலத்தினுள் ஆரம்பிக்கப்படும். ஹம்பாந்தோட்டை சர்வதேச துறைமுகத்தை விற்பனை செய்து மத்தலை சர்வதேச விமான நிலையத்தையும் விற்பனை செய்ய கடந்த அரசாங்கம் முயற்சி செய்தது. இந்நிலையிலே நாம் மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றினோம்.
எமது கொள்கை நாட்டின் தேசிய சொத்துக்களையும் வளங்களையும் விற்பனை செய்வதல்ல. ஹம்பாந்தோட்டையை கட்டியெழுப்ப எமது ஆட்சியில் ஒதுக்கியிருந்த காணிகளை முற்று முழுதாக அழித்து வேறு தேவைகளுக்காக பயன்படுத்தியுள்ளனர்.
நாம் இவற்றை மீண்டும் ஒழுங்குபடுத்தி சரி செய்ய வேண்டும். வன ஜீவராசிகள் திணைக்களத்திற்கு சொந்தமான காணிகளில் வீடுகளை நிர்மாணித்துள்ளனர். இதனால் இங்குள்ளோருக்கு இங்கு வாழ முடியாதுள்ளது.
இவ்வாறு ஒழுங்கும் திட்டமுமின்றி கடந்த அரசாங்கம் மேற்கொண்ட வேலைத் திட்டங்களை நாம் மீண்டும் ஒழுங்குபடுத்தவதற்கு நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் பிரதமர் தெரிவித்தார்.
ஹம்பாந்தோட்டை நிருபர்
No comments:
Post a Comment