பல்வேறு சவால்கள் மற்றும் பிரச்சினைகளை எதிர்கொண்டு நான்கு வருட குறுகிய காலத்தில் நாட்டில் இந்தளவு பெரும் அபிவிருத்தியை முன்னெடுத்த அரசாங்கம் இதற்கு முன் இருந்ததில்லையென ஐ.தே.க. பொதுச் செயலாளர் கல்வியமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.
நாட்டை முன்னெடுத்துச் செல்ல முடியாத நிலையில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டதன் கரணமாகவே கடந்த அரசாங்கம் குறித்த காலத்துக்கு இரண்டு வருடங்களுக்கு முன்பு ஆட்சியைக் கலைத்ததாக குறிப்பிட்ட அமைச்சர், 2015 இல் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பொறுப்பை பாரமெடுத்து தேசிய அரசாங்கப் பிரச்சினை, நிறைவேற்றுப் பிரச்சினை, ஊடகங்கள் மற்றும் இன்னோரன்ன பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொண்டும் பெருமளவு செயற்திட்டங்களை நிறைவேற்றியுள்ளார் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
நேற்று முன்தினம் ஐ.தே.க. சார்பில் அரசாங்கத்தின் தொடர் வேலைத் திட்டங்கள் சம்பந்தமாக அமைச்சர் அறிக்கையொன்றை வெளியிட்டு இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரிவித்துள்ள அமைச்சர் அரசாங்கம் ஆட்சிப் பொறுப்பேற்று சுயாதீன ஆணைக்குழுக்களை அமைத்து மட்டுப்படுத்தாத ஊடக சுதந்திரத்தையும் வழங்கி அரச ஊழியர்களின் சம்பளத்தையும் 106 வீதமாக அதிகரித்தது.
அத்துடன் ஓய்வூதியக் கொடுப்பனவையும் பெரிதளவு அதிகரித்தது. அவ்வாறு வெற்றிகரமான நடவடிக்கைகளை முன்னெடுக்கையில் அரசாங்கத்தின் அதிகாரம் கைநழுவியது. மீண்டும் ஆட்சிப்பொறுப்பை ஏற்று கடந்த ஆறு மாதங்களில் வரலாற்றில் எப்போதும் இல்லாதவாறு பெரும் திட்டங்களை முன்னெடுக்க முடிந்துள்ளது.
இதற்கிணங்க அண்மைய பாடசாலை சிறந்த பாடசாலை வேலைத்திட்டத்தின் கீழ் 18 ஆயிரம் வேலைத் திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன. அதன்கீழ் 1500 - 2000 பாடசாலைக் கட்டிடங்களையும் நிர்மாணிக்க முடிந்துள்ளது. எதிர்வரும் வாரத்தில் மேலும் 500 படசாலைக் கட்டிடங்களைத் திறக்கும் வகையில் நிர்மாணப்பணிகள் நிறைவு செய்யப்பட்டுள்ளன.
அதேவேளை, தேசிய பாடசாலைகளில் க.பொ.த. உயர் தர மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் இந்த மாதத்தில் 97 ஆயிரம் மடிக்கணனிகள் வழங்கப்படவுள்ளன. அதனையடுத்து உயர் தரம் கற்கும் அனைத்து மாணவர்களுக்கும் மடி கணனிகள் வழங்கப்படவுள்ளன.
அனைத்துப் பாடசாலை மாணவர்களுக்குமான ‘சுரக்ஷா’ காப்புறுதித் திட்டத்தை நடைமுறைப்படுத்தியுள்ளதுடன் உயர் தரத்தில் புதிய பாடத் திட்டங்களையும் இணைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்கிணங்க கல்வித்துறையில் மாற்றத்தையும் புரட்சியையும் மேற்கொள்ள முடிந்துள்ளது.
நான் கல்வியமைச்சராகப் பதவியேற்ற போது 68 வீத பாடசாலைக்களுக்கு மட்டுமே மின்சார வசதி இருந்தது. அதை எம்மால் 98 வீதமாக அதிகரிக்க முடிந்தது. பாடசாலைகளுக்கான அனைத்துப் பொது வசதிகளையும் வழங்க முடிந்துள்ளது.
விஞ்ஞான பீடங்களை பிரதமரின் வழிகாட்டலுக்கிணங்க ஆரம்பிக்க முடிந்துள்ளது. 20 வது விஞ்ஞான பீடம் 3 ஆயிரம் மில்லியன் ரூபா செலவில் குளியாபிட்டியில் நிர்மாணிக்கப்பட்டு வருகிறது.
ஐந்தாமாண்டு புலமைப் பரிசில் தொகையை 750 ரூபாவாக அதிகரிப்பதற்கு அமைச்சரவைப் பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை மாற்றுத்திறனாளிகளான சிறுவர்களுக்கு வழங்கப்படும் கொடுப்பனவை அதிகரிக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. கடந்த அரசாங்க காலத்தில் நிர்மாணிக்கப்பட்ட அதிவேக நெடுஞ்சாலைகளை விட அதிகளவு நெடுஞ்சாலைகளை நிர்மாணிக்க முடிந்துள்ளதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
லோரன்ஸ் செல்வநாயகம்
No comments:
Post a Comment