முஸ்லிம்களின் ஊடாக முஸ்லிம்களை கொலை செய்வதுதான் ஐ.எஸ் பயங்கரவாதிகளின் செயல். அவர்கள் முஸ்லிம்கள் இல்லை.
இந்த மோசமான பயங்கரவாதிகளை இலங்கையில் இருந்து முற்றாக ஒழித்துக்கட்டுவதற்கு நாம் பூரண ஆதரவு வழங்குவோம் என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.
சிரச தொலைக்காட்சியில் புதன்கிழமை (30) இரவு இடம்பெற்ற ‘சட்டன’ நிகழ்ச்சியில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே இவ்வாறு கூறினார்.
அவர் மேலும் கூறுகையில் நாம் எதிர்பார்த்திராத தருணத்தில் மிகவும் மோசமான தாக்குதல் ஒன்று இடம்பெற்று அப்பாவி மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். இந்த தாக்குதலை வன்மையாக கண்டிப்பதோடு உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆறுதலையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
புலிகள் தற்கொலைத் தாக்குதல் நடத்துவதற்கு 12 வருடங்கள் சென்றன. ஆனால், இந்தப் பயங்கரவாதிகள் எடுத்த எடுப்பில் அதைச் செய்துள்ளனர். இறுதி ஆயுதமான தற்கொலையை ஆரம்பத்திலேயே செய்துள்ளனர்.
இந்த பயங்கரவாதம் உடனடியாக தோற்கடிக்கப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டில் முஸ்லிம்கள் உள்ளனர். இதனால்தான் அவர்கள் சாய்ந்தமருதிலுள்ள முஸ்லிம்கள் இந்தப் பயங்கரவாதிகளை காட்டிக்கொடுத்தனர்.
அந்தச் சம்பவத்தில் பயங்கரவாதிகள் குடும்பத்தோடு தற்கொலை செய்துள்ளனர். இப்படிச் செய்யமுடியும் என்றால், அவர்கள் எந்தளவு மூளைச் சலவை செய்யப்பட்டிருப்பார்கள் என்று உணர முடிகின்றது.
ஸஹ்ரான் தொடர்பில் உலமா சபை ஏற்கனவே முறைப்பாடு செய்திருந்தது. அந்த முறைப்பாட்டுக்கு அமைவாக புலனாய்வுப் பிரிவு செயற்பட்டபோதிலும் இந்த அளவுக்கு அவர் செல்வார் என்று புலனாய்வு பிரிவினர் எதிர்பார்த்திருக்கவில்லை.
முஸ்லிம்களை வைத்து முஸ்லிம்களை கொலை செய்வதுதான் ஐ.எஸ். பயங்கரவாதிகளின் செயல். அவர்கள் முஸ்லிம்கள் இல்லை. இந்த மோசமான பயங்கரவாதிகளை இலங்கையில் இருந்து முற்றாக ஒழித்துக்கட்டுவதற்கு நாம் முழு ஆதரவு வழங்குவோம் என்றார்.
No comments:
Post a Comment