இலங்கை தொடர்பான பிரேரணையை நாட்டுக்குச் சாதகமாக அமையும் வகையில் மாற்றுவதற்குப் பேச்சு நடத்தி வருகிறோம். வெளிநாட்டு நீதிபதிகளை அனுமதிப்பது தொடர்பில் எந்த வித உடன்பாடும் கிடையாது என சபை முதல்வர் அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
இலங்கை தொடர்பில் ஐ.நா மனித உரிமை பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் பிரகாரம் தொழில்நுட்ப உதவிகளே பெறப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார். ஜெனீவாவில் இலங்கை தொடர்பான பிரேரணை தொடர்பில் எதிர்க் கட்சிப் பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜெயசேகர எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த போதே அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார்.
தினப்பணிகளைத் தொடர்ந்து விசேட கேள்வியொன்றை முன்வைத்த தயாசிறி ஜெயசேகர எம்.பி., ஜெனிவா மனித உரிமைகள் பேரவையில் அன்று இணங்கிய விடயங்களுக்கு மேலதிகமாக மேலும் யோசனையொன்றை அரசாங்கம் சமர்பிக்க எதிர்பார்க்கின்றதா? அதில் அடங்கிய விடயங்கள் தொடர்பாக அமைச்சரவையிலோ அல்லது அரசாங்க மட்டத்திலோ கலந்துரையாடிய விடயங்கள் தொடர்பாக பாராளுமன்றத்திற்கு அறிவுறுத்த நடவடிக்கையெடுக்கப்படுமா?
கடந்த காலங்களில் அமெரிக்கப் பிரேரணைக்கு அரசாங்கம் ஒத்துழைப்பு வழங்கும் வகையில் முன்னெடுத்த செயற்பாடுகளால் இறுதியில் இலங்கைக்கு சர்வதேச நீதிபதிகளை அழைத்து வந்து விசாரணை நடத்தும் நிலைமை ஏற்பட்டுள்ளது. நாங்கள் இங்கு நீதித்துறை மீது நம்பிக்கை வைத்துள்ள தற்போதைய சூழலில் சர்வதேச நீதிபதிகளை இங்கு அழைத்து வருவதற்கு எதிர்பார்க்கப்படுகின்றதா? என வினவினார்.
இதன் போது பதிலளித்த அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல, எமது நீதித்துறை மீது உங்களுக்கு நம்பிக்கை இருக்கின்றதா என்று வினவினார். நீதித்துறை மீது நூறு வீதம் எங்களுக்கு நம்பிக்கை இருக்கின்றது. என தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.
தொடர்ந்து கருத்து தெரிவித்த அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல, ஒக்டோபர் 26ஆம் திகதி சட்டபூர்வமான அரசாங்கம் கொள்ளையடிக்கப்பட்டது. பின்னர் நாங்கள் நீதிமன்றத்திற்குச் சென்றோம். இவர்கள் நீதிமன்றத்தை விமர்சித்தார்கள். இப்போது நீதிமன்றத்தை வரவேற்கின்றார்கள். என்றார். இதன் போது குறுக்கீடு செய்த தயாசிறி ஜயசேகர எம்.பி,
இந்த அரசாங்கத்தை நாங்கள் கொள்ளையடிக்கவில்லை. அரசாங்கம் தவறான பாதையில் சென்றது. அதனை சரியான பாதைக்குக் கொண்டு வரவே ஜனாதிபதி இந்த மாற்றத்தைச் செய்தார். உயர் நீதிமன்ற நீதியரசர்கள் தொடர்பாகவும் மற்றைய நீதிபதிகள் தொடர்பிலும் எமக்கு முழு நம்பிக்கை இருக்கின்றன. நீதிமன்ற முறைமை தொடர்பாக எங்களுக்கு நம்பிக்கை இருக்கின்றது.
2015ஆம் ஆண்டில் மங்கள சமரவீர வெளிவிவகார அமைச்சராக இருந்த போது வெளிநாட்டு நீதிபதிகளை அழைத்து வந்து எமது இராணுவத்தினரை சர்வதேச நீதிமன்றத்திற்குக் கொண்டு செல்வதற்கான வேலைத்திட்டங்கள் தயாரிக்கப்பட்டன. அவ்வாறானால் எமது நீதிமன்றங்கள் தொடர்பாக அரசாங்கம் நம்பிக்கை கொண்டிருக்கவில்லையா? என்றார்.
இதற்குப் பதிலளித்த அமைச்சர் கிரியெல்ல, கடந்த ஆட்சி காலத்தில் இவர்கள் பிரதம நீதியரசரை பாராளுமன்றத்தில் சட்டமூலத்தை கொண்டு வந்து 24 மணி நேரத்திற்குள் பதவி விலக்கினார்கள். இவ்வாறாக செய்தவர்கள் சர்வதேசத்திற்கு ஏசுகின்றார்கள். இந்த நிலைமை 2015ஆம் ஆண்டு மாற்றப்பட்டது.
2012 , 2013 மற்றும் 2014ஆம் ஆண்டுகளில் இலங்கைக்கு எதிராக ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் பிரேரணைகள் நிறைவேற்றப்பட்டிருந்தன. 2015இல் இவர்கள் வெற்றி பெற்றிருந்தால் இலங்கை மீது பொருளாதாரத் தடை விதிக்கப்பட்டிருக்கும். ஆனால், எமது அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பின்னர் அவற்றை சமநிலைப்படுத்தியதோடு சர்வதேசத்துடன் மிகவும் நெருக்கமாக பணியாற்றி வருகின்றோம்.
எமது இராணுவத்தினர் தொடர்பாகவோ மற்றையவர்கள் தொடர்பாகவோ நடவடிக்கையெடுக்க சர்வதேச நீதிபதிகளுக்கு நாங்கள் இடமளிக்கப் போவதில்லை. சரத் பொன்சேகாவை இழுத்துச் சென்று சிறையில் அடைத்தவர்கள் தான் இன்று இராணுவம் பற்றி பேசுகிறார்கள்.
இதன் போது மீண்டும் குறுக்கீடு செய்த தயாசிறி ஜயசேகர எம்.பி, 2015ஆம் ஆண்டில் ஜெனிவா மனித உரிமைகள் பேரவையில் அமெரிக்காவுடன் இணைந்து மங்கள சமரவீர யோசனையை முன்வைத்தார்.
இங்குள்ள நீதிமன்றத்தினூடாக இராணுவத்தினர் தொடர்பான பிரச்சினைகளைத் தீர்த்துக் கொள்ளக் கூடிய நிலைமை உள்ளது. ஆனால் சர்வதேச நீதிபதிகளை இலங்கைக்கு அழைத்து வந்து விசாரணைகளை நடத்தி சர்வதேச நீதிமன்றத்தில் தீர்ப்பளிக்கவே நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன.
இதன்படி இந்த யோசனைக்கு ஒத்துழைப்பு வழங்கும் வகையிலான இன்றைய யோசனை முன்வைக்கப்படவுள்ளது. இல்லையென்றால் வேறு யோசனையா சமர்பிக்கப்படவுள்ளது. இதற்கு அமைச்சரவையின் அனுமதி பெறப்பட்டதா என்றார்.
ஷம்ஸ் பாஹிம்,மகேஸ்வரன் பிரசாத்
No comments:
Post a Comment