கிழக்கு மாகாண மக்களின் பொருளாதாரத்தை மேம்படுத்த கிராமசக்தி மூலம் விரிவான செயற்திட்டம் - News View

About Us

About Us

Breaking

Friday, February 8, 2019

கிழக்கு மாகாண மக்களின் பொருளாதாரத்தை மேம்படுத்த கிராமசக்தி மூலம் விரிவான செயற்திட்டம்

கிழக்கு மாகாணத்தில் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களைச் சேர்ந்த மக்களின் வாழ்வாதார வழிகளை அபிவிருத்தி செய்து, அவர்களை பொருளாதார ரீதியாக வலுவூட்டுவதற்கான கிராம சக்தி மக்கள் இயக்கத்தின் கீழ் கடந்த வருடம் விரிவானதொரு நிகழ்ச்சித்திட்டம் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக மாகாண அரச அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

வறுமையை ஒழிப்பதற்காக ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் வழிகாட்டலில் ஜனாதிபதி அலுவலகத்தின் முக்கிய திட்டமாக நடைமுறைப்படுத்தப்படும் கிராம சக்தி மக்கள் இயக்கத்தின் கிழக்கு மாகாண செயற்குழுக் கூட்டம் மாகாண மக்கள் பிரதிநிதிகள் மற்றும் அரச அதிகாரிகளின் பங்குபற்றுதலுடன் இன்று (08) முற்பகல் மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது. இந்த நிகழ்விலேயே இது பற்றி தெரிவிக்கப்பட்டது.

வட மத்திய மாகாண ஆளுநர் சரத் ஏக்கநாயக்க தலைமையில் இடம்பெற்ற இந்த கலந்துரையாடலில் கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா உள்ளிட்ட மாகாண பிரிதிநிதிகளும் மட்டக்களப்பு, அம்பாறை மற்றும் திருகோணமலை மாவட்ட செயலாளர்கள் உள்ளிட்ட அரசாங்க அதிகாரிகளும் பாதுகாப்பு அதிகாரிகளும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.
கிராம சக்தி மக்கள் இயக்கம் கிழக்கு மாகாணத்தில் நடைமுறைப்படுத்தப்படும் விதம் பற்றியும் எதிர்கால திட்டங்கள் பற்றியும் இதன்போது கலந்துரையாடப்பட்டது. 2018ஆம் ஆண்டில் மட்டக்களப்பு மாவட்டத்தின் கிராம சக்தி சங்கங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிதி ஏற்பாடுகள் 42 மில்லியன் ரூபாவாகும் என்பதுடன், அம்பாறை மாவட்டத்திற்கு 66 மில்லியன் ரூபாவும் திருகோணமலை மாவட்டத்திற்கு 33 மில்லியன் ரூபாவும் வழங்கப்பட்டுள்ளது. 

மட்டக்களப்பு மாவட்டத்தில் வாழும் 526,576 மக்களில் 11.3 வீதமானவர்கள் வறுமையினால் பாதிக்கப்பட்டுள்ளதுடன், அம்பாறை மாவட்டத்தில் 649,402 மக்களில் 2.6 வீதமானவர்களும் திருகோணமலை மாவட்டத்தில் 379,541 மக்களில் 10 வீதமானவர்கள் வறுமையினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இம்மக்களின் வாழ்வாதார வழிகளை அபிவிருத்தி செய்வதற்காக கிராமசக்தி மக்கள் இயக்கத்தின் மூலம் பல்வேறு திட்டங்கள் தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதுடன், இந்நிகழ்ச்சித் திட்டங்களின் முன்னேற்றம் மற்றும் எதிர்கால திட்டங்கள் குறித்தும் இங்கு விரிவாக கலந்துரையாடப்பட்டன.

மேலும் தனியார் துறை நிறுவனங்கள் மற்றும் கிழக்கு மாகாண கிராம சக்தி சங்கங்களுக்கும் இடையிலான இரண்டு ஒப்பந்தங்கள் இந்த செயற்குழுக் கூட்டத்தின் போது கைச்சாத்திடப்பட்டன. நயினாதீவு கிராம சக்தி சங்கம் மற்றும் டொம்போ லங்கா தனியார் நிறுவனத்திற்கும் இடையில் கடற்தாவர ஏற்றுமதி தொடர்பான ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டதுடன், பொக்கரப்பு கிராமசக்தி சங்கம் மற்றும் ஹேலீஸ் தனியார் நிறுவனத்திற்கும் இடையில் முருங்கை இலை கொள்வனவு செய்வது தொடர்பான ஒப்பந்தம் ஒன்றும் கைச்சாத்திடப்பட்டது.
இதேநேரம் இன்றைய கிராம சக்தி மக்கள் இயக்கத்தின் செயற்பாடுகள் மட்டக்களப்பு மண்முனை சத்துருக்கொண்டான் கிராமத்தை மையப்படுத்தி இடம்பெற்றது. 461 குடும்பங்கள் வாழும் இக்கிராம மக்களின் வாழ்வாதார வழிகளை அபிவிருத்தி செய்வதற்காக கிராமசக்தி மூலம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள திட்டங்கள் குறித்தும் பிரச்சினைகள் குறித்தும் ஆராயப்பட்டதுடன், அவற்றுக்கான தீர்வுகளை வழங்குவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டது.

ஆடைக் கைத்தொழிற்துறையில் ஈடுபட்டுள்ள பெண்களுக்கு தலா 50,000 ரூபா பெறுமதியான 20 தையல் இயந்திரங்களும் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களுக்கான மீன்பிடி உபகரணங்கள் உள்ளிட்ட வாழ்வாதார அபிவிருத்திக்கு தேவையான உபகரண தொகுதிகளும் இதன்போது வழங்கி வைக்கப்பட்டது. அங்கவீனமுற்றவர்களுக்கு சக்கர நாற்காலிகளும் வழங்கி வைக்கப்பட்டது.

கிராம சக்தி மக்கள் இயக்கத்தின் மூலம் தற்போது செயற்திறன்மிக்க பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ள கிராமங்களின் எண்ணிக்கை 1,000 ஆகும். அவற்றில் 700 கிராமங்கள் சமூக நிர்வாக கிராமங்களாகும். 300 கிராமங்கள் உற்பத்தி சேவையை முன்னுரிமைப்படுத்திய கிராமங்களாக நடைமுறைப்படுத்தப்படுகின்றன. 2020ஆம் ஆண்டளவில் அக்கிராமங்களின் எண்ணிக்கையை 4,000 வரையில் அதிகரிக்குமாறு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன பணிப்புரை விடுத்துள்ளார்.

No comments:

Post a Comment